பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பிலிருக்கும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவரும், செயற்பாட்டுப் பணிப்பாளரும் புதிதாக இதுவரை நியமிக்கப்படாததால் அம்பாறை மற்றும் கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளின்போது பாதிப்புக்குள்ளான சொத்துக்களுக்கான நஷ்டஈடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின்போது மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமயவிவகார அமைச்சராகப் பதவிவகித்த டி. எம். சுவாமிநாதனின் உத்தரவின் கீழ் கண்டி, திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் குறைவான நஷ்டஈடுகளுக்குரிய சொத்துக்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நஷ்டஈடுகளை வழங்குவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவைப் பத்திரமும் தயார் செய்யப்பட்டது. இந் நிலையிலே தேசிய அரசாங்கம் பதவி இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது தேசிய அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் பதவியிலில்லை. இந்த அமைச்சுப் பெறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட 15 சொத்துக்களுக்கும், கண்டி, திகன வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட 173 சொத்துக்களுக்கும் நஷ்டஈடு வழங்கவுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயார் நிலையில் உள்ளதாகவும் புனர்வாழ்வு அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ். எம். பதூர்தீன் தெரிவித்தார்.
இந்நிலையில் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவரும் செயற்பாட்டுப் பணிப்பாளரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.