Top News

உலகை உலுக்கிய வீடியோவில் ரத்த காயங்களுடன் தோன்றிய சிறுவனின் சகோதரன் மரணம்


சிரியா நாட்டில் விமானப்படை தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் அமர்ந்திருந்த 5 வயது சிறுவனின் சகோதரன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ளது.

இந்த பகுதியை மீட்பதற்காக, மேற்கு பகுதியில் இருந்து அரசின் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் அலெப்போ நகரம் எப்போதுமே போர்க்களமாக காணப்படுகிறது.

இந்நிலையில், இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றபோது 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டான். அவனது பெயர் ஓம்ரான் தக்னீஷ்.

அவனது தலையில் ரத்தக் காயங்களுடன் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. அவனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமர வைத்தனர். அப்போது நடந்ததை அறியாத அந்த சிறுவன் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தினை கையால் துடைக்கும் வீடியோ காட்சி உலகம் முழுவதும் வாழும் மனிதநேயம் மிக்கவர்களை கதிகலங்க வைத்தது.

அதே கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஓம்ரான் தக்னீஷின் மூத்த சகோதரனான 10 வயது சிறுவன் அலி நேற்று சிகிச்சை பலியின்றி மரணம் அடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள கிழக்கு அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 15 ஆயிரம் குழந்தைகள் உள்பட 3 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் போர் கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post