Top News

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் NFGG விசேட சந்திப்பு!



(ஜுனைட்.எம்.பஹ்த் )

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடனான சந்திப்பு ஒன்றினை நல்லாட்சிக்கான
தேசிய முன்னணி(NFGG) மேற் கொண்டது. கடந்த 18.08.2016 அன்று பிற்பகல் 04.00 மணிக்கு
ஆணைக்குழுவின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் NFGGயின்
தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட்
உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது காத்தான்குடி மற்றும் மூதூர் உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் வட்டார முறை என்கின்ற புதிய தேர்தல் முறை மூலமாகவே நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்கின்ற பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்
கொண்டிருக்கின்றன. இதற்கென நியமிக்கப்பட்ட முன்னாள் காணி ஆணையாளர் நாயகம்
திரு. அசோக பீரிஸ் அவர்கள் தலைமையிலான ஆணைக்குழு இம்மாத இறுதிக்குள் தமது
அறிக்கையினைப் பூர்த்தி செய்து அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகளினதும் ஏனையோர்களினதும்
ஆலோசனைகளையும் முறையீடுகளையும் தெரியப்படுத்துமாறு இந்த ஆணைக்குழு ஏற்கனவே
கோரியிருந்தது. அந்த வவையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய
மாவட்டங்களிலுள்ள சில உள்ளுராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை பிரிப்பு
தொடர்பில் விரிவான மனுக்களையும் அறிக்கைகளையும் கடந்த நவம்பர் மாதத்தில் NFGG
சமர்ப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து கருத்துக்களைக்
கேட்டறியப் போவதாக ஆணைக்குழு இவ்வருட ஆரம்பத்தில் பகிரங்கமாக
அறிவித்திருந்தது. அத்தோடு கடந்த மார்ச் மாதமளவில் மட்டக்களப்பிற்கு விஜயம்
செய்யவுள்ளதாகவும் பத்திரிகை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த திகதியில் ஆணைக்குழுவை மட்டக்களப்பில் சந்தித்து மேலதிக விளக்கங்களை வழங்குவதற்கு NFGG தயாராகிக்
கொண்டிருந்த வேளையில் இறுதி நேரத்தில் ஆணைக்குழு தமது விஜயத்தை இரத்து செய்ய
வேண்டி ஏற்பட்டது.
இதன் பின்னர் எவ்வித  பகிரங்க அறிவிப்புக்களும் செய்யப்படாத நிலையில் கடந்த
ஜூலை 24ம் திகதி ஆணைக்குழு மட்டக்களப்புக்கு விஜயம் மேற் கொண்டிருந்தது.
ஆனால், ஏற்கனவே மகஜரைச் சமர்ப்பித்திருந்த NFGG க்கு இவ்விஜயம் பற்றிய எந்த
முன்னறிவிப்பும் செய்யப்பட்டிருக்கவில்லை. இது பற்றி பின்னர் விசாரித்த போது
சில அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் ஊடாக இக்கூட்டத்திற்கான அழைப்பு
விடுக்கப்பட்டதாகவும் இதனை பகிரங்கமாக அறிவிக்க தவறிவிட்டதாகவும் எனத்
தெரிவித்து வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னணியிலேயே ஆணைக்குழுவின் தலைவரை பிரத்தியோகமாக சந்திப்பதற்கான
வேண்டுகோளை NFGG விடுத்திருந்தது.
அதற்கமைவாகவே இந்த விசேட சந்திப்பு கொழும்பில் நடை பெற்றது.
காத்தான்குடி மற்றும் மூதூர் உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இச்சந்திப்பின் போது
விசேட கவனம் செலுத்தப்பட்டது. எமது கோரிக்கைகளையும் வாதங்களையும் முழுமையாகக்
கேட்டறிந்து கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் எமது கோரிக்கைகளை சாதகமாக
பரிசீலிப்பதாகவும் இதற்கான பதிலை எழுத்துமூலமாக விரைவில் வழங்குவதாகவும் NFGGயிடம் உறுதியளித்தார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்
தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்கினார்.
இவ்வாலோசனைகளுக்கமைவாக தொடர்ச்சியான
நடவடிக்கைகளை NFGG மேற் கொள்ளவுள்ளது என NFGG ஊடகப்பிரிவு தெரிவித்தது..

Post a Comment

Previous Post Next Post