இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கம் பல யுத்த களமுனைகளையும், பாரிய சவால்களையும் சந்தித்துள்ளது, பிர்அவ்ன், அபூஜஹீல் போன்ற அநியாயக்காரர்களை பேராடி வென்றிருக்கிறது. எவ்வாறுதான் கொடியவர்கள் ஒருசில திட்டங்கள் தீட்டினாலும் இஸ்லாமியத்தை காப்பாற்ற இறைவன் ஒரு திட்டம் தீட்டுவான் அதுதான் இறுதி திட்டமும் கூட.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்த போது பலர் சொல்லாலும், கல்லாலும் வதைத்தனர் பாரிய யுத்தங்களை சந்திக்க நேர்ந்தது வெற்றிகள்தான் அதிகமதிகம் இருந்தாலும் அந்த வெற்றிகளை நெருங்க அவர்கள் பட்ட வேதனையும் கஸ்டமும் இறைவனுக்கே தெரியும். நபிகளார் போராடிய பத்ர் கள முனை போன்ற களமுனைகளை சந்தித்த சந்ததியில் உதித்த முஸ்லிம்கள் இன்று எதைக்கண்டாலும் பயந்து பின்னால் செல்லும் சூழ்நிலையை பார்க்க முடிகிறது.
இஸ்லாமியத்தை காப்பாற்ற தயங்குகின்றோம், எமது உடமைகள் பறிபோகும் போது மௌனிகளாக இருக்கிறோம். இப்படிப்போனால் இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்கும் சக்தி எமக்கு எவ்வாறு கிடைக்கும்? இன்று அதிக முஸ்லிம் கிராமங்களி்ல் போதைவஸ்து பாவனை, சிகரெட், மது, கஞ்சா, ஏனையவைகள் பகிரங்கமாக விற்கப்படுகிறது இதனை தடுத்து நிறுத்த யாரும் தயாரில்லை. கேட்டால் நமக்கு எதற்கு வம்பு என்கிறார்கள்.
இளவயது ஆண்பெண் பிள்ளைகளின் செயற்பாடுகளில் மோசம், மரியாதை குறைவு, பெற்றோரை உதாசீனப்படுத்தல் கல்வி நிலையில் பின் தங்கள் அடுக்கடுக்காய் ஆயிரம் பிழைகளை செய்யும் சமூகமாக மாறிவிட்டோம். காரணம் புரியவில்லை இது திட்டமிட்டு நம்மை சூழ்ந்து விட்டதா இல்லை நாமாக பிழையாகிவிட்டோமா என்று.
இந்த விடயங்கள் குறித்து சிந்திக்க யாருமில்லாத அநாதைகள் ஆகிவிட்டோம். இன்று இலங்கை முஸ்லிம் மீது பல கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத செயல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்துள்ள இத் தருவாயில் பல சத்தியங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நாம் உண்மை முஸ்லிமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை அழகிய முறையில் சொல்லி மற்றவருக்கு தெளிவூட்ட வேண்டும். உடமைகள் பறிக்கப்படுகிறபோது அதிகாரங்களில் இருப்பவர்கள் முன்னின்று தடுத்து நிறுத்த வேண்டும்.
மனதில் கொள்ளுங்கள் நாங்கள் அபூபக்கர் (றழி), உமர் (றழி), வம்சத்தில் இருந்துவந்த உலகை ஆளும் வல்லமை கொண்ட கூட்டம்.
- பஹத் ஏ.மஜீத்