இலங்கையில் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் ஆனால் முஸ்லிம்களுக்கு அநீதிகளும் இன்னல்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போதாமைக்கு முஸ்லிம்காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என இரண்டு முஸ்லிம்கட்சிகளும் பாரிய பொறுப்புள்ள இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் தேசிய கட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர்களும் அரசியலில் அங்கம் வகித்தாலும் ஆனபலன் ஒன்றுமில்லை.
இதுவெல்லாம் இருக்க இவர்களை ஒன்றிணைக்க பலமுறை பலர் செயற்பாடுகளை செய்திருந்தாலும் அது பலன்பெறவில்லை முஸ்லிம் கவுன்சில், சூறா சபை என்பன பலமுறை நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் பேச்சளவில் அது நிறைவுற்றது. ஏன் இப்படி ஆரோக்யமாக அமையவில்லை என்றால் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு கோணம் அவர்கள் அனைவரும் பணம் செலவழித்து அரசியலுக்கு வந்தவர்கள் அவர்களிடம் ஒருசிலவற்றை எதிர்பார்க்க முடியாதுதான் என்றாலும் அவர்களின் கோசங்கள் அனைத்திற்கும் அவர்கள் தீர்வு தரவேண்டும்.
இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக கூறிக்கொள்ளும் அல்லது ஏனைய சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது இதுவரை காலவரைக்கும் பலரை வளர்த்துவிட்டுள்ளது சிலரை கூடவே ஒரு சிலரை வைத்துக்கொண்டு உள்ளது. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் இருக்கும் போது கூடவே இருந்தவர்களை மு.கா விலக்கிவிட்டுள்ளது அதுபோல அவர்கள் விலகியும் சென்றுள்ளனர். இந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை தற்போதைய தலைவர் ஏன் தள்ளிவைக்கிறார் என்று புரியாவிட்டாலும் அந்த மூத்தவரில் ஒருவுரான நிந்தவூரை சேர்ந்த சட்டத்தரணி ஹசன் அலியின் பங்கு வகிபாகம் வேறு, ஹசனலிக்கு தேசியப்பட்டியல் இல்லை, கட்சியில் பதவி குறைப்பு என்று நடந்திருப்பினும் அவர் கட்சியை விட்டு இன்னும் வெளியுறவில்லை என்றால் இன்னும் ஏதோ இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
மு.காவிற்கும் அவருக்குமான முரண்பாடு அஷ்ரப் அவர்களின் இழப்பிற்கு பிறகிலிருந்து ஆரம்பிக்கிறது, அதாவது இன்றுவரை தொடர்கிறது ஒன்பது வருட முரண்பாடு என்று வெளிப்படையாக ஹசன் அலி ஏற்றுக்கொண்டாலும் அங்கு என்ன முரண்பாடு என்று அவர் சொல்லவில்லை (அக்கரைப்பற்றில் இன்று அதாவது 18.11.2016 விசேட கூட்டத்தில் அவர் கூறிய விடயம்) இந்த முரண்பாடுகளுக்கு தீர்வாகவும், முரண்பட்டுள்ள ஏனைய தலைவர்களை அரசியல்வாதிகளை முஸ்லிம் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக கூறும் ஹசன் அலி அதனை கச்சிதமாக செய்வாரா என்பதில் ஒரு கேள்வியும் தங்கியுள்ளது.
- பஹத் ஏ.மஜீத்