Top News

நான் எனும் நீயின் பிரதான கதாபாத்திரம் பௌசருக்கே சொந்தம்



சிராஜ் மசூரின் முகப்புத்தக பதிவிலிருந்து பெறப்பட்ட பத்தி
மருதமுனை கலை இலக்கிய மன்றங்களின் ஒன்றியம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒருங்கிணைப்புடனும் அனுசரணையுடனும் நடத்தும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பொன்விழாவில், இன்று மாலை 'நான் எனும் நீ' கவிதை நூலை மீள் வெளியீடு செய்கின்றனர் .நல்ல முயற்சி.
இலக்கிய ரசனையுள்ள படைப்பாளி மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் கவிதை முகத்தை, மீண்டும் கண்டெடுத்தோருக்கு நன்றி கூறியவனாய் சில வார்த்தைகள்...
இந்த நூலை வெளிக்கொணர முழு முயற்சியும் செய்த தோழர் எம்.பௌஸரை மறந்து விடாதீர்கள். நண்பர் பௌசர் Fauzer Mahroof தொலைதூரத்திற்குப் புலம் பெயர்ந்து விட்டார். அவர் இங்கு இல்லாத இந்த சந்தர்ப்பத்தை 'பொன்னொன்று கண்டேன், பெண் அங்கு இல்லை' என்ற வார்த்தைகள் ஊடே மனங் கொள்கிறேன்.
தனக்கு நெருக்கமாக இருந்த இரு மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் நூல்களை வெவ்வேறு காலகட்டங்களில் வெளிக்கொணர்ந்து, அரசியலும் இலக்கியமும் பிரிக்க முடியாத தோழமைகள் என்பதை மீண்டும் ஒரு தடவை, முஸ்லிம் அரசியல் புலத்திற்குள்ளும் - அதற்கு அப்பாலும் உணர்த்தியவர் நண்பர் பௌசர்.
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 'நான் எனும் நீ' , வேதாந்தி சேகு இஸ்ஸதீனின் 'இருளின் நிழலில்' ஆகிய இரு கவிதைத் தொகுதிகளும், ஒரு காலத்தில் முஸ்லிம் அரசியலின் முடிசூடா மன்னர்களாக இருந்த இரு முக்கிய ஆளுமைகளின் இன்னொரு பக்கத்தைத் தரிசிக்க வழி சமைத்தவை என்பதை இங்கு சொல்வாயது அவசியம். இவற்றினூடே,அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அவர்களது படைப்பு மனங்களை ரசிக்கக் கிடைத்தது.
இந்தப் பொன்விழா தொடர்பான எனது முன்னைய கருத்தொன்றுக்கு பதிலாக எஸ்.எல்.எம். ஹனிபா Slm Hanifaஎழுதிய குறிப்பொன்று இப்படி இருக்கும்: "முஸ்லிம் சமூகத்திற்கு எப்பொழுதும் பேரிரைச்சலுடன் அலாதி விருப்பம் சிராஜ்."
சிலவேளை இந்தப் பேரிரைச்சலுக்குள் பௌசர் காணாமல் போய் விடுவாரோ என்ற ஆதங்கம்தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. எது எப்படிப் போனாலும், ஒருவருடைய பங்களிப்பை நாம் முறையாக அங்கீகரிக்க வேண்டும். முன்பு அவர் இந்த நூலை வெளியிட்டிருக்கா விட்டால், இந்த மீள் வெளியீடு சாத்தியமில்லை.
பௌஸரின் பங்களிப்பை நன்கு தெரிந்தவர்தான் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். தாருஸ் ஸலாமில் வைத்து ரவூப் ஹக்கீமை நான் முதன் முதலில் சந்தித்ததே, பௌஸரின் அலுவலக அறையில் வைத்துத்தான். அவர்தான் வெளியீட்டு உரையை நிகழ்த்தப் போகிறார். அவர் பௌஸரின் நல்ல நண்பரும் கூட. ஆகவே, பௌஸரின் பங்களிப்பை மறக்காது அவர் பதிவு செய்வார் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் பங்களிப்பு தெரிந்த இன்னொருத்தரான எனது ஆசிரியர் பேராசிரியர். ரமீஸ் அப்துல்லாஹ்தான் நூலாய்வு செய்கிறார். நினைவுரையை நிகழ்த்தவுள்ள உமா வரதராஜனுக்கும் Uma Varatharajan இது தெரியும்.ஆக, பௌஸரை இவர்கள் யாரும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நண்பர் பௌசர், உங்கள் பங்களிப்பை நினைந்து இந்த மழை நாட்களில் வார்த்தைகளை தூறலாய்த் தூவுகிறேன். மிக்க அன்பு தோழர்.

குறிப்பு: தலைப்பிற்கும் சிராஜ் மசூருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, எமது ஆசிரயர் குழாம் இட்ட தலைப்பு இது. நன்றி
Previous Post Next Post