Top News

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை கௌரவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ்


அஸ்லம் எஸ்.மௌலானா

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை கௌரவப்படுத்தும் பொன்விழா இன்னுமொரு வரலாற்று நிகழ்வாகும் என இலக்கிய வேந்தர் செய்யித் ஹஸன் மௌலானா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று மருதமுனையில் இடம்பெறுகின்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது; 

1966 ஜுலை 02 ஆம் திகதி மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டை பலரது ஒத்துழைப்புக்களுடன் முன்நின்று செய்தவன் என்றவகையில் இன்று அதற்கான ஒரு பொன்விழாவைக் காணும் மிகவும் சிறந்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் முதற்கண் மொழிந்தவனாக.

மேலும் நான் பிறந்த எனது மண்ணான மருதமுனையில் இப்பொன்விழாவை நினைவுபடுத்தி இவ்வருடம் அதற்கான திகதியில் ஒரு ஞாபகார்த்த நிகழ்வை என்னை கௌரவப்படுத்தும் பாங்கில் ஊர் மட்டத்தில் ஏற்பாடு செய்து நடாத்திய மருதமுனையின் கலை இலக்கியவாதிகள் ஆர்வலகள் என்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்துடையது.

பொதுவாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் குறித்து ஒரு சிறிய விழா அல்லது ஒரு மாநாடு என எது நடந்தாலும் அதனை யார் செய்கிறார்கள் எனப் பார்க்காது அது இஸ்லாமிய இலக்கியத்திற்காகச் செய்யப்படுகின்ற ஒன்று என்ற அடிப்படையில் அதனை மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்று அதற்காக என்னாலான எல்லாப் பங்களிப்புகளையும் செய்துவருபவன் நான்.

எத்தகையதொரு உண்மையான உழைப்பையும் காலம் பெறுமதியோடு வைத்திருக்கும் என்பதற்கு 50 வருடங்களின் பின் ஏற்பாடாகும் இப்பொன்விழாவை ஒரு வரலாற்றுச் சான்றாக நான் பார்க்கின்றேன்.

இதன்பிறகு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு எத்தனை ஆராய்ச்சி மாநாடுகள் நடந்தாலும் அவற்றுக்கும் இன்னுமொரு வரலாற்று தொடர்ச்சியையும் பதிவையும் இப்பொன்விழா நிகழ்வு கொடுத்திருக்கிறது என்பது எனது கணிப்பு. ஏனென்றால் அப்போது மருதமுனையில் நாங்கள் செய்த அந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுதான் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளுக்கெல்லாம் கால்கோளாக அமைந்திருந்தும் அதனை அடியொட்டி 1973 இல் திருச்சியில் ஒரு உலகளவிலான ஒரு மாநாட்டைக் கூட்டி அதனையே முதலாவது மாநாடாகத் தீர்மானித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பெயர் வாங்கிக்கொண்டார்கள். 

என்றாலும் பேரறிஞர் ம.மு.உவைஸ் அவர்கள்தான் எழுதிய இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரைகளிலும் நூல்களிலும் மருதமுனையில்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு முதலாவது ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது என மிக அற்புதமாக அதனை வரலாற்றுக்கு எடுத்துச் சொல்லியுமிருக்கிறார்.

உலக அரங்கில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு 1966 இல் எப்படி ஒரு ஆராய்ச்சி மாநாடு முதலாவதாக மருதமுனை மண்ணில் நடைபெற்றிருந்ததோ அவ்வாறுதான் இன்றும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு முதலாவது நினைவுத் தூபியும் அதன் 50 வருட நிறைவின் பொன்விழா அடையாளமாக அதே மண்ணில் நிறுவப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு என்னை முழுமையாக மனநிறைவடையச் செய்திருக்கிறது. 

1966 இல் நாங்கள் செய்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிற்கு இந்த பொன்விழா நினைவுத் தூபி மூலமே உண்மையான ஒரு பலன் கிடைத்திருக்கிறது என நான் உறுதியாகச் சொல்வதோடு முழுமையான ஒரு திருப்தியையும் இதன் மூலம் நான் இப்பொழுது அடைவதாக மன மகிழ்ச்சியடைகிறேன்.

முதலாவதாக நடைபெற்ற எங்களது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டை வரலாற்றில் நிலைப்படுத்தவும் அதனை முதன்மைப்படுத்தவும் ஒரு நினைவுத் தூபியினை அமைக்க வேண்டும் என உறுதிபூண்டு அதற்கான  வேண்டுகோளை விடுத்து அதில் வெற்றிகண்ட என் மண் பிறந்த இலக்கியகர்த்தாக்கள் ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நான் நன்றி பாராட்டுகின்றேன். அதனோடு மருதமுனை கலை இலக்கிய மன்றங்களின் வேண்டுகோளாக இதனை முன்வைத்து அதற்கான ஒத்துழைப்க்களையும் உதவிகளையும் நல்கும் கலை மன்றங்களுக்கும் என் நல் வாழ்த்துக்களையும் உரைக்கின்றேன்.

மிக முக்கியமாக இப்படியொரு தருணத்தையும் கௌரவத்தையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வரலாற்றில் பெறுவதற்கு பொன்விழாக் கோலத்தை மருதமுனை மண்ணில் மிகப் பிரமாண்டமாக  ஏற்பாடு செய்ய அனுசரணை செய்து விழா ஒழுங்கமைப்புக்களை முன்னின்று பொறுப்பெடுத்து சகல வசதிகளையும் ஈர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உண்ணதமான இப் பணியை பாராட்டாமலும் அதற்கு நன்றி கூறாமலும் இருக்க முடியாது.

1979 ற்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் மிகப் பிரமாண்டமான ஒரு மாநாட்டை கொழும்பில் தான் முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தியவர் ரவூப் ஹக்கீம். பிறகும் மலேசியா இந்தியா போன்ற நாடுகளுக்கும் எமது பேராளர்களை அழைத்துச் சென்று கூடவே தானும் நின்று இலக்கிய பணி செய்தவர். 

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நிகழ்வுகளுடன் ஒரு தொடர்பும் தொடர்ச்சியும் எப்பொழுதும் அவருக்கிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது வெளிப்படையாக யாவரும் அறிந்த ஒரு உண்மையுமாகும்.

அந்த தொடர்பிலும் அதே ஈடுபாட்டுடனும் ரவூப் ஹக்கீம் மருதமுனை மண்ணில் இந்த பொன்விழா நிகழ்வை நடாத்தி அதனை உலகறியச் செய்ய முற்பட்டமைக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது என நான் பாராட்டுச் சொல்கிறேன்.

Previous Post Next Post