ஒரு காலம் வரும் அக்காலத்தில் ஈமானை தீப்பிளம்பை கையில் வைத்திருப்பது போல மனிதர்கள் வைத்திருப்பர் என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள், இந்த ஹதீஸின் அர்த்தம் தீப்பிளம்பை கையில் வைத்திருக்க முடியாது காரணம் அது கையிலிருந்து தூக்கி வீசப்பட்டுவிடும் அல்லது தவறிவிழுந்துவிடும் அல்லது கையிலே இருக்காது அந்த நிலைதான் இன்று முஸ்லிம்களுக்கும் ஈமானை வைத்திருப்பது அது அன்றாட வாழ்வில் நடந்து கொண்டிருப்பதனை காண முடிகிறது.
இலங்கை முஸ்லிம்கள் கலப்பு முஸ்லிம்கள் அதாவது கலாச்சாரம் சிங்கள, தமிழ், கிறிஸ்தவ சமயங்களை சார்ந்து இருக்கிறது இதனால் இலங்கை முஸ்லிம் உலக முஸ்லிம்களின் பார்வையில் இலங்கை சோனகர்கள் என பார்க்கப்படுகின்றனர். அரேபிய தந்தைக்கும் சிங்கள, தமிழ், கிறஸ்தவ தாய்மாருக்கும் பிள்ளைகளாக பிறந்த சந்ததியே இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் மறுக்காவிட்டாலும் பிற்பட்ட காலப்பகுதியில் இஸ்லாத்தின் தூயவடிவம் இலங்கைக்கு வந்துவிட்டது போதனை செய்ய வெளிநாட்டு உலமாக்களும் வந்தனர் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் உலமாக்களே அதிக போதனைகளை இலங்கை முஸ்லிம்களுக்கு செய்தனர்.
இன்று முஸ்லிம்களின் வாழ்க்கை நடைமுறை ஏனைய மதத்தவர்கள் போல இருக்கிறது இதனை மாற்றம் செய்ய முயற்சித்தாலும் அது வழமைதானே என்று இஸ்லாமியத்தை மறந்து கூறிக்கொண்டிருக்கிறார்கள், உதாரணமாக முஸ்லிம் திருமண வீடுகளை எடுத்துப்பார்த்தால்,
திருமணத்திற்கு மணமகளை அலங்காரப்படுத்துகின்றனர், இதற்கென அதிகம் பணம் செலவிடுகின்றனர், திறெளன் (அலங்காரப்பந்தல்) வடிவமைக்கின்றனர். இதற்கு அதிகம் செலவு செய்கின்றனர், இங்கு மணமகளும் மணமகனும் காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றனர்.
புகைப்படங்களோ ஏராளம் இறுதியில் இவைகள் சமூக வலைக்கும் வருகிறது. மணமகளுக்கு தாலி அணிவிக்கப்படுகிறது. மணமகனுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மணமகளின் தங்கை மணமகனுக்கு பழம் ஜூஸ் என்பன ஊட்டிவிடுகிறாள், இது மாத்திரம் அன்றி பெட்டி கொண்டு செல்லுதல், ஆலாத்தி எடுத்தல், பெண்பார்க்க செல்லுதல் என அதிமான சடங்குகள்.
மேற்குறிப்பிட்ட எவற்றையாவது இஸ்லாம் செய்ய சொல்லியதா? நபிகள் நாயகம் (ஸல்) அல்லது, நபித்தோழர்கள் செய்தார்களா? இது எங்கிருந்து வந்தது? ஏன் இப்படி ஒரு கேளிக்கை இஸ்லாத்திலே இல்லாத ஒன்றை செய்தால் அது பிழை என்பது தெரியாதா? இஸ்லாமும் ஈமானும் இன்று வேடிக்கை பொருளாக மாறிவிட்டது. பேசும் போது மாத்திரம் சூபிகளாக இருக்கிறோம் நடைமுறையில் காபிராக இருக்கிறோம் இதுதான் உண்மை
இவைகளை தடுப்பதற்கான பொறிமுறைகளை எப்போதாவது நாங்கள் கையாண்டதுண்டா பள்ளிவாசல்களில் பேசிவிட்டால் மட்டும் போதுமா?அதன் பிறகு எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதற்கு எவ்வாறு செயன்முறைகளை செய்ய வேண்டும். இந்த விடயங்கள் மூலம் ஏனை சமூகத்தவர்கள் எம்மை கருதுவர்? நாங்களே இஸ்லாத்தையும் முஸ்லிம் என்பதையும் மறந்துவிடுவதால்தான் பிரச்சினைகள் அனைத்தும் நமக்கு வருகிறது அடிப்படையில் எப்போது நம்மிடத்தில் இஸ்லாம் வருகிறதோ அன்று முஸ்லிம்களை எதிர்க்க யாரும் வரமாட்டார்கள்.
அனைத்துவிதமான பாவங்களையும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் செய்கிறோம். போதைவஸ்து கஞ்சா, குடு, தூள் என்பவற்றை விற்பதில் முதலிடம், சிறைச்சாலைகளின் பெருங்குற்றங்கள் புரிந்து அதிகம் இருக்கிறோம், அளவை நிறுவையில் மோசடி, எந்த வகையான பாவங்கள் செய்யக்கூடாதோ அவற்றை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.
இறைவனின் சாபக்கேடு வராமல் பின்னர் என்ன செய்யும்,
முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது காரணம் நபிகளாரின் வாழ்க்கை முறை நம்மிடம் இல்லை. நாம் திருந்தாத வரையில் இறைவனின் பார்வை திரும்பாது.
பிரதம ஆசிரியர் பஹத் ஏ.மஜீத்