Bana Alabed என்ற இந்த 7 வயதுச் சிறுமி தனது @AlabedBana என்ற Twitter கணக்கு மூலம், உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தாள். இதில் பதிவேற்றப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் மூலம் அலெப்போவின் அவலத்தை உலகம் அறிந்து கொண்டிருந்தது.
இப்போது அவளது கணக்கில் 341,000 followers இருக்கின்றனர். உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களது கவனத்தையும் அது ஈர்த்திருந்தது. இதை அவளது தாய் பாத்திமாதான் இயக்கி வருகிறார்.
அலெப்போவில் முற்றுகைக்குள்ளாகியிருந்த அவள், தற்போது தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறாள். அவள் விரைவில் துருக்கிக்கு கொண்டு வரப்படுவாள் என துருக்கிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அலெப்போவிலிருந்து தம்மைப் மீட்குமாறு, அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாவிடம் தாயும் மகளும் கோரும் வீடியோ காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதில் பனாவும் அவளது குடும்பத்தினரும் துருக்கிக்கு அழைத்து வரப்படுவர் என வெளிவிவகார அமைச்சர் பதில் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"நீங்கள் அலெப்போவிற்கு செய்ததைப் போல, சிரியாவெங்கும் சமாதானம் ஏற்பட நாமெல்லோரும் ஒன்றிணைவோம்- பாத்திமா" என்ற வாசங்கள் இப்போது அவளது Twitter பதிவில் எழுதப்பட்டுள்ளது.
கருகிப் போன சடலங்களாகவும், பெற்றோர் சுமந்து செல்லும் பரிதாபத்திற்குரிய முகங்களாகவுமே, அலெப்போவின் குழந்தைகளை புகைப்படங்களில் கண்டோம். அந்தக் காட்சிகளைக் கண்டபோது நமது கண்களும் கசிந்தன. நாமெல்லாம் கலங்கி நின்றோம்.
இப்போது சிரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியைக் காணும்போது, கொஞ்சம் ஆறுதலாய்த்தான் இருக்கிறது.
"எங்கள் இரட்சகனே! அகப்பட்டிருக்கும், இன்னமும் எஞ்சியிருக்கும் எல்லோருக்கும் விடிவையும் மீட்சியையும் அருள்வாயாக."
சிராஜ் மசூர்
சிராஜ் மசூர்