ஒரு பண்பாடு இருப்பியலின் மீது தனக்கான முழு அதிகாரத்தினை வேண்டுகின்ற போதுதான் எமது பல்வகை கொண்ட உறவுகளில் கோடுகள் ஏற்படுகின்றன. எமது அடையாளங்கள் எமது சுயம் எமது இருப்பிடம் என எப்பொழுது பேச முனைந்தோமோ அன்றிலிருந்து எமது நம்பிக்கைகள் மீதான விரோதப் பார்வையினை உருவாக்கிவிட்டிருக்கிறோம் என்றுதான் கூற வேண்டும். வரலாறு நெடுகிலும் எம்மால் உணரப்பட்ட போராட்டங்கள் இருப்பியல் சார்ந்ததாகவே இருக்கின்றன.
ஏதோ ஒரு காரண அடிப்படையிலும்இ வரலாற்றுச் சான்றுகளின் ஊடாகவும எமக்கான அடையாளத்தினை தேடுகின்ற போது பெருத்த சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதற்காக எமது அடையாளங்களை விட்டுக் கொடுப்பதல்லஇ மாறாக எமது அடையாளங்களை பெற்றுக் கொள்வதற்கு எவ்வகையான யுக்திகளை மேற்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது. பல்வகை கோட்பாடுகளையும்இ மதங்களையும் கொண்ட சமூகப் பரப்பில் எமக்கான உரித்துகளை பெற்றுக் கொள்கின்ற விடயம் என்பது சூட்சபமாக செய்து கொள்ளப்படல் வேண்டும்.
எமது மேலோட்டமான வர்க்கச் சிந்தனை எமது அடையாளங்களின் மீது முன்வைக்கப்பட்டிருக்கின்ற பாரிய சவாலாகும். இதனை எப்படி எதிர்கொள்ளல் என்பது கூர்மையான பார்வை கொண்ட நடு நிலைக் கருத்தாடல்களே தீர்மானிக்கின்றன. இதில் நடுநிலை என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
எம்மில் இருந்து முதலாவது அழிக்கப்பட வேண்டிய வார்த்தைப் பிரயோகம் எங்களுடைய எனது எனும் அடையாள முன்வைப்பே. எப்பொழுது நாம்இ நமக்காக எனும் வார்த்தைப் பிரயோகங்கள் எம்மத்தியில் உருவாகிறதோ அங்கிருந்து நாம் தூய்மையான சுதந்திரத்தினை உணர முடியும்.
இலங்கைச் சூழலினைப் பொறுத்தவரை இன்னும் தீப்பற்றி எரியாத ஒரு பெரும்பாண்மை சமூகம் உள்ளது. ஆயுதப்போராட்டங்களின் நீண்ட வரலாறுகள் எமது சிறுபாண்மை மக்களிடத்திலிருந்துதான் தனக்கான தோற்றத்தினை உருவாக்கியிருக்கிறது.
இப்பொழுது ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த நிலையில் காப்ரேட் கம்பனிகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். இதில் சிறுபாண்மை சமூகம் இலகுவில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. வர்த்தக சூழலினை மையமாக வைத்து உருவாகுகின்ற அரசியல் செயற்பாடுகள் தங்களுக்கான கூறிய ஆயுதமாக மதங்களை முன்நிறுத்துகின்றன. ஒரு சதாரண குடிமகனைக் கூட இலகுவில் சென்றடையக் கூடிய அரசியலாக இன்று இனவாதம்இ மதவாதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதினை அவதானிக்கலாம்.
பெரும்பாண்மை மக்கள் வாழகின்ற தேசங்களைப் பொறுத்தவரை காப்ரேட் கம்பெனிகளின் தேவையும் அதிகரிக்கின்றன. உறவு முறைப் பண்பாட்டிலிருந்து சிறுபாண்மை மக்களுக்கும்இ பெரும்பாண்மை மக்களக்கும் மத்தியில் தீயினை மூட்டி குளிர்காயவே பார்க்கின்றன. இதற்காக அவர்கள் செய்கின்ற முதல் வேட்டை மதம் பற்றியதும் எமது அடையாளங்கள் அழிக்கப்படுகிறது என்பதுமான கதையாடல்களே. இதில் இலகுவாக உணர்ச்சிவசப்படக்கூடிய சமூகமாக சிறுபாண்மை மக்களை மாற்ற அவர்களின் அரசியல் மிக வேகமாகவே செயற்படுகிறது. இந்த நிலையினை புரிந்து கொள்ளாத சிறுபாண்மைத் தலைவர்கள் இனவாதம் எனும் ஒரு கொடியில் தங்கள் இருப்பினை தக்கவைக்க முனைகின்றனர். சிறுபாண்மை எனும் கதையால் பெரும்பாண்மை எனும் நிலையிலிருந்து தோன்றியதுதான். இதற்கான வாழ்வியல் முறையினை அதிகார இருப்பினை எதிர்பார்ப்பவர்களின் கைளில் கொடுத்ததுதான் சிறுபாண்மை மக்கள் செய்கின்ற பெரும் அபத்தமாகும்
இதிலிருந்துதான் நாங்கள் பண்பாட்டினை பாதுகாக்க வேண்டியவர்களாகிறோம். எமது பண்பாட்டினை முதலில் புரிந்து கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது. ஒரு பல்வகை கொணட சமூக அடையாளத்திற்கு மத்தியில் எமது அடையாளத்தினை நாகரீகமாக முன்வைப்பதே எமது பண்பியலி்ன் முழுவடிவமாகும். மாறாக போராட்டங்களிலும்இ சவால்களாலும் பெற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எமது நாட்டினைப் பொறுத்தவரை நாம் கவனம் செலுத்த வேண்டிய பாரிய துறைகள் உள்ளன. எமது கல்வியல் சார்ந்த ஒரு சமூகக் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். கல்விச் சமூக உருவாக்கமே எமது நடுநிலைப் போக்கினை உருவாக்கும். அதிகார அரசியலின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற கூட்டத்தின் மீது எமது எதிர்வினைகள் நிகழ்த்தப்பட வேண்டும். தங்களது சுகபோக இருப்பிற்காக சிறுபாண்மை அடையாளத்தினை கூறு போடுகின்ற தலைவர்களையே நாம் உருவாக்கியிருக்கிறோம். எமது பண்பாட்டு அரசியலின் மீது விட்டுக் கொடுப்பினை மேற்கொள்கின்ற கல்விச் சமூக சிந்தனை வர்க்கத்தினை நாம் உருவாக்க முனையவில்லை. இதுவே நாங்கள் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி.
ஆசிரியர் பீட ஆசிரியர் சஜீத்