ஆசிரியர் பீட ஆசிரியர் சாக்கீர்
பல்லாயிரமாண்டு வரலாற்றைக் கொண்ட எம் இரத்தினதுவீபமானது பூலோகத்தின் சுவனபுரியாக வர்ணிக்கப்படுகின்றது.இலங்கைத் தீவானது அதன் வனப்பு, புவியியல் அமைவு,மற்றும் காலநிலைப் பல்வகைத்தன்மை, போன்ற காரணிகளால் அன்றும் இன்றும் உலகின் பல்வேறு ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றதொரு விசித்திரம் மிக்க நாடாக அமைந்துள்ளது.
தொன்று தொட்டு பல்லின மக்கட்பல்வகைமை நிலவும் இந்நித்திலத்தில் மக்களின்; சகவாழ்வும் அந்நியோன்னியமும் பரஸ்பர உறவுகளாகவே காணப்பட்டது. ஆனால் எமது சுதந்திர உறவிலும் நிலத்திலும் கி.பி.1505 இலிருந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்புக் கறைகள் படிப்படியாய படியத் தொடங்கின. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் பொருளாதார மற்றும் சுயலாபங்களுக்காக இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்துவதையும், பிரித்தாளும் ராஜதந்திரங்களினையும் தங்களின் கைங்கரியங்களிற்கு வெகு இலாவகமாக பயன்படுத்தினர்.
இக்கால கட்டத்தில் நாட்டைக் காக்கும் பணியில் சிங்களவர், தமிழர்.முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் தம் இராசதானிகளின் மன்னர்களுடன் இணைந்து அந்நியரை எதிர்த்தனர்.
ஏறத்தாள நான்கு நூற்றாண்டுகள் இலங்கையின் வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திய போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்புகளிலிருந்து 1948ம் வருடம் பெப்ரவரி 4ம் திகதி எம் நாடு சுதந்திரம் பெற்றது.
மத்திய இலங்கையில் கண்டி மன்னன் இராஜசிங்களின் படையில் 400ற்கும்ம் மேற்பட்ட முஸ்லிம் படைவீரர்களும் பல இலங்கை முஸ்லிம் தூதுவர்களும் கடமையாற்றியுள்ளனர். இலங்கையின் வடபுலத்தில் காதர்வாலா போன்ற தாய்மண்ணில் நேசம் கொண்டிருந்த முஸ்லிம் தளபதிகளைப் போன்று கிழக்குமாகாணத்திலும் பிரத்தானியருக்கெதிரான முஸ்லிம்களின் தேசவிசுவாசம் காணப்பட்டது
கி.பி1804 பிரித்தானியர் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் வேளையில் ஓந்தாச்சிமடம் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தன. கண்டி மன்னனுக்கு விசுவாசமான பிரஜைகள் அவர்களின் முன்னேற்றத்தை முறியடித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரித்தானிய அரசு குறித்த இடத்தில் படைகளை தடுத்த 169பேரையும் பிரித்தானிய அரசின் தேசதுரோகிகளாக 1804ம் வருடம் ஜுன் மாதம் நான்காம் திகதி பிரகடனப்படுத்தியது.
அவர்களுள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முக்கியமான ஏழு முஸ்லிம் பிரமுகர்களும் அடங்குகின்றனர். அவர்களில் மூவர் திருகோணமலை மாவட்டத்தையும், நால்வர் மட்டக்களப்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாயிருந்தனர். தோப்பூர் சேகு டிடி , இலங்கைச் சோனகர்களின் சமயக்கடமை செய்பவரான பீர் முஹம்மது, குச்சவெளி இரண்டாவது விதானை சலாம் பட்டி உடையார் மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த அபூபக்கர் ஈஸா முகாந்திரம், காரியப்பராகவிருந்த மீரா ஹுசைன்; அபூபக்கர் மற்றும் ஒசன்லெப்பை உதுமாலெப்பை, மருதமுனையைச் சேர்ந்த அனீஸ் லெப்பை ஆகிய ஏழுபேரும் பிரித்தானிய அரசின் தேசதுரோகிகளாக அறிவிக்கப்பட்டனர்.
குறித்த நபர்கள் 1804 செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் பிரித்தானியப் படைகளிடம் சரணடையாவிட்டால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசின் பிரதான செயலாளர் 'றொபேர்ட் அர்பேத் றோட்'அறிவித்திருந்தார். இவர்களின் தீவிரத் தன்மையும் தேசப்பற்றும் பிரத்தானியருக்கு மேலும் அசௌகரி;யத்தை ஏற்படுத்தியது தளபதி அபூபக்கர் ஈஸா முகாந்திரம் இறுதிவரை பிரித்தானியரிடம் அகப்படவில்லை.
இதனால் அவருடைய முழுச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் உமறுலெப்பை போடி உடையாரின் காலத்தில் வாழ்ந்தவரென்று அறியக்கிடைக்கின்றது. தவிர இவரைப்பற்றியோ இவரது குடும்பத்தைப் பற்றியோ வேறு தகவல்களை இதுவரை அறியமுடியவில்லை. முகாந்திரம் என்ற இவரின் பெயரின் பின்னிணைப்பாக உள்ள சொல் அன்றை கால நிர்வாகத் துறை சம்மந்தப்பட்ட ஒரு பதவிநிலைப் பெயர்ச் சொல்லாகும் இலங்கை ஆள்பதியின் பிரதிநிதி என்ற அந்தஸ்தைத்குறிக்கும் அதே வேளை தற்காப்புக் கலைகளில் அதி சிறந்தவர்களையும் குறிக்க பயன்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் அன்றுமுதல் இன்றுவரை தாய்மண்ணின் மீதான பற்றையும், தேசவிசுவாசத்தையும் காட்டிவருகின்றனர் தொடர்ந்தும் நம் தேசத்தின் ஐக்கியத்தையும், அமைதியையும் பேண என்றும் துணைநிற்பார்கள்.