Top News

இலங்கை முஸ்லிம்களுக்கு யார் தேசிய தலைவர்? யார் தீர்மானிப்பது?



ஒரு சமுதயாம்  தலை நிமிர்ந்தும், சுதந்திரமாயும் வாழ்வதோடு, தான் யார் என்பதை தெளிவுபடுத்தும் விதமாகவும்,   அதே போல் இந்த உலகில் தனித்துவமாய் வாழ்வதற்கும், தனித்துவமான ஒரு உரிமை இல்லை என்றால், அந்த சமுதாயம் உருத்தெரியாமல் துடைத்தெறியப்படும். இது இன்றைய உலக ஒழுங்கமைப்பின் எழுதப்படாத நியதி.  எதிர்கால சந்ததி பற்றி சிந்திக்கும், குறைந்த பட்ச அறிவுள்ள மற்றும் தனது சமுதாயம் பற்றிய உணர்வுள்ள, எவரும் ஒரு நாளும் இதை விரும்ப மாட்டார்கள்.

 வாழும் ஒரு சமுதயாம் தம்மை பல்வேறு அடித்தளங்களில் திட்டமிட்டும், மாற்றங்களை நோக்கியுமாய், நகர்த்தும் அதே நேரம், நீண்ட கால இலக்கை நோக்கி தம்மை கட்டமைக்கவும் கடமைப்பட்டுள்ளது. இதை நடை முறையில்,  கண்முன்னே காணும் விடயங்களைக் கொண்டு, நன்குணர்ந்து செயற்பட்டாலன்றி, அச்சமுதாயம் அதன் எதிரியை அடையாளம் கண்டு,  அதன் தீங்கைவிட்டு வெளிவரவும், மறுபுறம் தமது  உள்வீட்டை  நயவஞ்சக செயற்பாட்டிலிருந்து சுத்தம் செய்து முன்னேறவும், ஏதுவான சந்தர்ப்பம் ஒரு எட்டாக்கனியாகவே தலை மேல் இருக்கும். மேலும் தமக்கான தனிப்பாதையினை,எதிரியும் ஏற்கும் வண்ணம், தைரியமாய் தீர்மானிக்கவும் வாய்ப்புக்கிட்டும். எதிர்க்குரல்கள் கேட்கும் போதும், சதி வலைகள் பின்னப்படும் போதும்,  அதற்கெதிராய் வீறு கொண்டெழுந்து,  உரிமைக்குரலாய் பரிணமிக்கவும் முடியும்.


ஓரு சமுதயாம், குறிப்பாக அதன் இருப்பை உணர்த்தும் பாரம்பரியம் மற்றும் வரலாறு, எதிரியை பின்தள்ளும் பலமான ஒற்றுமை,  பலதையும் செய்யும் பொருளாதாரம், இலக்கின் பால் வழிநடாத்தும்  கல்வி, அதிகாரங்களின் மையமாய் திகழும் அரசியல், அதை நிர்வகிக்கும் நிர்வாக முறைமை, தனித்துவம் காக்கும் கலாசாரம், எழுச்சியை நோக்கும் ஆன்மீகம்,போன்றவற்றை ஆழமான புரிதல்களுடன் அணுகவேண்டியது, காலத்தின் தேவை என்று ஆணித்தரமாக கூறலாம்..
இந்தப் பின்னணியில், சமகால முஸிம்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை, எதிர்நோக்கி செல்வதாய், பலராலும் எதிர்வு கூறப்பட்டுவருகின்றது. நல்லாட்சி என்றார்கள், எனினும் கடந்த கசப்பான ஆட்சியில் விசம் கக்கிய வழுக்கைத்தலை நாகம், தற்போதும் படம் எடுத்து தருணம் பார்த்து தவம் கிடக்கிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், நச்சுக் கருத்துக்களும் நாளுக்கு நாள் பரவிக் கொண்டே இருக்கிறன.  இதை ஆழமாய் அவதானிக்கும் சிலர் தமிழினப் போராட்டவடிவம், கருவேப்பிலையான பின், உருமாற்றப்பட்டு முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்படுவதற்கான,மேற்கின் சதி ஒன்று, மறைமுகமாய் சூழ்வதாய் கருதுகின்றனர். இப்படியான சூழலில்தான் நாம் சலுகைகளுக்காய் கையேந்தும், அற்ப மனிதர்களாய் மாற்றப்பட்டுள்ளோம். அதே நேரம் எமது நிரந்தர மற்றும் நீண்ட கால விடயங்கள் நிலை குலைந்தும், தலை குனிந்தும் வருகின்றது. குறிப்பாக உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதை, யாரும் இலகுவாக புரிந்து கொள்வர்.
தற்போதைய சூழலில், முஸ்லிம் சமுதயாத்தின் உரிமையானது,    அது நேரடியாக  அரசியல் அதிகாரத்தில் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு விடயமாக விரும்பியோ விரும்பாமலோ மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எம்  சமுதாயத்திலுள்ள படித்தவன், பாமரன்,  மார்க்கம் படித்தவர்கள்,  ஏன் பஞ்சமாபாதகங்களில் திளைத்திருக்கும் ஜாஹிலிய்ய மூடர்கள், என அனைவரும் காரணமாய் உள்ளனர். ஏன் என்று பார்க்கும் போது, பலவிடயங்கள் ஆராயப்பட வேண்டி காத்துக்கிடக்கிறது.
இறுதி மனித சமுதாயத்திற்காய், அருக்கொடையாக வந்துதித்த எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், எல்லாவற்றுக்கும் வழிகாட்டிவிட்டு, ஏன் செய்தும் காட்டிவிட்டுத்தான் பின்பற்றுமாறு ஏவியிருக்க, நாம் இன்று வெறும் வார்த்தையால் மட்டுமே சில விடயங்களை அடங்களாய் பின்பற்றுகிறோம். சமுதாய தலைமை பற்றியும், அந்த சமுதாயத்தை ஆளும் ஆட்சியாளர்கள் எவ்வாறு  நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும், அந்த சமுதாயம் அதன் தலைவர்களை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பது பற்றியும், ஒரு சாதாரண முஸ்லிமிடம் கேட்டால் கூட வாய் கிழிய விளக்கம் சொல்வார். அதே நேரம் உள்மனதால் ஏற்றுக் கொண்ட  ஒரு வார்த்தையை, நடை முறையில் வைத்திருப்பார். 'அரசியல் ஒரு சாக்கடை' என்பதே அது. சிலர் அதையும் தாண்டி இந்த வார்த்தையை ஈமான் கொண்டுள்ளாரா என்பது போல் வெறுத்து ஒதுங்கிவிடுவர். ஆனால் அந்த வார்த்தைதான், இன்றை சமுதாயத்தின் அரசியல் சாபக்கேடாக மாறியுள்ளது என்பது எம்மில் எத்தனை பேருக்குப்புரியும்.

அதே நேரம் இன்னுமொரு விடயத்தையும்  சுட்ட வேண்டும், அதாவது அரசியல் சாக்கடை என்று சொன்னவர்கள், தொழில் என்று வரும் போது, படித்தவர்கள் எனின் இலஞ்சம் கொடுத்தும், பாமரர் எனின் ஒரு தொகைப்பணத்திற்கும், கொந்தராத்துக் காரர்கள் வால்பிடித்தும், இளைஞர் கழகங்களும் விளையாட்டுக் கழகங்களும் மாலை அணிவித்தும்தான்  அந்த சாக்கடையிலிருந்து, தமக்கு தேவையான வௌ;வேறு சுயநல  முத்தெடுக்கின்றனர். சில அப்பாவிகள் நன்றிக் கடன் என்ற பெயரில் தமது உரிமையை அடகுவைக்கின்றனர். எனினும் சமுதாயப்பிரச்சினை என்று வரும் போது, அது அரசியல்வாதிகளின் வேலை, அவர்கள்தான் அதை முன்னெடுக்கவேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். ஒரு அரிசி மூடைக்கும், ஒரு தையல் இயந்திரத்திற்கும், அலை அலையாய்  அலைகின்றனர். நல்லவர்கள் ஒதுங்கியிருக்க,  எந்தப் பாதக செயலையும் திறம்பட செய்யும் வல்லர்கள், இந்த சமுதாய பலவீனத்தை நன்கு பாவித்து,  தம் வயிறை வளர்க்க அரசியலை நாடுகின்றனர்.கொந்தராத்துக் காரர்களும்,  சுயநல செல்வந்தர்களும், அடியாட்களான கழகங்களும்தான், இன்றைய ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரல்களை தாங்கும் பிரதிநிதியை தீர்மானிக்கின்றனர். இதன் விளைவு  உரிமை பேச வந்த அரசியல்  அதிகாரத்தை, சலுகையுடன் முடித்துக் கொண்டு சாதனை வீரர்களாய்  அரசசியல்வாதிகள் எம் முன்னே வலம் வருகின்றனர். ஒரு நாள் இவை அத்தனையும் உரிமையற்ற காணியில் கட்டப்பட்ட வீடுகளாய் மாறி,  கைப்பற்றப்படும் போது தான், உரிமைக்கும் சலுகைக்கும் உள்ள வேறுபாடு என்ன வென்று எம்மவர்கள் புரிந்து கொள்வர். அத்தனையும் இருக்கும் அதற்கு உரிமையாளியாய் நீ இருக்கமாட்டாய், இதுதான் அந்தத்தத்துவம். ஆக அரசியல் அதிகாரம்,  அது எம் கரங்களாளேயே  சாக்கடையாக மாறியுள்ளது. சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டு, வீடு அசுத்தம் என்று எவனாவது சொன்னால், அவனைப்போல மடையன் யார் என்ற கேள்வி இயல்பாக எழும்.  அரசியல் என்பது சாக்கடை அல்ல, அது எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு போராட்டப்பாதை என்பதை, ஆழமாய் சிந்திக்கும் எவரும் இலகுவில் புரிந்து கொள்வர்.  இதற்கான சான்றே தற்போதைய தமிழர்களின், ஆழமான அரசியல் உருமாற்றத்துடன் கூடிய  திட்டமிட்ட நகர்வு எனலாம்.
வரலாறோ அரசியலோ பெரிதாக அலட்டப்படாத காலத்தில், இலங்கையில் செழிப்பாக வாழ்ந்தவர்கள் முஸ்லீம்கள் என்று, அந்நியவர்கள் எழுதியும் சொல்லவும் கேட்கும் நாம்,  அவை ஆவணப்படுத்தப்படவில்லை என்று எண்ணி தற்காலத்தில் அதை பற்றி ஆய்வு செய்ய புறப்படும் நாம்,  மறு புறம் இதே பாணியிலான இன்னுமொரு பாரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் எமது சந்ததிக்கான எதிர்கால வரலாறாய் மாறும், உரிமைகளை வென்றெடுக்கும் அரசியலை, சலுகைகளுக்கான ஒட்டுண்ணி அரசியலாய் மாற்றி விட்டு, அதைப்பற்றி கவலைப்பாடாமல் இருக்கின்றோம். இந்நிலையில் எமது  அரசியலை ஒழுங்கமைத்த அரசியல் தலைவர், மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்  எதை நோக்கி சமுதாயத்தை வழிநடாத்தினார் என்பது பற்றி ஒரு முறை மீட்டிப்பார்ப்பது சாலச்சிறந்தது.
முதன் முதலில் மறைந்த தலைவர் உட்பட பலரால்  1997 ல் முஸ்லிம் யுனைடட் லிபெரேசன் புரன்ட்(ஆருடுகு)  எனும் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து, பின்னர்  தமிழ் யுனைடட்  லிபெரேசன் புரன்ட்(வுருடுகு) எனும் தமிழர்களுக்கான கட்சியுடன் இணைந்து போட்டி இட்டு, பாரிய முன்னேற்றம் இன்றி காணப்பட்ட போது, புதியதொரு மாற்றத்தை நோக்கி முன்னேற்றப்பட்டது. அந்த மாற்றத்தின் பின்  1981 ல் அது சிறீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயருடன், காத்தான்குடி சகோதரர்களின் துணையுடன், புதுப்பொலிவு பெற்று 1986 நவம்பரில் முறையாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டது. தலைவராக எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் முதலாவது இக்கட்சிசார் பிரதிநிதியாக, தலைவர் அகர்களே வெற்றிபெற்றார். பின்னர் படிப்படியான  வெற்றிகள்  அதிகரிக்க ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாய் வளர்ந்து நின்றது.அக்கட்சி ஒரு தொடரான வெற்றிகள் மூலம், (அதே நேரம் தலைவர் அவர்கள் பல முறை பி.ஏ.(Pயு) உடன் இணைந்தே செயற்பட்டார் என்பதும், ரணில் என்ற சாரதி இருக்கும் வரை யு.என்.பி(ருNP) என்ற வாகனத்தில் ஏற மாட்டேன் என்று ஆணித்தரமாய் கூறியதும், இங்கு குறிப்பிடத் தக்க விடயங்களாகும்.)பல்வேறு சாதனைகள் மறைந்த தலைவரால் நிகழ்த்தப்படுகிறது. தீகவாபி என்றால்  அஷ்ரப் அல்லது அஷ்ரப் என்றால் தீகவாபி என்றார். யாருமே முன்வராத நிலையில் பல மணி நேரம் பாராளுமன்றில் உரைநிகழ்திக்காட்டினார். கல்வி மற்றும் வேலைவாய்பப்பில் தமது சமுதாயத்திற்கான விகிதாசாரம் இல்லை என்று உரிமைக் குரல் எப்பினார். விளைவாக எண்ணிலடங்காத துறைமுக ஊழியர்களும், தென்கிழக்குப் பழ்கலைக்கழகமும், தென்கிழக்கு துறைமுகமும் எம் சமுதாயத்தை அடைந்தது. பாதைகளைவிட மேதைகள் அவசியம், மேதைகள் வாழ அவர்களுக்கான வாழும் உரிமை அவசியம், என்பதை உணர்ந்து தனியலகு கோரிக்கை முன்வைத்தார். இனவாதிகளுக்கு தக்க பதிலளித்து வாய்மூட வைத்தார்.  இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் சலுகை என்றா பெற்றார். இல்லை அத்தனையிலும்  உரிமைக்கான குரல்கள்  நிறைந்திருந்ததை எம்மவர்களை விட இனவாதிகள் அறிந்திருந்தனர். அதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார். துரதிஷ்டவசமாக அவர் வளர்த்த துப்புக் கெட்ட அரசியல் வாதிகள் இக்கொலைக்கான, ஒரு முறையான விசாரணையைக் கூட கட்டாயப்படுத்தி, கேட்கும் நிலையில் இல்லாமலிருந்தனர். சில வேளை தம் சுயநலங்கள் பாதிப்படையலாம் என்றெண்ணியோ தெரியவில்லை.
அன்றுடன் மரம் வேர் இழந்தது, பக்கவேர்கள் பல பக்கம் சிதற, வாய்ப்புக்காத்திருந்த நாணல்களும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்தது. மரம் நிலை குலைந்து வீழும் தறுவாயில் கிளைகளில் தொங்கும் தலைவர்களும் நிழலில் நிற்கும் மக்களும் தத்தமது பாதையில் நகர்கின்றனர்.வீழும் போது எல்லோரும்தான் பாதிப்படைவோம் என்பதை மறந்து.

இது இவ்வாறிருக்க இன்றைய தலைவர்களாய் தங்களை சித்தரித்துக் கொள்ளும் திருவாளர் அமைச்சர் ரிஷாட் மற்றும் திருவாளர் அமைச்சர் ஹகீம் ஆகிய இருவரும் பெற்ற உரிமைகள் என்ன?? என்று அவர்களாவது முன்வந்து சொல்ல வேண்டும். காரணம் பார்த்து விளங்க எதுவும் இல்லை என்றே எண்ணத்தோண்றுகிறது. சிம்ம சொப்பணமாக விளங்கிய மறைந்த தலைவருக்கு வராத சதியான, குமாரி குரே தற்போதைய தலைவருக்கு மட்டும் வந்து நின்றதும், கடந்த ஆட்சியில் பொதுபலசேனவால் மற்றைய தலைவரின் அலுவலகம் தாக்கப்பட்டதையும், அதை தட்டிக் கேட்க திராணியற்று மஹிந்தவிடம் வாங்கிக் கட்டியதையும், உரிமை அரசியல் என்பதா? அல்லது எச்சி முள்ளுக்கு வாலாட்டும் நிலையில் பெறும் சலுகை அரசியல் என்பதா? இந்த பொது பலசேனாவின் கொட்டத்தை, மறைந்த  தலைவர் போன்ற ஒருத்தர் எப்படி கையாண்டு இருப்பார் என்று நீங்கள் உள்மனதிலாவது கேட்டுக் கொள்வதில்லையா? தீகவாபியை உரிமை கொண்டாடியபோது, மறைந்த தலைவருக்கு முன் நிற்கமுடியாத இனவாதிகள் தற்போதைய மாற்றுத்தலைவரை படாத பாடு படுத்துவதையும், அதை தமது பிரதேசமக்கள் பிரச்சினையாக பாராது தமது இனப்பிரச்சினையாக மாற்றுத்தலைவர் உட்பட  பலரும் பிரச்சாரம் செய்வதையும்  இந்தப்பிரச்சினையில் மௌனமாய் இருந்து மரத்தலைவர் காட்டிக் கொடுப்பதையும் என்னவென்பது அல்லது எதற்காக என்பது ? காரணம் அங்கு மூன்று இன மக்களும் குடியேறுகின்றதாக தகவல் உள்ளது. நீங்கள் அரசியலுக்காக முட்டிக் கொள்வதும் கள்ள மௌனம் சாதிப்பதும் எமது சமுதாயத்திற்கு மறைமுகமாக வெட்டப்படும் குழி என்பது புரியவில்லையா? ஆளுக்கொரு பக்கம் இழுத்தீர்கள்  தீர்மானிக்கும் சக்தியை இழந்தீர்கள் பின்னர் ஒருவரை ஒருவர் வீழ்த்த முயற்சித்தீர்கள்  சமுதாயத்தை பிளவு பட வைத்திர்கள். தற்போது யார் பெரியவர் என்று காட்ட சமுதாய பிரச்சினைகளை இனவாதிகளுக்கு தீனியாக  அடகுவைத்து அரசியல் விளம்பரம்  செய்கிறீர்கள். ஒருவர் செய்வதை மற்றவர் தடுக்க காட்டிக் கொடுப்பும் செய்கிறீர்கள். ஏன் தற்போது நீங்கள் கனதி அற்ற மனிதர்களாக பாராளுமன்றத்தை நிரப்பிக் கொண்டிருப்பது  சிந்திக்கும் மனிதர்களுக்கு புலப்படவில்லை என்றா நினைத்துக்  கொண்டிருக்கிறீர்கள். இதற்கு பாராளுமன்ற உருப்பினர் முஜிபுர்ரஹ்மானுக்கு வீழ்ந்த அடிகளைப்பற்றி ரணில் பேசியதாக வெளிவந்த தகவல்கள்தான் சாட்சி. இறுதியில் பாதிப்படையவது ஒட்டுமொத்த சமுதாயமுமே. ஆனாலும் ஒரு வேடிக்கை அண்மையில் வந்த அமெரிக்க பெண்மணியுடன் இருவரும் ஒன்றிணைந்து பேசியதும் பின்னர் இரண்டு தலைவர்களுமாய் மிக நெருக்கமாய் இணைந்து புகைப்படம் எடுத்ததும் அரசியலுக்கப்பாலான உறவாக நிச்சயமாக ஏற்கமுடியாது. அதற்கும் உங்களிடம் ஒரு பதில் இருக்கும் அதாவது நாம் பேசியது நிச்சயமாக முஸ்லிம் சமுதாய நலனைப்பற்றித்தான் என்று. ஏற்கனவே இப்படி வார்த்தைகளை நிறைய கேட்டு சலித்துவிட்டது . இதை யார் தட்டிக் கேட்பது என்றிருந்த வேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற  ஒன்றை சில புத்தி ஜீவிகள் கொண்டுவந்தார்கள் இறுதியில் அதையும் இந்த கூட்டத்தின் குழியில் புதைத்துவிட்டார்கள். எல்லாமே முடிந்துவிட்டது போல் ஒரு உணர்வு எழுகிறது. யாரைக்குற்றம் சொல்வதென்றே புரியவில்லை. இறுதியாக ஒரு சமுதாயம் தன்னை தனே மாற்றாதவரை நாம் அந்த சமுதாயத்தை மாற்றப்போவதில்லை என்ற கருத்துப்பட வரும் இறைவாக்குத்தான் விடையாக நிற்கிறது சிந்திக்கும் மக்களை நோக்கி. காலம்தான் பதில் சொல்லும்  ஒரு புதுமாற்றம் பற்றி. எம் உரிமைகள் வெல்ல இழிவான சலுகைகள் ஒழிய புதிய தொரு சக்தி பரிணமித்தால் அன்றி விடிவு என்பது ஒரு கானல் நீர்தான். யா அல்லாஹ் எம் சமுதாயத்தில் மாற்றம் ஒன்றை வேண்டும் மனிதர்களில் எம்மையும் சேர்ப்பாயாக. ஆமீன்.

சிலோன் முஸ்லிம் ஆசிரிர் பீட ஆசிரியர் றிஸ்வி
Previous Post Next Post