Top News

களமிறங்க தயங்குவது மட்டுமல்லாது நக்கலடிக்கும் எண்ணத்துடன் முஸ்லிம்கள்



அலெப்போவில் இடம்பெற்று வரும் நெஞ்சை உறைய வைக்கும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி, இன்று மாலை கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படமே இது. 2016.12.16


செயல்வாதத்தின் (Activism) மீது பெரிய ஈடுபாடில்லாத, மிகவும் சொற்பமான செயற்பாட்டாளர்களையே கொண்டுள்ள ஒரு சமூகம் நம்முடையது. நமது தலைவிதியை நாம்தான் மாற்றி எழுத வெண்டும். அந்த வகையில் இன்றைய நிகழ்வை திருப்திகரமான ஒரு நகர்வாகக் கொள்ளலாம்.
இது இப்போது தேவையில்லாத விடயம். இங்கே குடைபிடித்து அலெப்போவில் என்ன கிழிக்கப் போகிறீர்கள் என்று கொச்சையாகக் கேட்டோரும் உள்ளனர். அவர்களுக்கு புன்னகையைத் தவிர நம்மிடம் வேறு பதில்கள் இல்லை.
ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் விக்ரர் ஐவனை, ஒருமுறை நேர்காணச் சென்றிருந்தோம். அப்போது அவர் எங்களிடம் கேட்ட ஒரு கேள்வி இன்னும் மறக்காமல் மனசில் ஆழப் பதிந்திருக்கிறது.
இந்த நாட்டில் சிங்கள இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் போராடினார்கள். ஆனால், முஸ்லிம் இளைஞர்களை ஆர்ப்பாட்டங்களிலோ வீதியிலோ ஏன் காண முடிவதில்லை என்று அவர் கேட்டார். அது வெறும் கேள்வியல்ல. நம் சமூகத்தைப் பற்றிய மிகத் துல்லியமான விமர்சனம்.
இத்தனைக்கும் அவர் அகிம்சை வழியை விரும்பும் ஒரு காந்தியவாதி. உங்களிடம் போர்க்குணமுள்ள இளைஞர்கள் இல்லையா என்பதுதான் அவர் கேட்ட கேள்வியின் உண்மையான அர்த்தம். அன்று அந்தக் கேள்விக்கு என்னிடம் விடை இருக்கவில்லை. ஆனால், இன்று விடையிருக்கிறது.
மேற்கு நாடுகளில், தமது கோரிக்கையை வலியுறுத்தி அட்டைகளை ஏந்தி நிற்கும் நான்கைந்து பேரை அடிக்கடி ஊடகங்களில் கண்டிருக்கிறேன். எண்ணிக்கையை விடவும் கொள்கையும் நிலைப்பாடுகளுமே முக்கியமானது என்ற அவர்களது மனவுறுதி, அடிக்கடி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
சிராஜ் மசூரின் முகப்புத்தக பதிவிலிருந்து பெறப்பட்டது
Previous Post Next Post