முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் இதுவரை தேவையான திருப்தியான சட்டங்கள் என்ற இலக்கை அடையவில்லை என்பது தான் இங்கு எழும் பெரும் பிரச்சினையாகும். முஸ்லிம்களிடையே இது பற்றிய விவாதங்களும் ஆய்வுகளும் மிகக்குறைவாக நடந்துள்ளன.
1770 களிலிருந்து தனியார் சட்டத்தில் அதுவும் விவாகம், விவாகரத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு அவை மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ச்சியான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.
1770 களிலிருந்து அடுக்கடுக்காகச் சீர்திருத்தங்கள் நடந்தும் தேவையான இலக்குகள் எட்டப்படவில்லை. சட்ட ரீதியிலும் சமய ரீதியிலும் மனித உரிமைகள் ரீதியிலும் தேசத்தின் சட்டங்கள் என்ற பார்வையில் இருந்தும் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன.
வரலாற்று ரீதியில் டச்சுக்காரர் இலங்கை முஸ்லிம்களின் அங்கீகாரத்துடன் அமுல் செய்த சட்டத்தில் பத்தாவியாவின் முஸ்லிம் சட்டங்களின் அடிப்படைகள் பேணப்பட்டுள்ளன. இன்று இந்தோனேசியாவில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. புதிய மாற்றங்களுக்கான கோரிக்கைகள் அங்கு முன்வைக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்தோனேசிய அரசும் சமயமும் பெண்களின் சுதந்திரத்தைப் பாதித்து வருவதாகவும் பெண்களின் தகுதிகளும் பால்நிலை சமத்துவமும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. சட்டத் துறையில் பால் நிலை சமத்துவமின்மை பாரிய பிரச்சினை என்றும் அவ்வாய்வுகள் கூறுகின்றன.
சரியாகக் கூறுவதாயின் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரச்சினைகளும் இத்தகைய குறைபாடுகளைத்தான் வெளிப்படுத்துகின்றன. அதைத் தான் நாம் இன்று எமது சமூகத்தில் விவாதப் பொருளாக்கி இருக்கிறோம்.
சிந்தி முஷ்தா மூவியாவின் "நீதியான திருமணம் சட்டம்: இந்தோனேசியப் பெண்களை வலுவூட்டுதல்” என்ற கட்டுரையில் குடும்பச் சட்டச் சீர்திருத்தத்திற்கான தேவைகள் என்ற பிரிவில் பின்வரும் கருத்து கூறப்படுகின்றது. இஸ்லாமிய நாடுகளில் குடும்பச் சட்டங்கள் சீர்திருத்தப்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் தரப்படுகின்றன.
1.பல இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. அதனால் ஒருமைப்பாடான சட்டம் தேவை.
2. பெண்களின் நிலையை அபிவிருத்தி செய்யும்படியான கோரிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடிய மாற்றங்கள்.
3. உலகமய சமூகத்தின் முன்னேற்றமான நடைமுறைக்கேற்றதான கருத்துகளை கவனத்திற் கொள்ளுதல்.
குடும்பச் சட்டங்களில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்கள் எவை என்பதை தாஹிர் முஹம்மதின் ஆய்வுக் கட்டுரையில் இருந்து சிந்தி முஷ்தா பின்வரும் குறிப்பைத் தருகிறார்.
திருமணம் கோட்பாட்டு ரீதியான விளக்கம், திருமணம் செய்வதற்கான வயதெல்லை, தந்தை அல்லது ஆண் உறவினரின் மணப் பெண்ணுக்கான வலி அதிகாரத்தின் வகிபாகம், திருமணப் பதிவு திருமணத்திற்கான நிதித் தகைமை, பலதார மணம், வீட்டு வருமானம் விவாகரத்துத் தொடர்பில் ஆணின் உரிமை மீதான வரையறை, விவாகரத்தின் பின்னர் கணவனதும் மனைவியினதும் கடப்பாடுகள், சமய நன்கொடை தொடர்பிலான பிரச்சினைகள் என்று தாஹிர் மஹ்மூத் 13 பிரச்சினைகளை இனங்கண்டு தனது ஆய்வில் கூறியுள்ளார்.
இப் பதின்மூன்று அம்சங்களும் இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டப் பிரச்சினையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகவே அமைந்துள்ளன. இக் கட்டுரையில் இதனை ஒரு முன்னோட்டமாகக் கொண்டுதான் இலங்கை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட வரலாற்றையும் அங்கு எழும் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ளப் போகிறோம்.
1951 ஆம் ஆண்டுச் சட்டம் பல குறைபாடுகளைக் கொண்டதென்றும் பல தவறான நடைமுறைகளுக்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதென்றும் புதிய தேவைகளை கருத்திற்கொள்ளாத சட்டமென்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கும் 1951 ஆம் ஆண்டு திருமண விவாகரத்துச் சட்டப் பிரச்சினைகளுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் இல்லை. ஷரீஆவும் நவீன சீர்திருத்தங்களும் பற்றிய கருத்து இஸ்லாமிய உலகம் முழுக்க இன்று பரவி வருகிறது.
1951 இலங்கைச் சட்டத்தில் திருமண வயதெல்லையில் தற்போதுள்ள சிறுவர் திருமணம் பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தவிர நியாயமற்ற விவாகரத்து, திருமண பந்தத்திற்குள் நிகழும் வன்புணர்வு, பலதார மணம் எனப் பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் தொடர்பில் 1951 ஆம் ஆண்டுச் சட்டம் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டுகள் குறைபாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கில்தான் 2009 இல் குறைகள் கண்டறியப்பட்டு தீர்வுகளையும் சீர்திருத்தங்களையும் முன்வைக்கும் வகையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூஃபின் தலைமையில் ஒரு குழுவை அரசாங்கம் அமைத்து ஏழு வருடங்களாகியும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இது ஏன்?
சலீம் மர்சூஃப் இக் குழுவுக்குத் தலைமை தாங்க எல்லாத் தகுதிகளும் உள்ளவர். முக்கியமாக சீர்திருத்தம் தேவை என்பதில் உறுதியான கருத்துள்ளவர். அவருடன் நேரில் பேசும்போதும் அவரது கட்டுரைகள், நூல்கள் மூலமும் இவற்றை நாம் அறிந்து கொள்கிறோம்.
ஷரீஆவுக்கு ஏற்ற விதத்திலும் இஜ்திஹாத் மூலமும் முன்னேற்றமான கருத்துகளை உலமாக்களிடமிருந்து அவரும் அவரது குழுவும் எதிர்பார்த்திருந்ததாக நான் அறிந்தேன். சீர்திருத்தங்கள் நடைபெற வேண்டும்.
சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் எல்லாத் தரப்பினரதும் அங்கீகாரமும் இருப்பது நல்லது என்றும் அக்குழு கருதியதாகவும் தெரிகிறது. ஒரு வகையான அழுத்தம் குழுவிற்கு இருந்ததாகவும் உணர முடிகிறது.
இந்தச் சிந்தனைகளில் இருக்கும்போது தான் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 2013 ஆம் ஆண்டு உரையை அண்மையில் 'விடிவெள்ளி' பத்திரிகையில் படிக்கக் கிடைத்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் நீதி அமைச்சராக இருக்கும்போது புத்தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காதி நீதிமன்ற கட்டடக் கையளிப்பின்போது முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்சினை குறித்த உரையினையே ரவூப் ஹக்கீம் ஆற்றியிருந்தார்.
அவர் ஆற்றிய நல்ல உரைகளில் ஒன்று அது. பிரச்சினையைத் தெளிவாகவும் சரியாகவும் அவ்வுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தக் குழுத் தலைவர் சலீம் மர்சூப்ஃபிற்கு இருந்த சீர்திருத்தம் அவசியம் என்ற நோக்கும், பழைய சட்டத்திலிருந்த குறைபாடுகள் பற்றிய சலீம் மர்சூப்ஃபின் கவலையும் ஹக்கீமுக்கும் இருந்தது. இருவரும் சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள். புதிய தலைமுறைக்குரிய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்க விரும்புபவர்கள் என்பதும் இதில் வெளிப்படையாகத் தெரிந்தது.
“இந்த நாட்டின் நீதி, நிர்வாகம் குறித்த பிரச்சினைகளில் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் உள்ளன" என்று தான் ஹக்கீமின் உரை ஆரம்பமாகிறது. இது போதுமானது. ஏனெனில் இது தான் முக்கியமானது. போதிய விளக்கமும் பரந்த வாசிப்பறிவும் இன்றி அவசர முடிவுகளுக்குச் சில பிரிவினர் சென்றிருப்பது கவலை தருகிறுது. “இதில் பிரச்சினைகள் உள்ளன” என்று கூறியது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரல்ல. இந்த நாட்டின் முன்னாள் நீதியமைச்சர்.
“முஸ்லிம் விவாக, விவாகரத்துச சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து அச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயமாகும்” என்றும் ஹக்கீம் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹக்கீம் பின்வரும் விடயத்தை சுருக்கமாகக் கூறியுள்ளார்.
(விவாக, விவாகரத்து சட்டங்களில்) அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இச்சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் (அழுத்தம் கட்டுரையாசிரியரால் இடப்பட்டது) செய்யப்பட வேண்டியிருந்தது.
நடைமுறையில் இருந்த 1951 ஆம் ஆண்டுச் சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான் என்பது பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களாலும் பல அறிஞர்களாலும் அடிக்கடி முன்வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும்.
நீதியமைச்சராக இருந்தபோது தனது அமைச்சுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கும் வந்த முறைப்பாடுகளைப் பார்த்து தாம் கவலையடைந்ததாகவும் ஹக்கீம் கூறுகிறார். குறிப்பாக காதி நீதிமன்ற அலுவல்கள் சம்பந்தமான விடயங்களில் பெண்கள் எதிர்நோக்குகின்ற உள ரீதியான பாதிப்புகள் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
ஷரீஆ தொடர்பில் விட்டுக் கொடுக்கவே முடியாதென்று மரபுவாதிகள் வழக்காடும் திருமண வயதெல்லை பற்றி ஹக்கீம் பின்வருமாறு கூறியுள்ளார். திருமணம் புரிய வேண்டிய வயதெல்லை சம்பந்தமாக சாதாரண (பொது) திருமண கட்டளைச் சட்டம் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் என்பவற்றுக்கு இடையே முரண்பாடுகள் உள்ளன. இதனை நாம் சரியான தீர்வுகளுக்குட்படுத்தாவிட்டால் இன்று தலைதூக்கியுள்ள (2013 இல்) தீவிரவாத, இனவாத சக்திகள் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இதைப் பயன்படுத்தக்கூடும் என்று தான் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெண்கள் பூப்பெய்திய அதாவது பருவ வயதெய்திய உடனேயே மணம் செய்து கொள்ளலாம். என்ற ஓர் அங்கீகாரம் இஸ்லாத்தில் இருந்தாலும் தீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் பலியாகாது. சரியான வயதெல்லை எது என்பதை ஆராய்ந்து நாம் முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை வயதெல்லை 16 ஆக அமையலாமா என்று ஒரு தொகுதி முஸ்லிம்கள் சிந்திப்பது பற்றியும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுச் சட்டம் 18 வயது என்று கூறுகின்றது. ஷரீஆ சட்டங்கள் பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளுமின்றி இதனைச் செய்ய வேண்டும். இந்த அச்சம் இந்த ஆணைக்குழு உறுப்பினர் சிலரிடம் இருப்பதாகத் தான் உணர்வதாகவும் ஹக்கீம் தனது புத்தளம் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சற்று மறைமுகமாக ஆனால் உண்மையான நிலைமைகளை ரவூப் ஹக்கீமின் புத்தளம் உரை சுட்டிக்காட்டுகின்றது.
சர்ச்சைகளையும் கருத்து முரண்பாடுகளையும் எவ்வாறு வெல்வது? எவ்வாறு அடுத்த தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக இருக்கக் கூடிய முடிவுகளை இஸ்லாமிய வரம்புகளுக்குள்ளிருந்து எடுப்பது? உண்மையில் ஒரு சவாலான விடயமாகும்.
“முஸ்லிம்களின் நிலையும் சீர்திருத்தங்களும்” என்ற கட்டுரையில் 1990 ஆம் ஆண்டில் தற்போதைய தனியார் சட்ட வழிகாட்டுதலால் முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகள் மேலும் சிக்கலடைந்திருப்பதை சலீம் மர்சூஃப் எடுத்துக் காட்டியிருந்தார்.
சில விடயங்களில் இலங்கை முஸ்லிம் பெண் அவளுக்கான உரிமைகள், அதிகாரங்களைச் செயலூக்கம் உள்ள வகையில் அனுபவிக்கும் வாய்ப்பு அவளுக்கு இல்லை என்று அக்கட்டுரையில் கூறுகிறார்.
1951 ஆம் ஆண்டு சட்டத்தின் வழி எழுந்துள்ள பெண்களின் திருமண வயதெல்லைப் பிரச்சினை, தலாக்கின் பின்னர் மனைவிக்கான பராமரிப்புப் பணம் வழங்குவதில் உள்ள பிரச்சினை என்று பல பிரச்சினைகளை ஆராய்ந்து ஷரீஆவினால் பெண்கள் அடையக்கூடிய பலன்கள் கூட தற்போதைய நிலையில் தடைப்பட்டிருக்கும் விதத்தை உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்.
சிறுவர் திருமணம் சரியானதா? அது ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்ன என்பது பற்றியும் சலீம் மர்சூப் ஆராய்ந்துள்ளார். முஹிய்யத்தின் பாவா வழக்குத் தொடர்பில் ஆராய்ந்த காதிச் சபை கடுமையான தொனியில் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளது.
"இந்த வழக்கில் பதிவாகியுள்ள சாட்சியங்கள் மூலம் இலங்கையில் சில பாகங்களில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் சிறுவர் திருமணம் நிகழ்வது தெரியந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள உயர்ந்த அக்கறை காரணமாக இந்தச் சமூகத்தீமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கூறக் கடமைப்பட்டுள்ளோம்”
“சிறுவர் திருமணமும் முஸ்லிம் தனியார் சட்டமும்” என்ற தலைப்பும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் சிறுவர் திருமணத்திற்கு அங்கீகாரம் தரப்பட்டுள்ளது என்ற கருத்தும் இன்று நான்கு சுவர்களுக்குள் பேசப்படும் விடயங்கள் அல்ல. ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல இலங்கைப் பாராளுமன்றத்திலும் பேசப்படும் விடயமாகிவிட்டது.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் காணப்படும் சிறுவர் திருமணத்திற்குத் தீர்வுகள் வேண்டும் என்ற தொனியில் இன்று பிரச்சினைகளை ஆராய்ந்து ஷரீஆவினால் பெண்கள் அடையக்கூடிய பலன்கள் கூட தற்போதைய நிலையில் தடைப்பட்டிருக்கும் விதத்தை உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் காணப்படும் சிறுவர் திருமணத்திற்குத் தீர்வுகள் வேண்டும் என்ற தொனியில் இன்று பிரச்சினை பாராளுமன்ற உரையாடல்களிலும் ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
M.S.M.ANAS
பேராதனை பல்கலைக்கழகம்,மெய்யியல் துறை பேராசிரியர்