எம்.எல்.சரிப்டீன்
அமெரிக்க சக்திகள் இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காக முயற்சிகள் பல செய்த போதிலும், குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மூலமாக அதே நிமிடத்தில் பல கோடான கோடி குர்ஆன்களை ஆக்க முடியுமான சக்தியை எமக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான் என மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமாசபைத் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) கூறினார்.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி உமர் இப்னு அஹ்மத் இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த அல்ஹாஜ் ஏ.எல்.உமர்லெவ்வை தனது சொத்தில் 1/3 ஒரு பங்கை 'வக்பு' செய்து உமர் இப்னு அஹ்மத் இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம் எனும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தை தனது தலைமையில் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், கல்விச்சபை செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.அக்ரம் (நழீமி), அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமாசபைத் தலைவர் மௌலவி எம்.எம்.ஏ.அப்துல் லெத்தீப் (பஹ்ஜி), ஜம்மியத்துல் உலமாசபை உப தலைவர் எம்.எம்.கலாமுள்ளா (றசாதி), பள்ளிக்குடியிருப்பு ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம்.அஷ்ரப் (ஷர்கி) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், புதிய கல்வி நடவடிக்கைக்கான கட்டடத்திற்கு அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமாசபைத் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) தொடர்ந்து கூறுகையில் - அல்லாஹ் கொடுத்த செல்வங்களில் இருந்து அவர்கள் தங்களது பொருளாதாரங்களை வக்பு செய்யவேண்டும். அந்தப் பொருளாதாரங்களை மற்றவர்களுக்காக மனம் திறந்து கொடுக்கவேண்டும். நீங்கள் விரும்பக்கூடிய பொருளாதாரங்களில் இருந்து அல்லாஹ்விடத்தில் நன்றியை பெறுவதாக இருந்தால் அவனுடைய பாதையில் உங்களுடைய சொத்து, சுகங்களை கொடுத்தாகத்தான் வேண்டும். அப்போது அல்லாஹ்வின் நன்றியைப் பெற்றவர்களாக ஆக முடியும். இந்த உமர்லெவ்வை ஹாஜி அவர்கள் தனது சொத்தில் மிகப் பிரதானமான ஒரு இடத்தை குர்ஆனுக்காக, ஈமானுக்காக, அறிஞர்கள் உருவாகவேண்டும் என்பதற்காக கொடுத்துள்ளார்கள். நழீம் ஹாஜியார் அவர்களைப் போன்று இந்த நாட்டு முஸ்லிம்களின் கல்விக்காக பங்களிப்பு செய்த தனவந்தர்களின் வரிசையில் அல்ஹாஜ் உமர்லெவ்வை அவர்களும் இடம்பிடித்துள்ளார்கள். இவருக்காக அனைவரும் துஆச் செய்யவேண்டும்.
சேமித்துவைக்கக்கூடிய செல்வங்கள், தங்கம், தோட்டம், துறவுகள், வயல்கள், கால்நடைகள் அனைத்தையும் விட ஈமானும், குர்ஆனும்தான் மிக உயர்ந்தது மேலானது என்பதாக அல்லாஹ் மிக அழகாக சொல்லிவைக்கிறான். எவ்வாறான சம்பவங்கள் யுத்தங்கள் இடம்பெற்ற போதெல்லம் அல் குர்ஆனை எமது குழந்தைகளைக் கொண்டு குர்ஆனை மனனம் செய்தவர்களைக் கொண்டு ஹாபிழ்களைக் கொண்டு அல்லாஹ் குர்ஆனை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி வந்து ஹாபிழ்களை உருவாக்கிய, கற்றுக்கொடுத்த அல்லது உருவாக்குவதற்கு வசதிகளை செய்து கொடுத்தவர்களுக்கு என்ன நல்ல கூலிகள் உண்டு என கேட்டார்கள். அதற்கு முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதற்கு இவ்வளவுதான் என்று மட்டுப்படுத்திச் சொல்ல முடியாது என்றார்கள். அதே போல எந்த வீடுகளில் குர்ஆன் ஓதப்படவில்லையோ அந்த வீடுகளில் வறுமை தாண்டவமாடும், நெருக்கடிகள் உருவாகும். குர்ஆன் ஓதப்படும் வீடுகளில் பறகத் உண்டாகும், செல்வங்கள் கொழிக்கும், விளைச்சல் அதிகரிக்கும் எனவே இவ்வாறான கல்வி நிறுவனத்திற்கு உதவிய அக்கரைப்பற்று உமர்லெவ்வை ஹாஜி அவர்களுக்கு அனைவரும் துஆ செய்வோம் என்றார். இதன்போது குடும்பம் சார்பாக சுங்க உத்தியோகத்தர் ஏ.பி.இஸ்ஸடீன், உமர்லெவ்வை ஹாஜிக்கு பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார்.