Top News

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இனவாதத்திற்கு எதிராக இணைந்து போராடலாமா?




அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இந்த நாட்டில் நீண்ட காலமாகவே இனவாத சிந்தனைப் போக்கு மேலோங்கியுள்ளது. சிங்கள இனவாதம் மட்டுமின்றி தமிழ் இனவாதமும் உண்டு. முஸ்லிம்கள் இந்நாட்டில் சிறுபான்மையாக இருந்தும் கூட சில இடங்களில் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களிடம் கூட இனவாதப் போக்கு வெளிப்படலாம். எனவே, இனவாதம் என்பது முற்று முழுதாக ஒழிந்து போகாது என்ற ஒரு யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்து இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் அவர்கள் இருபக்க இனவாத நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளனர். ஆயுதம் தூக்கிய தமிழ் இனவாதத்தால் அவர்கள் இழந்த உயிர், பொருள்;, சேதம் என்பது அளவிட முடியாததாகும்.

இந்த சூழலில் இந்நாட்டில் மீண்டும் இனவாதச் சிந்தனை மேலோங்கியுள்ளது. நாட்டின் ஜனாதிபதியின் சிந்தனையில் கூட இனவாதிகளின் கருத்துக்கள் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியாக ஒரு பக்க சிந்தனை அவருக்கு முன்வைக்கப்படுவதால் அவர் கூட இனவாத சிந்தனையால் ஈர்க்கப்படலாம்.

இந்த சூழ் நிலையி;ல் இலங்கை சிறுபான்மை சமூகங்கள் இனவாதத்திலிருந்து தமது இருப்பையும் உரிமைகளையும் காத்துக் கொள்ள இணைந்து போராடினால் என்ன? என சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களும் இணைந்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடினால் ஒரு வேளை தீர்வு கிடைக்குமா? அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பெரும்பாலும் இனவாதம் தூண்டப்படுகின்றது.

எனவே, அரசியலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் இந்த இனவாதப் போக்குகளை அரசியல் ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவேனும் அரசு தடுக்க அல்லது கட்டுப்படுத்த முனையும் அல்லவா என்ற சிந்தனை மெல்ல மெல்லத் தலை தூக்குகின்றது.

தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன. தமிழ் முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களை இழக்கும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.

நாம் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகள்தான். இருப்பினும் முஸ்லிம்களும் தமிழர்களும் கள்ளத் தோணிகள் என்றும், அவர்கள் விருந்தாளிகள். நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதைப் பெற்றுக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கக் கூடாது என்றும் கூறப்படுகின்றது. அதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நாட்டில் சிங்கள மேலாதிக்கம் தொடர்ந்தும் இருக்க வேண்டும். பௌத்த மதத்தின் மேலாதிக்கம் இருக்க வேண்டும். எங்கும் சிங்கள மக்கள் சிறுபான்மையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லா சிங்கள கட்சிகளும் ஒரே மனநிலையில் இருப்பதாகத்தான் தெரிகின்றது. இச்சூழலில் தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இணைந்து தாம் சந்திக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் எமது பிரச்சினைகள் ஒரு வகையில் கரிசணை கொள்ளப்படலாம். இருப்பினும் இதிலும் பல சிக்கல்கள் உள்ளன.

கடந்த கால யுத்தம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறவில்லை. விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் அகதி வாழ்வு இன்னும் முற்றுப் பெறவில்லை. முஸ்லிம்கள் தமது வாழ்விட உரிமையை முழுமையாகப் பெறவில்லை. சிங்கள மேலாதிக்க சிந்தனை இருப்பது போல் தமிழ் மேலாதிக்க சிந்தனையும் இருக்கின்றது. யுத்தம் இரு சமூகங்களுக்கிடையிலும் ஒரு சந்தேக இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இது சாத்தியமா?

முஸ்லிம்களது அரசியல் அபிலாசைகளும் தமிழர்களது அரசியல் அபிலாசைகளும் வேறுபட்டதாகும்.

குறிப்பாக, தமிழ் அரசியல் சுயநிர்ணய உரிமை, அதிகாரத்தில் பங்கு, சமஷ்டித் தீர்வு என்ற அச்சாணியில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் எம்மை எமது மதக் கடமைகளை நிம்மதியாகச் செய்ய விட்டு விட்டால் போதும். எமக்கு சுயநிர்ணயம், அதிகாரத்தில் பங்கு எல்லாம் தேவையில்லை. எம்மை சும்மா விட்டாலே போகும் என்ற மனநிலை கொண்டது. அதிகாரத்தைக் கேட்டு அரசியலுடன் கை கோர்ப்பதால் ஆபத்துக்களை அதிகம் சந்திக்க நேரிடும் என்ற ஐயம் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படும்.

வட-கிழக்கு இணைப்பு என்பது தமிழ் அரசியலின் இலக்காக இருக்க, வட-கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் மக்களது விருப்பமாகும். கிழக்கு பிரிந்திருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் ஒரு மாகாணத்திலாவது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்ற நிம்மதி இருக்கும். வட-கிழக்கு இணைந்து விட்டால் இலங்கையில் எங்குமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லை என்ற நிலைதான் ஏற்படும். இதை முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள்.

அடுத்து போரினால் ஏற்பட்ட காயங்கள் முஸ்லிம் சமூகம் வடகிழக்கில் சந்தித்த பாடுகொலைகள், கப்பம் கோரல்கள், நெருக்கடிகளால் முற்று முழுதாக தமிழ் சமூகத்தையும் அவர்களுடன் இணைந்து அவர்களுக்குக் கீழ் செல்ல முஸ்லிம் சமூக மயக்கம் கொள்ளும்.

அடுத்து, நீங்கள் தமிழ் மொழியைப் பேசுவதால் உங்களைத் தமிழர்கள் என்று கூறப்படுவதில் என்ன பிரச்சினை என்பது தமிழ் மக்களது மனநிலையாகும். ஆனால், இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி என்பது இஸ்லாமியர் நிலையாகும். இஸ்லாம் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மொழிவாதத்தையும் வரவேற்கவில்லை.

தமிழ் பேசும் முஸ்லிம்கள் தம்மை தமிழர்கள் என அழைத்தால் இலங்கையில் இப்போது சிங்களம் பேசும் முஸ்லிம்களும் உள்ளனர். அவர்கள் தம்மை சிங்களவர்கள் என அழைக்க நேரிடும். அப்படியென்றால் மொழிகளின் அடிப்படையில் தமிழ் முஸ்லிம், சிங்கள முஸ்லிம் என்ற பிளவு ஏற்படும். இதை சிந்தித்த எமது தலைவர்கள் தம்மை தமிழர் என அழைப்பதை அங்கீகரிக்கவில்லை. தம்மை முஸ்லிம்கள் என்றே அழைத்து வருகின்றனர். அதுதான் நியாயமானதும் கூட!

இவ்வாறு தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைவதில் பல தடைகள் உள்ளன. ஆனால், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைதான் இனவாதம். இந்த இனவாதத்தை எப்படி எதிர் கொள்வது? அதற்கு எதிரான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுப்பது? அவற்றை எப்படி சர்வதேசமயப்படுத்துவது? என்பதை ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பதிலாவது ஒரு பொது உடன்பாட்டுக்கு வர நாம் முயற்சிக்கலாம்.

இதே நேரம் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து இனவாதத்தை எதிர்க்கும் போதும் இனவாதம் கூர்மையடையும். தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களை எதிர்க்க ஒன்றிணைந்துவிட்டனர். எனவே, சிங்களவர்களாகிய நாமும் ஒன்றிணைந்து இவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ண அலையை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

எனவே, தமிழர்களும் முஸ்லிம்களும் மட்டும் இந்தப் பிரச்சினையை முன்னெடுக்காமல் நடுநிலையான போக்குள்ள சிங்கள அரசியல் தலைவர்கள், மதகுருக்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள்.... என்பவர்களையும் இணைத்துக் கொண்டு இந்தப் பயணத்தை ஆரம்பிக்கலாம்.

தமிழ் முஸ்லிம் சமூகம் பற்றி இனவாதம் ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்களையும், தப்பெண்ணங்களையும் களைவதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி சிந்திக்கலாம்.

இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் இருக்கும் பெரிய ஆபத்தே இந்த இனவாதம்தான். இனவாம் ஒழிக்கப்பட்டால் நாடு நலன்பெறும், மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் உருவாகும். எனவே, அதற்கான பலமான கூட்டு முயற்சி அவசியமாகியுள்ளது.

ஆகவே, ஜாதி, இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைவரும் இந்த நாட்டு மக்கள் என்பதையும் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் என்ற ஒரே போர்வையில் அவரவர் மதச் சுதந்திரத்தைப் பின்பற்றி ஒற்றுமையாகவும், கண்ணியமாகவும் வாழ ஒன்றிணைவோம். அப்போதுதான் மனிதம் மிளிர்ந்து நாடு வளமும் நலமும் பெறும். ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இந்து சமுத்திரத்தின் முத்தாய் மிளிரும் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இனவாதம், மொழிவாதம், மதவாதம்... போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்பானாக!

Previous Post Next Post