அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரி மற்றும் நீதிமன்ற தண்டப்பண மீளளிப்பை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போது இதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணம் என்பவற்றை மீளளிப்பதற்கு தற்போது பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகள் பற்றியும் அவற்றை துரிதப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்விரு நிதிகளையும் உரிய காலப்பகுதிகளில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தாமதமின்றி கிடைக்கச் செய்வதற்கான பொறிமுறையொன்று வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்களை மாவட்டம் தோறும் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரி மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் என்பவற்றை மீளளிப்பு செய்வதில் ஏற்படும் தாமதங்களை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை இரு வார காலத்தினுள் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆசிய மன்றத்தின் திடட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளக பிரதம கணக்காளர் எச்.எம்.எம், ரஷீட், மாகாண இறைவரித் திணைக்கள வரி மதிப்பீடாளர் எம்.ஐ.எம்.ரூமில், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி அபூபக்கர் உட்பட தெரிவு செய்யப்பட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களும் பங்கேற்றிருந்தனர்.