லத்தீப் பாரூக்
2017 ஜனவரி 20ம் திகதியோடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து அந்த இரத்தக் கறை படிந்த கையோடு அவர் ஓய்வு பெற்றுள்ளார்.
ஒபாமா தனது பதவிக் காலம் முழுவதும் அகண்ட இஸ்ரேல் ராஜ்ஜியத்தின் உருவாக்கத்துக்காக முஸ்லிம் நாடுகளை அழிக்க வேண்டும், முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும்,
முஸ்லிம்களை அகதி முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என்ற யூத இஸ்ரேல் ராஜ்ஜியத்தின் வடிவமைப்புக்கு உயிர் கொடுக்கும் கீழ் படிவு மிக்க ஒரு உண்மையான தொண்டனாகவே பணியாற்றியுள்ளார்.
பராக் ஒபாமாவின் பதவிக் காலம் பற்றி பத்தி எழுத்தாளர் கேர்ணல் வெஸ்ட் என்பவர் இப்படிக் குறிப்பிடுகின்றார் “எட்டு வருடங்களுக்கு முன் உலகம் ஒரு பெரிய கொண்டாட்டத்தில் இருந்தது. அமெரிக்காவுக்கு ஆற்றல் மிக்க ஒரு கறுப்பு இன ஜனாதிபதி கிடைத்துள்ளார் என்ற மகிழ்ச்சியில் உலகம் திழைத்திருந்தது. ஆனால் இன்று நாம் ஒரு அதழ பாதாளத்தின் விளிம்பில் இருக்கின்றோம். உலக வரலாற்றில் மிகவும் சக்திமிக்க ஒரு நாட்டின் அதி உயர் அதிகார பீடத்தின் வீழ்ச்சி நிலைக்கு நாம் வந்துள்ளோம்”.
ஒபாமா இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகுக்கு பூதாகரமாகச் சித்தரித்துக் காட்டினார். தன்னை வெள்ளை மாளிகையில் பதவியில் அமர்த்திய யூத எஜமானர்களைத் திருப்திப் படுத்தவும் தான் பதவியில் அமர்த்தப்பட்டதை நியாயப்படுத்தவும், முஸ்லிம் நாடுகளை அழிக்கும் தனது யுத்தத்தை நியாயப்படுத்தவும் அவர் முஸ்லிம்களை பயங்கரமாகச் சித்தரித்துக் காட்டினார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஐரோப்பிய கூட்டாண்மை நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளின் செல்வங்களைச் சூறையாட வழி வகுத்தார். இங்கு எற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட சமய ரீதியான மோதல்கள் தற்செயலாக நடந்தவை அல்ல. உலக எரிபொருள் வளத்தில் அரைவாசிக்கும் அதிகமானவை மத்திய கிழக்கில் தான் உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.
உதாரணத்துக்கு லிபியா ஆபிரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது. அது உலக அளவில் கூட ஒரு செல்வந்த நாடாக இருந்தது. லிபிய மக்கள் அதி உயர் வாழ்க்கைத் தராத்தை அனுபவித்து வந்தவர்கள். அவர்கள் யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்கவும் இல்லை. இருந்தும் கூட ஒபாமா செழுமை மிக்க லிபியாவை பிரயோசனம் அற்ற பூமியாக ஆக்கும் வகையில் குண்டுவீச்சுக்களை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் லிபியாவை விட்டு ஓட்டம் பிடித்தனர். பயங்கரமான மத்தியதரை கடலை சட்டவிரோதமாக கடக்க முயன்ற நூற்றுக் கணக்கான லிபிய மக்கள் சமுத்திரத்துக்குள் சமாதி அடைந்தனர்.
லிபியாவை அழிப்பதில் ஒபாமாவின் ஆரம்ப கால வெளியுறவு அமைச்சர் ஹிலறி கிளின்டன் பிரதான பங்கு வகித்தார். லிபியாவில் இருந்து தொன் கணக்கான தங்கமும் பில்லியன் கணக்கான டொலர்களும் சூறையாடப்பட்டன.
அதேபோல் சிறியாவும் மிகவும் ஸ்திரமான ஒரு நாடாக இருந்தது. ஒபாமா இஸ்ரேல்,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா என்பனவற்றுடன் இணைந்து அந்த நாட்டின் மீதும் குண்டு மழை பொழிந்து வளம் மிக்க தேசத்தை கட்டாந் தரையாக்கி மக்களையும் அகதி முகாம்களை நோக்கி ஓட வைத்தார். ‘இஸ்ரேலின் நலன் கருதி சிரியாவை அழிக்க வேண்டியது அவசியம்’ என்று ஹிலறி கிளின்டன் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருந்தார்.
ஒபாமாவின் யுத்தங்கள் காரணமாக இன்று இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளில் உறையும் காலநிலையில் அகதி முகாம்களில் அவஸ்த்தைகளை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறு முஸ்லிம்களின் இரத்தக் கறை படிந்த ஒரு யுத்தக் குற்றவாளியாகத் தான் ஒபாமா பதவியில் இருந்து விலகுகின்றார். எவ்வாறாயினும் யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய யுத்த வெறியர்களின் ஊடகங்களும் முஸ்லிம் உலகுக்கு அழிவையும் துயரங்களையும் விட்டுச் செல்லும் ஒபாமாவின் உண்மை முகத்தை சரியான முறையில் வெளிப்படுத்த தவறிவிட்டன. ஒபாமாவின் பதவிக்காலம் ஏமாற்றுத்தனமும் நயவஞ்சகமும் யுத்தக் குற்றங்களும் நிறைந்ததாகவே காணப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு மாறான ஒரு நிலை தான் மேலைத்தேச ஊடகங்களால் வெளி உலகுக்கு காட்டப்பட்டுள்ளது.
தனது சொந்த நாட்டுக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய யூத மற்றும் சியோனிஸ சக்திகளுக்கு ஒபாமா மிகவும் வெற்கக் கேடான விதத்தில் சேவகம் புரிந்துள்ளார். அவரது முதலாவது நியமனம் வெள்ளை மாளிகையின் பிரதான அதிகாரியாக றஹ்ம் எமானுவலை நியமனம் செய்தது. இவர் ஒரு அமெரிக்க யூதர். இவரின் தந்தையான பென்ஜமின் பலஸ்தீன மக்களை படுகொலை செய்த யூத பயங்கரவாத அமைப்பான இர்குன் என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தவர். 1930 களிலும் 40களிலும் பலஸ்தீனத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒரு அமைப்பே இர்குன் ஆகும். ஒபாமாவின் ஆலோசகர் பிக்னிவ் செசின்கி, உப ஜனாதிபதி பிடென் ஆகியோரும் யூதர்களே.
2009ல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஒபாமா 2016ல் மட்டும் சிரியா,ஈhக், ஆப்கானிஸ்தான், லிபியா, யெமன், சோமாலியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளில் 26171 குண்டுகளை பொழிந்துள்ளார். 2015ஐ விட 2016ல் அவர் 3027மேலதிக குண்டுகளை வீசியுள்ளார். வெளியுறவுகளுக்கான சபை என்ற (ஊகுசு) சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன சிந்தனையாளர்கள் அமைப்பொன்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
ஒபாமாவின் உத்தரவின் பேரில் போடப்பட்ட இந்த 26171 குண்டுகளில் 24287குண்டுகள் சிரியாவில் போடப்பட்டுள்ளன. 2016ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளால் சிரியாவில் போடப்பட்ட குண்டுகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 72 குண்டுகள் என்ற அடிப்படையிலும் ஒரு மணித்தியாலத்துக்கு மூன்று என்ற அடிப்படையிலும் இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2016ல் உலகில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் பற்றி நடத்தப்பட்ட மதிப்பீடு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. இந்த குண்டு வீச்சுக்கள் சிரியாவில் மட்டும் இரண்டரை லட்சம் உயிர்களை பலியெடுத்துள்ளன. மேலும் இரட்சக்கணக்கானவர்களை தமது சொந்த இடங்களில் வாழ விடாமல் விரட்டி அடித்துள்ளன.
2017 ஜனவரி 20ல் பதவி விலக முன் பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஒபாமாவை முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் சந்தித்தார். “ஜனாதிபதிகள் மாறுவதற்கு முன் பலஸ்தீன் - இஸ்ரேல் முரண்பாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் காலநேரம் மிகவும் குறுகியதாக உள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் காலக்கெடு ஜனவரி 20ல் முடிவடைய முன் அமெரிக்கா பலஸ்தீனத்துக்கு இராஜதந்திர அந்தஸ்த்தை வழங்க வேண்டும். இந்த இலகுவான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்க வேண்டும்” என்று கிளின்டன் ஒபாமாவுக்கு வழங்கிய குறிப்பில் தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்புச் சபையிலும் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கிளின்டன் கோரிக்கை விடுத்தார். இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒபாமா தனது எட்டு வருட ஆட்சிகாலத்தில் முதற் தடவையாக ஓரிரு வாரங்களுக்கு முன் பலஸ்தீன ஆக்கிரமிப்பு தொடர்பாக இஸ்ரேலை கண்டித்து பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அதை ஆதரித்து இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்டார்.
இதுபற்றி பத்தி எழுத்தாளர் மர்ஜொரி கோஹன் குறிப்பிடுகையில் ‘இஸ்ரேலின் சட்ட விரோத குடியேற்றங்கள் பற்றி ஒபாமா ஆரம்பத்திலேயே முரண் பட்டிருந்தால் அவர் எதையாவது செய்திருக்கலாம். ஆனால் அவர் தனது பதவிக் காலத்தின் வெளியேற்ற வாசல் கதவில் நின்று கொண்டு எடுத்த முடிவு எந்த வகையிலும் பிரயோசனம் அற்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க பிரசாரம் என்ற பிரிவின் பணிப்பாளரும் அரசியல் விமர்சகருமான ஜோஷ் ரூப்னர் ‘ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன காஸா பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளது. பலஸ்தீன பொதுமக்களை கொன்று குவிப்பதற்கும் அவர்களின் வீடுகளையும் ஏனைய நிர்மாணங்களையும் தகர்த்து தரைமட்டமாக்கவும் இஸ்ரேலுக்கு தேவையான ராஜதந்திர பாதகாப்பையும் அமெரிக்கா வழங்குகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அமெரிக்காவின் சட்டங்களை மீறி வருகின்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை தட்டிக் கேற்க அமெரிக்கா தவறியுள்ளதால் யுத்த குற்றங்கள் தொடர்பான விடயங்களே சிக்கலாக மாறியுள்ளன. காஸாவில் காட்டுமிராண்டித் தனமாக ஆயுதங்களை தொடர்ந்து பாவிக்க அனுமதி வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அர்ப்பணத்தோடு பணியாற்றும் என்பதை ஒபாமா அவ்வப்போது நிரூபித்துள்ளார். மனித குலத்துக்கு எதிரான இஸ்ரேலின் எல்லா குற்றங்களுக்கும் அப்பால் ‘இஸ்ரேலின் பாதுகாப்பு என்று வருகின்ற போது நாம் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை’ என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். ஒபாமாவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது போல் இஸ்ரேலின் பாதுகாப்பு விடயத்தில் ஒருபோதும் அர்ப்பணத்தோடு அமெரிக்கா இருந்ததில்லை. ‘இஸ்ரேலைப் போல் வேறு எந்த நணபனும் அமெரிக்காவுக்கு முக்கியம் இல்லை’ என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பத்தாண்டு காலத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா 38 பில்லியன அமெரிக்க டொலர்கள்; பெறுமதியான இராணுவ ஆயுதங்களை வழங்கும் என்று கடந்த செப்டம்பரில் ஒபாமா உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலுக்கு மிக உறுதியான இராணுவ நிதி ஆதரவை வழங்கிய வெள்ளை மாளிகை அதிபர் என்ற பெருமையை ஒபாமா இதன் மூலம் பெற்றுள்ளார். இதனால் “ஆக்கரமிப்பின் போஷகர்” என்று ஒபாமாவை இஸ்ரேல் ஊடகவியலாளர் ஜிடியோன் லெவி வர்ணித்துள்ளார். வருடாந்தம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவி தொகையான 3.1 பில்லியன் டொலரை ஒபாமா தற்போது 3.8 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளார். இந்தத் தொகையானது இதுவரை அமெரிக்கா எந்தவொரு நாட்டுக்கும் வழங்காத வருடாந்த தொகையாகும். பலஸ்தீன மக்களுக்கு எதிரான தனது அக்கிரமங்களை இஸ்ரேல் மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கும்.
ஒபாமாவின் ஆட்சி காலம் பற்றி மற்றொரு பத்தி எழுத்தாளர் டேனியல் லஸாயிரி குறிப்பிடுகையில் “பராக் ஒபாமா அழிவை ஏற்படுத்துபவர் குறிப்பாக மத்திய கிழக்கில் அழிவை ஏற்படுத்துபவர் என்பதை நிரூபித்துள்ளார். வியட்நாம் யுத்த காலத்தின் பின் அண்மைக் காலங்களில் மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட அழிவை போல் வேறு எந்தவொரு பிராந்தியத்திலும் அழிவுகள் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு காரணமானவர் ஒபாமாவே. (இதனை தொடக்கி வைத்தவர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் என்பது குறிப்பிடத்தக்கது)” என்று தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புஷ் ஏற்படுத்திய அழிவுகளுக்கு அப்பால் சிரியா,யெமன், லிபியா என ஒபாமா தனது அழிவுகளை விஸ்தரித்துள்ளார். துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகள் படையெடுத்து ஓடும் அளவுக்கு ஒபாமா நிலைமைகளை மோசம் அடையச் செய்துள்ளார். பயங்கரவாதம் வெடித்துச் சிதறுகின்றது. எல்லா நாடுகளும் யுத்த களங்களாக மாறி வருகின்றன. சமய பிரிவினைவாதம் கட்டுப்பாட்டை மீறிச் செல்கின்றது.
பலஸ்தீன பத்தி எழுத்தாளர் றம்ஸி பாரோட் குறிப்பிடுகையில் ‘ஒபாமாவின் மத்திய கிழக்கு கொள்கை தான் இன்று வரை உலகிலேயே மிக மோசமான கொள்கையாகக் காணப்படுகின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புஷ்ஷின் வலது சாரி கொள்கையை விட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் வெள்ளை மாளிகை பிரவேசத்தின் போது பலரும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இப்போது அதிர்ச்சி அடைந்து காணப்படுகின்றனர். இஸ்ரேலை மகிழ்விக்க அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் வெள்ளை மாளிகை அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசிய தருணத்தில் ஒபாமாவின் நடவடிக்கைகள் ஆபத்தையே விளைவித்துள்ளன.
ஒபாமா நிர்வாகம் பெரும்பாலும் அப்பாவிகளான ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுமக்களைக் கொன்று குவித்தது. அவர்களுள் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொது மக்கள். இருந்தும் உலக மட்டத்தில் அதற்கு எதிராக எந்த எழுச்சியும் ஆர்ப்பாட்டமும் இடம்பெறவில்லை. காரணம் ஜோர்ஜ் புஷ்ஷின் கொலைகளை விட இவை மிக அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதியை விட இன்னொருவர் சிறந்தவர் எனக் கூறும் அளவுக்கு அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் காணப்படுவதில்லை.
ஒபாமா தனக்கு முன் பதவியில் இருந்தவர்கள் விட்டுச் சென்றதை தான் அப்படியே பினபற்றியுள்ளார். நடைமுறையில் தான் சில மாற்றங்கள் காணப்பட்டன. அரசுகளை கவிழ்க்கும் பணியை வழங்கி தரை வழியாக பாரிய படை அணிகளை திரட்டி அனுப்பாமல் தனது எதிரிகளாக கருதப்பட்ட நாடுகளை இலக்கு வைத்து தாராளமாக வான் வழி தாக்குதல்களை அவர் நடத்தியுள்ளார்.
புஷ்ஷின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தைப் போல் ஒபாமாவின் நடவடிக்கைகளும் சம அளவில் நாசத்தை விளைவித்துள்ளன. ஒபாமாவின் யுத்தங்கள் அமெரிக்க தரப்புக்கு மிகக் குறைந்த பாதிப்பை அல்லது உயிர் இழப்பை அல்லது அப்படி எதுவுமே இடம்பெறாத வகையில் வடிவமைக்கப்பட்டன. காரணம் அமெரிக்க தாக்குதல்கள் எல்லாமே பெரும்பாலும் ஆகாய மார்க்கமாக அல்லது ஆளில்லாத விமானங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டவை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் மேற்கொள்ளப்பட்டவை. இதனால் அமெரிக்காவுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் அவை தாக்குதல் நடத்திய தரைகளில் பாரிய பாதிப்புக்களும் இழப்புக்களும் ஏற்பட்டன. மேலும் இவை யுத்தங்களை முடிவுக்கு கொண்டு வராமல் அவற்றை மேலும் நீடித்தன.