Top News

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த மாகாண எதிர்க்கட்சி தலைவர்

எம்.ஜே.எம்.சஜீத்

அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட     விசேட கூட்டம் ஆர். றிம்சான் தலைமையில் றகுமானியாபாத் மீனவர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் துமிந்த பிரபா விக்ரமாராச்சி, உட்பட மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் ஆழ்கடல் மீனவர்கள் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயமாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேசி  தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உதவிப்பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

கோணாவத்தை, கப்பலடி, றகுமானியாபாத் போன்ற துறைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவ வீடமைப்புத் திட்டங்களை நிறைவு செய்தல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஒலுவில் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பற்று வரையான கடற்கரை வீதியினை அமைப்பது எனவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிககப்பட்டது.

கோணாவத்தை, கப்பலடி, றகுமானியாபாத் போன்ற துறைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவ வீடமைப்பு (வாடிகள்) கப்பலடித்துறையில் கூரை சேதமடைந்து காணப்படும் மீனவர் கட்டிடம் மற்றும் கோணாவத்தை கடற்கரை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிலையம் என்பவற்றையும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும்,  மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை  மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளர் துமிந்த பிரபா விக்ரமாராச்சி ஆகியோர் பார்வையிட்டனர். 



Previous Post Next Post