Top News

சீதனம் வழங்கப்பட்டு பள்ளிவாசல்களில் இடம்பெறும் திருமணங்களின் அவலங்கள்




இன்று பெரும்பாலான திருமணங்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது, ஆனாலும் பதிவு, பயான், துஆ, சப்ளஸ் என்று பள்ளியில் இடம்பெறுகிறது. அதற்கு பிறகு நடக்கும் கூத்துக்கள் அனைத்தும் வீட்டில். இந்த கூத்துக்கள் கூட பரவாயில்லை. மாறாக சீதனம் பரிமாறப்பட்ட திருமணம் என்று தெரிந்திருந்தும் பள்ளிவாசல்களில் அது நடைபெறுகிறது. இதுகூட பரவாயில்லை Registration இல் ஒரு பகுதி சீதனம் குறித்து வினவப்பட்டுள்ளது. இதற்கு பெயர் முஸ்லிம் திருமணமா?


இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிடமிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.

வரதட்சணை பேசாத திருமணங்களே இல்லை எனும் அளவுக்கு வரதட்சணைப் பேரம் நடைபெற்று வருகிறது. நாளிதழ், வார, மாத இதழ்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் வரதட்சணையின் விளைவுகளைப் பற்றி அன்றாடம் செய்திகள் இடம் பெறாமலில்லை.வரதட்சணைக்கு எதிராக பலர் குரல் கொடுத்தாலும் வரதட்சணை ஒழிந்த பாடில்லை.

இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது. அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.
மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம்.
அல்குர்ஆன் (25:37)

தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45)

பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு இம்சைப்படுத்தும் மணமகன் வீட்டார் மறுமையில இழிநிலையை எய்துவர் என மேற்கூறிய மறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும், பாதிக்கப்பட்டோரின் மன வேதனையாலும், பிரார்த்தனையாலும் பல்வேறு சோதனைகளை அடைவர்.உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் (ஏக்கப்பெரு மூச்சால் எழும்) பிரார்த்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் அவனது பிரார்த்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி.

மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்ற 4:4 ஆவது இறைக் கட்டளையை மீறிய பாவத்திற்கும் இவர்கள் ஆளாவர். மணமகன் வீட்டார் வரதட்சணையாக கேட்பது அறவே கூடாது ஆயினும் பெண் வீட்டார் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புகளைப் பெறுவதில் தவறில்லை. எனவே இலட்சங்களுக்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக. ஆமீன்.
இன்றையத் திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை யாரும் கண்டுகொள்வதே இல்லை.பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. திருமண விருந்து உட்பட அனைத்து செலவுகளையும் மணமகனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் நடைபெறுவது அப்படி இல்லை, தயவு செய்து வெறும் செயார் லைக் என்று இருக்காமல் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அல்லாஹ் அருள் புரிவான்
Previous Post Next Post