எம்.எஸ்.எம்.ஸாகிர்
மஷுர் மௌலானா 1932 ஆண்டு ஜனவரி, 31 ஆம் திகதி எஸ்.ஐ. செயின் மௌலானா - இஸ்மாலெப்பை போடியார் செனம்பு என்போருக்கு மகனாக, கிழக்கு மாகாணத்தின் மருதமுனை என்னும் ஊரில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை மருதமுனை தமிழ் கலவன் பாடசாலை, அதாவது தற்போதைய அல் - மனார் மத்திய கல்லூரியில் பயின்ற இவர், மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களைப் பெற, தகுதி பெற்ற மூன்று மாணவர்களில் முதலிடத்தை பெற்றுக் கொண்டார்.
என்றாலும் வளரும் பருவத்திலே வறுமை அவரை வாட்டியதால் மீண்டும் மருதமுனைக்கே திரும்பி வந்து பக்கத்து கிராமமான கல்முனையில் அமைந்திருந்த புனித மரியாள் கல்லூரியில் மீண்டும் கல்வியைத் தொடரலானார்.
தந்தையின் வருமானம் சற்று பெருகிவர மீண்டும் மட்டுநகர் சென்று கல்வியைக் கற்றார். மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆசிரியர்களால் நாவண்மை படைத்தவர் என்று போற்றப்பட்டார். நல்ல பேச்சாற்றலும் திறமையும் கொண்ட மஷுர் மௌலானா கல்லூரியின் தமிழ் மன்றத்தின் தலைவராகத் தெரிவாகினார்.
கல்லூரி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம், நிகழ்வில் உரையாற்றிய மஷுர் மௌலானாவின் பேச்சினால் கவரப்பட்டு அவரது வீட்டிக்குச் சென்று அவரது தந்தையிடம் நாம் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி இருக்கிறோம். தமிழ் - முஸ்லிம் உறவுக்கு இலக்கணமாக உங்கள் மகன் திகழ்வதைக் கண்டு அவரை எங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள உங்கள் அனுமதி தேவை" என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை தட்டமுடியாத தந்தை, அனுமதி வழங்கினார். அன்றிலிருந்து அதாவது பாடசாலை வாழ்விலிருந்து தொடங்கியது மஷுர் மௌலானாவின் அரசியல் பயணம்.
சோல்லின் செல்வர் செ. இராசதுரையுடன் இணைந்து மட்டுநகர் சென்று தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு உழைத்தார்.
1954ஆம் ஆண்டு தனது (சாச்சா) சிறிய தந்தை பாரி மௌலானாவின் மகள் புஷ்ரத்துன் நயீமாவை மணம்முடித்தார். இத்தம்பதியிருக்கு கிடைத்த ஏழு குழந்தைகளில் முதலாவது மிபுஹாமி’ என்ற குழந்தை 13 மாதக்குழந்தையாக இருக்கும் போது வபாத்தாகிவிட்டது. அடுத்து பிறந்தவர் மகள் யஸ்மின். அதன் பிறகு அக்ரம், சிஹான், மபாஹிர், இல்ஹா ம், நௌஸாத் என்ற ஐந்து ஆண் பிள்ளைகளுக்கும் தந்தையானார்.
1957 ஆம் ஆண்டு கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம். அன்று தனிச் சிங்கள சட்டம் அமுலுக்கு வந்தபோது இதனைக் கடுமையாக எதிர்த்து தமிழ் பேசும் மக்களுக்காக தமிழரசுக்கட்சி குரல் எழுப்பியது. சாத்வீகப் போராட்டம் வெறியாட்டமாக உருமாறியது. கட்சியின் தலைவர்கள் பலர் வெறியர்களால் அருகே இருந்த பேரையாற்றில் தூக்கி வீசப்பட்டனர். வீசப்பட்டவர்களில் மஷுர் மௌலானாவும் ஒருவர்.
1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போரட்டத்தினால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. நாட்டில் அமைதியை ஏற்படுத்தவென தமிழரசுக் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப்போராளி கள் ஆகியோரைக் கைது செது அரசு வீட்டுக்காவலில் தடுத்து வைத்தது. இதில் மஷுர் மௌலானாவும் தடுத்து வைக்கப்பட்டார்.
அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர்களையும் கட்சியின் தொண்டர்களையும் நன்கறிந்து வைத்திருந்த மஷுர் மௌலானா கட்சி தொடர்பான எந்தப் போராட்டத்திலும் மனங்கோணாது தனது பங்களிப்பை வழங்கினார்.
1947 ஆண்டு சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட
செனட்சபையில் அங்கம் வகித்த இருவருள் மௌலானாவும் ஒருவர். இவர் தனது 35 ஆவது வயதில் அதாவது 1967ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 20ஆம் திகதி செனட்டராகப் பதவியேற்றார்.
அகில இலங்கை முஸ்லீம் லீக்கில் இணைந்த மஷுர் மௌலானா சகல நடவடிக்கைகளிலும் மிகவும் தீவிரமாக உழைத்துச் செயற்பட்டார். முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, கிழக்கு மாகாண மக்களின் தீர்க்கப்படாத காணிப்பிரச்சினை - தீகவாபி பிரச்சினை உட்பட தொடர்ந்து வந்த அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் லீக்கின் குழு முன் சளைக்காது தன் கருத்துக்களை முன்வைப்பார். மஷுர் மௌலானா இல்லாத கூட்டங்கள் அன்று யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இடம்பெற்றிருக்க முடியாது. தமிழினத்தின் தன்மானக் குரலை மீட்டிய போதெல்லாம் அதற்கு குரல் கொடுத்து உணர்ச்சி ஊட்டியவர் மௌலானா. வடகிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுக்கு முதற் பாலமாக வரலாற்றில் தடம் பதித்தவர் மஷுர் மௌலானா.
ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த பங்களிப்பைச் செதுள்ளார். சட்டத்துறையில் பயில வேண்டும் என்ற வேட்கையில் இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற இவரால் சட்டக்கல்லூரியின் இறுதிப்பரீட்ச்சைக்கு அவரது வாழ் நாளில் தோற்ற முடியாமல் போவிட்டது. காரணம் அவர் தடுப்புப் காவலில் இருந்தமையே!
இளைஞர்களின் சக்தியை ஒன்றுதிரட்டி சமூக நலனுக்காக தனியான ஒரு திசை நோக்கிச் செல்வது காலத்தின் தேவை என்ற மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் பிரசாரத்தின் மூலமாக கவரப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். அதில் மேயர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செயப்பட்டார். மரணிக்கும் வரை அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலே இருந்து தனது பங்களிப்பை வழங்கினார்.
கரவாகு வடக்கு கிராமசபையின் தலைவர், கல்முனை மாநகர சபையின் உதவி மேயர், கல்முனை மாநகரசபையின் மாநகர முதல்வர், கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர், செனட் சபை உறுப்பினர், ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர், வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஹோட்டல் கூட்டுத்தாபன பிரதித்தலைவர், ச.தொ.ச. அச்சக பிரதித் தலைவர், மத்திய கடல் சார் பணியக தலைவர், தேசிய வீடமைப்பு அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை - இந்திய முதலாவது செயலர் போன்ற பதவிகளை இவரது காலத்தில் வகித்துள்ளார்.
இவர், சிங்களப் பகுதிகளில் தமிழ் வளர்த்த பெரும் மகன் என்று கூறின் அது மிகையாகாது.
இவரது சேவைகளில் மஷுர் மௌலானா மைதானம், மஷுர் மௌலானா வீதி, பிரேமதாச காலத்தில் நிறுவப்பட்ட மஷுர் மௌலானா வீட்டுத்திட்டம் என்பன குறிப்பிடத்தக்கன.
மஷுர் மௌலானா 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள தனது இல்லத்தில் வபாத்தானார். ஜனாஸா அவரது விருப்பின் பேரில் அவரது பிறந்த இடமான மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருக்கு இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக!