Top News

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு புதிய அரசியலமைப்பிலும் முக்கியம் வழங்குங்கள்



எம் .ஜே.எம். சஜீத்

அரசியலமைப்பின் 16வது சரத்தின் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு புதிய அரசியலமைப்பிலும் வழங்கப்பட வேண்டும். அதே போன்று முஸ்லிம் திருமண விவாகரத்து திருத்தச்சடடத்திற்கு இஸ்லாமிய உலமாக்களின் ஆலோசனைகள் மற்றும் சம்மதம் பெறப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 72வது சபை அமர்வு நேற்று (24) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது அரசியலமைப்பின் 16வது சரத்தின் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு புதிய அரசியலமைப்பிலும் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி தனிநபர் பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் விருப்பத்துக்காகவோ அல்லது வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்காகவோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. அப்படியான மாற்றமொன்று தேவையாகவிருந்தால் உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், மற்றும் புத்திஜீவிகளுடன் கலந்தாலோசனை செய்த பின்னரே அவ்விடயம் பற்றி பரிசீலிக்க முடியும்.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஜீ.எஸ்.பி வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனாயார் சட்டத்தினை திருத்தியமைக்க வேண்டியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான அழுத்தங்களை பிரயோகித்துள்ளது என்றும் தெரிவித்து அதற்காக அமைச்சரவை உப குழுவொன்றையும் நியமித்துள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இதற்கு மாற்றமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டங்களை திருத்த நாம் கோரவில்லை என்றும் அதனை திருத்துவது திருத்தாமலிருப்பது அரசாங்கத்தைச் சார்ந்தது என்றும் சர்வதேச சம்பிரதாயங்களுக்கு அமைய முஸ்லிம் பெண்களின் திருமண வயது எல்லையை 16ஆக உயர்த்துவதற்கு கோரினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையில் நடைமுறையிலுள்ள கண்டி சிங்களவர் சட்டம், யாழ் தேசவலிமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன.

அதன்காரணமாக 1986ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்த்தன இந்த மூன்று சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டுவர குழுக்களை அமைத்தார். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 2009ஆம் ஆண்டு மிலிந்த மொரகொட மற்றும் நீதியரசர் சலீம் மர்சூக்  தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இத்தனியார் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கு எமது உலமாக்களும், புத்திஜீவிகளும் உடன்பட்டுள்ளார்கள்.

தற்போது அமுலில் உள்ள 1951ஆம் ஆண்டின் 16ஆம் பிரிவிலுள்ள சட்டத்தில் கைக்கூலி, சீதனம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதனத்தை இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை எனினும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரிஆவிற்கு மாற்றமான விடயத்திற்கு சட்ட அந்தஸ்து கிடைத்துள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவை எனும் நிலைப்பாட்டில் உலமா சபை இருப்பதாகவும் அறியமுடிகிறது.

குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டமானது 850 வருடங்கள் அமுலில் இருந்து வந்துள்ளதாக பேராசிரியர் எம்.எம் இஸாட் பதிவு செய்துள்ளார். முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசருமான எம்.ரீ அக்பர் போன்றவர்களினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் 1926 முதல் 1929 வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

இச்சட்டம் 1951ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் உலமாக்களின் ஆலோசனைகள் மற்றும் சம்மதம் பெறப்பட வேண்டுமென மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மேலும் தெரிவித்தர்.

முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுகின்ற போது இஸ்லாமிய உலமாக்களின் ஆலோசனைகள் மற்றும் சம்மதம் பெறப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Previous Post Next Post