Top News

வில்பத்து - முஸ்லிம்களுக்கிடையிலான பண்டைய தொடர்பு (முழுவிவரம்)


ஆதில் அலி சப்ரி
மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக செறிந்து வாழ்ந்துவந்துள்ளனர். இது முஸ்லிம்களின் வரலாற்று, சரித்திர பின்னணிகளைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு ஆரம்பகால முஸ்லிம்கள் முத்து குளிப்பு, மீன்பிடி, கைத்தொழில், மந்தை வளர்ப்பு, விவசாயம், மன்னர்கள் காலத்தில் யானைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தல், சேனைப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளனர். முஸ்லிம்களுக்கும் காட்டுக்கும் பிரச்சினை இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு வன விலங்குகளுக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. 
வில்பத்து என்பது 1938ஆம் ஆண்டில் வர்த்தமானி மூலம் அரச காட்டுப்பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் தேசிய சரணாலயமாக மாற்றப்பட்டது. இலங்கையின் முக்கியமான தளமாகவும் கருதப்பட்டது. வில்பத்து சரணாலயத்துக்கு தப்போவ என்ற பகுதியும் இணைந்திருந்தது. சிறிய நீர்த்தேக்கங்கள், குளங்கள் அதிகமாக இருந்த காரணத்தினாலேயே வில்லு பத்துவ என்ற பெயர் வந்துள்ளது. சிறிய வில்லுகள் அதிகமாக இருந்துள்ளது. குளங்களுக்கு பத்துவ என்றே சிங்களத்தில் கூறப்படும்.
மாவட்ட எல்லைகளோடு தொடர்புபடுத்தி பார்க்கும்போது 2012ஆம் ஆண்டு வரை வில்பத்து தேசிய சரணாலயத்துக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் நிர்வாக ரீதியான எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. வில்பத்து சரணாலயத்தின் கிழக்குப் பகுதி அநுராதபுர மாவட்டத்திலும், வில்பத்து வடக்கு தெற்கு ஆகியன புத்தளம் மாவட்டத்திலும் இருக்கின்றது. 2009ஆம் ஆண்டின் பின்னர்
வேட்பால், மாவில்லு என்ற முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகள் வில்பத்து சரணாலயத்தின் ஒதுக்கீடாக வர்த்தமானி மூலம் பிரகடனம். 2012.10.10 மரிச்சுகட்டி, கரடிக்குளி என்ற பகுதியையும் பாதுகாப்பு பகுதி
யோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலகத்துக்குள் வில்பத்து வனத்தோடு இணைக்கப்பட்ட தொகுதியாக உள்ளடக்கப்பட்டது. இதனாலேயே பிரச்சினை மேலெழுந்தது.
இம்மக்களிடம் இரண்டுவகையான காணி உறுதிகள் இருந்துள்ளன. 1905 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் வழங்கிய காணி உரிமைப் பத்திரங்கள். முசலி தெற்கு கரடிக்குளி, மரிச்சுகட்டி பகுதியில் காணி உரிமை இருந்ததற்கு அத்தாட்சியாக உறுதிகளும் அவர்களிடம் ஆங்கிலத்தில் உள்ளன. அதுவல்லாத அரச உறுதிகளும் சிலரிடம் உண்டு. சேனைப் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களும் அவர்களிடமுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்குரிமையும் அங்குதான் உள்ளது. 12 பாடசாலைகள், 7 தபால் நிலையங்கள், பள்ளிவாசல்கள் இருந்ததற்கான அத்தாட்சிகள் தாராளமாக உள்ளன.
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990 இல் எல்.ரி.ரி.ஈ அமைப்பினர் பலாத்காரமாக வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தனர். பல இன்னல்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் புத்தளம் மாவட்டத்துக்கு வந்து
சேர்ந்தனர். வடக்கிலிருந்து புத்தளத்துக்கு கடல், தரை மார்க்கமாக இடம்பெயரும்போது இடையே உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களை பொருளாதார ரீதியாக பயனற்ற, எவ்வித தாவர, மர, செடி முளைக்காத கைவிடப்பட்ட உப்பளங்களில் குடியமர்த்தப்பட்டனர். அங்கும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். இதுதொடர்பாக எவ்வித தேசிய ஊடகங்களிலும் பேசப்படவில்லை. மீள்குடியேற்ற முயற்சிகளும் நடைபெறவில்லை.
பாரம்பரிய பகுதிக்கு திரும்புதல்
இவ்வாறிருக்கையில் யுத்த நிறுத்தம், சமாதான உடன்படிக்கை காலம் மற்றும் 2009 போர் முடிவைத் தொடர்ந்து அதிகமான மக்கள் குடியேற ஆரம்பித்திருந்தனர். மன்னார் தீவிலும் குடியேறினர். முசலி பிரதேச சபையின் மரிச்சுகட்டி, கரடிக்குளி போன்ற இடங்களிலும் குடியேறினர். சிலாவத்துறை வரையிலும் திரும்ப குடியேற எத்தனித்தனர். சிலாவத்துறையில் இருந்த முஸ்லிம் பாரம்பரிய கிராமங்களில் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முள்ளிக்குளத்திலும் இராணுவத்தினர் இருந்தனர். எனவே அவர்கள் முள்ளிக்குளம் பகுதியில் இருந்து சிலாவத்துறை வரையிலும் இராணுவத்தினர் காட்டினுள்ளே பாதையொன்றையும் அமைத்திருந்தனர். இதனால் முஸ்லிம்களின் பாரம்பரிய கிராமங்கள் சிலவற்றில் மீள்குடியேற வாய்ப்பிருக்கவில்லை. 2012 வில்பத்து வனாந்திர பாதுகாப்பு தொகுதியாக ஒதுக்கப்பட்ட பின்பு குடியேறுவதில் பிரச்சினைகள் தலைதூக்கியது. பாரம்பரிய கிராமங்களுக்கு திரும்பமுடியாத நிலைமை ஏற்பட்டது. 1990 இடம்பெயர்வுக்கு பின்னர் சிறிய தோட்டங்களாக இருந்த பகுதிகள் அடர்ந்த காடுகளாக மாறின. பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள், பெரும் கிணறுகள் இருந்துள்ளன. அவை இன்னுமே காடுகளுக்குள் உள்ளன. அவை இருந்தாலும் துப்புறவு பண்ணி குடியமர்வதற்கு இராணுவ முகாம்கள் தடையாக இருந்தது. இங்கு இரண்டுவகையான பிரச்சினைகள் இருந்தது. ஒன்று அரச காணிகளாக பிரகடனம் அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள்.
மீள்குடியேற்றம்
இவ்வாறு மீள்குடியேற்றத்தில் பல சவால்களை எதிர்கொண்ட முஸ்லிம்களுக்கு உடனடி தீர்வுத் திட்டமொன்றின்
தேவை எழுந்தது. பிரச்சினை ஐக்கிய நாடுகள் வரை சென்றது. பல நாடுகளின் பிரதிநிதிகளும் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டாலும், தீர்வுகள் எட்டப்பட்டிருக்கவில்லை. இறுதியாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் ஐக்கிய நாடுகள் வரை சென்று மகஜரொன்றை முன்வைத்தார். அதன் பிரதிபலனாக இடம்பெயர்ந்தவர்களை ஆறு மாதங்களில் குடியமர்த்தப்பட
வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீள்குடியேற்ற செயலணி
அதன் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சு, ஜனாதிபதி விஷேட செயலணி, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, தொல் பொருள் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், காணியமைச்சு போன்ற சகல நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி மீள்குடியேற்ற குழுவொன்று மன்னாரில் தாபிக்கப்பட்டது. சிலாவத்துறை- மரிச்சுகட்டி பாதை இராணுவத்தினர் அமைத்த பாதையின் இரண்டு பக்கமாக 250 மீற்றர்கள் எல்லை வரையில் குடியிருப்பு அமைக்க இக்குழுவினர் அனுமதி வழங்கினர். இது 770 ஏக்கர் சதுர பரப்பை கொண்டது. இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியை அரச சார்புள்ள அமைப்புகள், இராணுவத்தினர் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் மக்களுடன் இணைந்து துப்புரவு செய்தனர். இதன்போது இராணுவத்தின் ஏற்கனவே அமைத்திருந்த வீதியை புனரமைக்கும் தேவையும் ஏற்பட்டது.
அரேபிய குடியேற்றமா?
மீள்குடியேற்ற விடயங்களுக்கு நிதித்
தேவையும் ஏற்பட்டது. குவைட் போன்ற நாடுகளில் இருந்து மீள்குடியேற்ற அமைச்சரினூடாக பொருளாதார உதவிகளும் மேற்கொள்ளப்பட்டன. அரேபிய நிதியுதவிகள் மேற்கொள்ளப்பட்டதால் குடியிருப்பு பிரதேசங்களுக்கு ஜாஸிம் சிட்டி போன்ற பெயர்களையும் சூட்டினர். பெயர் பலகைகளிலும் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. இவ்விடயம் அரேபிய குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகத்தை பெரும்பான்மை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியது. இது திசைதிருப்பப்பட்டு ஊடகங்களிலும் இடம்பிடித்தது.
காடழிப்பு சர்ச்சை
இதுவே சூழல் பிரச்சினையாக திரிபுபடுத்தப்பட்டு அரச சார்பற்ற சுற்றாடல் அமைப்புகள், பௌத்த கடும்போக்கு இனவாத அமைப்புகளை சென்றடைந்தது. அரச சுற்றாடல் அமைச்சு இவ்விடயத்தில் அமைதி காத்தது. இனவாத நோக்கில் இப்பிரச்சினையை நகர்த்துகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் மேலெழும்போது குடியமரவேண்டிய மக்களின் வருகையும் குறைந்தது. மேலும் பலர் குடியிருப்புகளில் தொடர்ந்தும் உள்ளனர்.
முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது சிறிய தோட்டங்களாக இருந்த பகுதிகள் 25 வருடங்களாகின்றபோது அடர்ந்த காடுகளாக மாறியிருந்தன. கூகுல் படங்களில் அல்லது ட்ரோன் காட்சிகளில் மேலிருந்து பார்க்கும்போது அனைத்துமே பச்சையாகத்தான் தெரியும். வீதி இரு மருங்கிலும் குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்க்கும்போது இது காடு அழித்த பகுதி என்றே தென்படும். இதன் விளைவே பல விவாதங்களும், ஊடக, சமூக அமைப்புகளின் எதிர் செயற்பாடுகள் வலுக்க காரணமாயிற்று.
இனவாத கண்
இலங்கையில் ஏராளமான காட்டுப் பகுதிகள் காணப்படுகின்றன. யால,
சிங்கராஜவன, உடவலவை, உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளாந்தம் காடழிப்பு நிகழ்ந்தவண்ணமே உள்ளன. இவை ஊடகங்களின் அல்லது சுற்றாடல் அமைப்புகளின் கண்களில் தென்படுவதில்லை. அவற்றை அவர்கள் அலட்டிக்கொள்வதுமில்லை.
வில்பத்து காட்டுப் பகுதியில் பிரதானமான மூன்று விடயங்களில் அவதானம் செலுத்தவேண்டும். வில்பத்து காட்டுத் தொகுதிக்கு வடிகால் எங்கு இருக்கின்றது. பல்லாறு, மோதரகம் ஆறு, கலா ஓய போன்ற பாரிய வடிகால்கள் இதனுடன் தொடர்புபட்டுள்ளன. கல்லாறு என்பது வில்பத்து நடுப்பகுதியிலேயே உள்ளது. இதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மோதரகம் ஆறு பகுதியில் மகவிலச்சிய குளமுள்ளது. மகவிலச்சிய குளத்தைச் சூழ இருந்த பெரிய காடு
சிங்களவர்களால் அழிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச காணிகளுக்கு பல வகை காணி உறுதிகள் வழங்கப்பட்டு தாராள மாக காடழிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்தே வில்பத்து தொகுதிக்கான வடிகால் நீர் பெறப்படுகின்றது. அது முற்றாக அழிக்கப்பட்டிருந்தும் அதுபற்றி யாரும் பேசுவதில்லை. இதனால் பாரிய வறட்சியேற்படவும் வாய்ப்புள்ளது. ட்ரோன் காட்சிகளில் இது இடம்பிடிப்பதில்லை.
 அதேபோன்று, கலா ஓய முழுக் காட்டில் பெரும் பகுதியில் சிங்கள, பௌத்தர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுபற்றியும் யாரும் கதைப்பதில்லை. வில்பத்து பிரதான காட்டிலும், எல்லை வரையும் காடழிக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கு பகுதியான தப்போவ பகுதி. இதுவும் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த ஒரே காரணத்துக்காக அவர்களின் உரிமைகள் முழுமையாக மறுக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் பூர்வீக இடத்திற்கு நுழையும்போது மாத்திரமே காடழிப்பு என்கின்றனர்.
வில்பத்து விஸ்தரிப்பு
அண்மையில் ஜனாதிபதி வில்பத்து எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும் என்று பணிப்புரை வழங்கியிருந்தார். இதற்கமைய முஸ்லிம்கள் வசித்துவருகின்ற பகுதிகளே மீண்டும் வில்பத்து சரணாலயத்துக்கு உள்வாங்கப்படவுள்ளது. ஜனாதிபதியையும் இனவாத அமைப்புகள் பல தடவைகள் சந்தித்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் முஸ்லிம்கள் காடழிப்பில் ஈடுபடுகின்றனர், யானைகளைக் கொல்கின்றனர் போன்ற பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். ஆனால் இவையனைத்தும் போலி குற்றச்சாட்டுகள். பெரும்பான்மை சிங்களவர்கள் அதிகமான யானைகளை கொன்றுள்ளனர். வில்பத்து காட்டின் கிழக்கு பக்க எல்லையை சிங்கள குடியேற்றங்கள் ஊடுருவியுள்ளது. காட்டுக்கும் குடியிருப்புக்களுக்கும் எல்லையோ, ஒதுக்கீடோ இல்லை. அந்த பகுதியிலேயே யானைகள் கொல்லப்படுகின்றது. யானை வெடி வைக்கப்படுகின்றது. பெரும் மிருக வேட்டையும் நடைபெறுகின்றது. இதுபற்றியும் தேசப்பற்றுள்ளவர்கள் மௌனம்.
மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாம் பாரிய காடழிப்பைத் தொடர்ந்தே உருவாக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் தம் இருப்பிடங்களில் குடியேற்றப்பட்டபின்னர் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் இதே வில்பத்துதான். அதுபற்றியும் யாருக்கும் கவலையில்லை.
1940ஆம் ஆண்டுக்கு பிறகு வில்பத்து காட்டுத் தொகுதியின் 5000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக அழிக்கப்பட்டு கஜுவத்த சிங்கள கிராமம் உருவாக்கப்பட்டது. இதற்கு மேலும் 3200 ஏக்கர் விஸ்தரிக்கப்பட்டது. இதுவும் பாதுகாப்பு பகுதி என்று வர்த்தமானி அறிவிக்கப்பட்ட பகுதியாகும். இது வில்பத்து காடாக இருந்தாலும் அங்கு கஜு பயிரிடப்பட்டுள்ளதை உதாரணம் காட்டி காடழிப்பு இடம்பெறவில்லை என்கின்றனர்.
வேண்டுமென்றே ஆரம்பத்தில்
வேட்பால் போன்ற பகுதியையும் பின்னர் மரிச்சுகட்டியையும் குடியிருப்பு விஸ்தரிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில் வர்த்தமானி மூலம் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக 2012.07 வரை குடியமர்த்தப்பட்ட முஸ்லிம் கிராமங்கள் அனைத்தும் சட்டவிரோத குடியிருப்புக்களாகின்றன. இது இம்மக்களை பாரிய பிரச்சினையில் தள்ளியுள்ளது. முஸ்லிம்களுக்கு அவர்களின் பாரம்பரிய காணி வழங்கப்பட்டு, பாதுகாப்பும், உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். மீள்குடியேற வருகின்றவர்களுக்கான வசதிகளும் மேற்கொள்ளப்படவேண்டிய தேவையுள்ளது. அடுத்த பரம்பரையில் அதிகமா
னோர் வரமாட்டார்கள். வர விரும்புபவர்களுக்கான ஏற்பாடுகள் பற்றியும் எங்கும் கூறப்படவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அவசியம்
ஜனாதிபதி வில்பத்து எல்லைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும் எங்கு? எவ்வாறு விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பதை கூறியிருக்கவில்லை. முஸ்லிம்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான மாற்றுக் காணிகள் எங்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வில்பத்து எல்லை விஸ்தரிப்பின்போது பாதிக்கப்படப்போவதும் இதே முஸ்லிம்கள்தான்.
இவ்விடயத்துக்கு தீர்வாக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட
வேண்டும். காட்டுப் பகுதியை எவ்வாறு பாதுகாக்கலாம் விஸ்தரிக்கலாம் என்பது தொடர்பாக அந்த குழு ஆராயவேண்டும். காட்டை பாதுகாக்கும் நோக்கில் விஸ்தரிக்கப்பட வேண்டுமாயின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் விஸ்தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பதும் ஆராயப்படவேண்டும். இது மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் விஸ்தரிக்கபட
வேண்டும் என்பதில்லை. புத்தளம், அநுராதபுர மாவட்டங்களிலும் வாய்ப்பு இருக்கின்றது. வில்பத்து தெற்கில் குடியிருப்புகள் இல்லாத பெரும் பகுதியொன்று உள்ளது. அங்கும் விஸ்தரிக்கலாம். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று இயங்கும்போது மாத்திரமே முஸ்லிம்களின் கண்ணீருக்கான தீர்வு கிட்டும்.
அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போட்டி, சச்சரவு, முரண்பாடுகள், அரசியல் இலாபம் காண முற்படாது மக்களின் மீள்குடியேற்றத்துக்காக ஒன்றுபடவேண்டும். இந்த விடயத்தில் ஏனைய பிரதேச அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை கட்சிபேதமின்றி, மனிதாபிமான கண்கொண்டு நோக்கி அவர்களுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும்.
கலாநிதி ஏ.எஸ்எம்.நௌபலுடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து தொகுக்கப்பட்ட ஆக்கம்
Previous Post Next Post