கல்விக்காக பேசிக்கொண்டிருக்கும் நாம் யாரும் இங்கு மாணவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை காண முடியாதவாறு கண்கள் கட்டப்பட்டு இருக்கிறோம். எமது பிரதேசத்தில் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் பலதை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். ஆனால் அதனால் அடையும் பயன்கள் மிகவும் குறைவே, பெறுபேறுகள் குறைவே, காரணம் எமது எதிர்பார்ப்புக்கள் வெறும் பரீட்சைப் புள்ளிகளாகவே காணப்படுகிறது தவிர ஓர் சிறந்த சுயமாக சிந்திக்ககூடிய எதிர்கால சமூகம் அல்ல.
பாடசாலைக்காலங்களில் மாணவர்கள் சுயமாக சிந்திக்கக்கூடிய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. வீட்டிலும் சரி பாடசாலைகளிலும் சரி புள்ளிகளையே இலக்குகளாக வைத்து மாணவர்கள் மேய்க்கப்படுகிறார்களே தவிர வேறில்லை. ஆசிரியர்கள் மற்றும் தாய் தந்தையரின் தீர்மானமும் ஆசையுமே பிள்ளைகள் மீது திணிக்கப்படுகிறது. அவர்களுடைய சிந்தனைக் கதவுகள் இழுத்து மூடப்படுகிறது.
ஒரு வகுப்பில் கற்கும் 40 மாணவர்களில் 10 மாணவர்கள் கெட்டிக்காரர்கள் என்றால் மீதி 30 மாணவர்களும் படிக்க முடியாதவர்களோ திறமையற்றவர்களோ அல்ல. ஆனால் எமது சமூகத்தில் அந்த மீதி 30 மாணவர்களின் உள்ளத்தில் பாடசாலைக்காலத்திலேயே வீணானவர்கள், திறமையற்றவர்கள் என்ற எண்ணத்தை பாடசாலையும் வீட்டுச்சூழலும் சேர்ந்து விதைத்து விடுகிறார்கள்.
மாணவர்களைப் பொருத்த வரை அவர்கள் மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்படுகின்றனர்.
1.அதி விவேகமுள்ள மாணவன் (Gifted child)
2.சாதாரண மாணவன் (Normal child)
3.பின் தங்கிய மாணவன் (Backward child).
1.அதி விவேகமுள்ள மாணவன் (Gifted child)
2.சாதாரண மாணவன் (Normal child)
3.பின் தங்கிய மாணவன் (Backward child).
ஒரு வகுப்பறையிலுள்ள இம்மூன்று வகை மாணவர்களையும் சமாளிக்கக்கூடிய தகுதி ஆசிரியருக்கு இருக்க வேண்டும். சளிப்படையாமல் பின் தங்கிய மாணவனை அலட்சியம் செய்யாமல் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அன்புடனும், ஆதரவுடனும் அம்மாணவனை அணுகினால் சக மாணவர்கள் மத்தியில் பின் தங்கிய மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாது. இதனால் மாணவர்கள் மத்தியில் சகஜமாகப் பழகக்கூடியவாறு இருக்கும். தன் வகுப்பறையிலுள்ள மாணவன் மேலுள்ள மூன்று பிரிவுகளில் எப்பிரிவைச் சேர்ந்த மாணவன் என்பதை கண்டுகொள்ள ஒரு ஆசிரியருக்கு முடியவில்லை என்றால் அங்கு அந்த மாணவன் தோற்கடிக்கப்படுகிறான்.
"உன்னாலும் முடியும் முயற்சி செய்" என்று ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களை விட "உனக்கு இந்தப்பாடம் விளங்காது" என்று கூறி கூறி மாணவர்களின் மனதில் இயலாமை என்ற எண்ணக்கருவை விதைக்கும் ஆசிரியர்களே நம் சூழலில் அதிகம்.
பெற்ற பிள்ளைகளின் திறமைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் வெறும் புள்ளிகளுக்காகவும் பெறுபேறுகளுக்காகவும் சமூகத்தின் அலட்சியமான எதிர்பார்ப்புகளுக்காகவும் தங்கள் பிள்ளைகளின் ஆற்றலை அடகு வைக்கும் பெற்றோர்களே இன்று அதிகம்.
ஊக்கப்படுத்தல், திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிதல் என்பன இன்று எம்மைவிட்டு இல்லாமலே ஆக்கப்பட்டு விட்டது. நான்கு வயதிலேயே மாணவர்கள் வெறும் புத்தகப்பை சுமக்கும் சுமைதாங்கிகளாகவே ஆக்கப்படுகிறார்கள் என்பது கவலைக்கிடம்.
ஓர் மாணவன் என்ன கற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது, ஓர் பிள்ளை எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிப்பது பெற்றோர் அல்லது பாடசாலை ஆசிரியர்கள் அல்ல. சுதந்திரமாக சிந்திக்க விடுங்கள். அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க சந்தர்ப்பம் வழங்குங்கள்.
மாணவர்களுக்கு மனதில் விருப்பம் இன்றி அவர்களுக்கு ஆர்வம் இன்றி ஊட்டப்படும் எந்தக்கல்வியும் நீர் மேல் எழுத்துப்போல வீணான ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வாழ்வின் யதார்த்தத்தை புரிந்துகொள்ள அவர்களுக்கு அவகாசம் வழங்குங்கள். தோல்வியின்போது அவர்களின்மேல் நீங்கள் கொள்ளும் சலிப்பு அவர்களை எப்போதும் எழும்பவிடாமல் செய்துவிடும்.
ஊக்கப்படுத்தலூடாக திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பளியுங்கள், வழிகாட்டலை மேற்கொள்ளுங்கள் ஆனால் அவர்களை சுயமாக சிந்திக்க சந்தர்ப்பம் வழங்குங்கள். அப்போதுதான் எமது சமூகம் எதிர்காலத்தில் சுயமாக சிந்தித்து தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய ஓர் சிறந்த சமூகத்தை உருவாக்கும்.
சுதந்திரமாக சிந்திக்க வாய்ப்பளிக்கப்படாத வரைக்கும் வெறும் ஏட்டுச் சுரக்காய்களே எம் சமூகத்தின் எதிர்காலம்.
றோயல் யூத்ஸ்