வில்பத்துவ தேசிய வனப்பகுதிக்கு, எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை என்று, இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர் திலக் காரியவசம் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான வெறுப்பின் காரணமாக, வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக பல முறைபாடுகள் பதிவாகியிருந்தன. இதனை ஆராயும் முகமாக, சனிக்கிழமையன்று (28) வில்பத்து வனப்பகுதிக்கு சென்ற மேற்படி கூட்டமைப்பினர், அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர்.
இதனையடுத்து அதன் தலைவர் தொடர்ந்து கூறியதாவது, “வில்பத்து சரணாலயப் பகுதி சேதத்துக்கு உள்ளாக்கப்படுவதாக, இப்பகுதி சூழலியாளர்கள், மங்களாராம தேரருடன் இணைந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறிச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து ஆராயும் முகமாக, நாங்கள் அங்கு சென்று பார்வையிட்ட போது, முறைபாடுகளுக்கு ஏற்ற வகையில் எவ்வித சேதமும், வில்பத்து சரணாலயப் பகுதியில் ஏற்படத்தப்பட்டு இருக்கவில்லை.
மேலும், வில்பத்து வனப்பகுதி குறித்து வெளியிடப்படும் கருத்துகள் யாவும், உண்மையானவை அல்ல. நாங்கள் அவ்வனப்பகுதியை, சுற்றிலும் பார்வையிட்டோம். வில்பத்து தேசிய சரணாலயப் பகுதிக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக, கடந்த காலத்தில் சூழலியலாளர்கள் என தங்களைக் கூறிக்கொண்ட சிலர் செய்திருப்பது, ஊடக மாயா ஜாலமாகும். உண்மையில் வில்பத்து பகுதியில், காடழிப்பொன்று இடம்பெறவில்லை. அமைச்சர் ரிஷாட்டின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக, வில்பத்து குறித்த குற்றச்சாட்டுக்களையும் பொய்யான கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (Thanks :TM)