Top News

பொதுவிடயங்களில் தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை



தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றிய போது மேலும் கூறிய தாவது, இந்த நாட்டிலே இரு துருவங்களாக அரசியல் செய்து மாறிமாறி ஆட்சிக்குவந்த பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக அரசமைத்து ஆட்சியை வழிநடத்தும் பாங்கை நாம் தற்போது காண்கின்றோம். அதே போன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து இரண்டு சமூகங்களுக்கிடையே கசப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்த போதும் அவைகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு இரண்டு சமூகங்களின் நன்மைக்காகவும் பொதுவான அபிலாஷைகளைப் பெறுவதற்காக நாம் ஓரணியில் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் நமக்கெழுந்துள்ளது.
கடந்த கால வரலாறுகளை நாம் படிப்பினையாகக் கொண்டு யுத்தத்தால் நாதியற்றுப் போன நமது சமூகங்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டு சரணடைந்த அல்லது இயக்கத்தைவிட்டு வெளியேறி நிர்க்கதிக்குள்ளாகி நிற்கும் சுமார் 12,000 விடுதலைப் புலிகளின் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பும் நம் கண்முன்னே நிற்கின்றது. புனர்வாழ்வு பெற்ற புலிகளை சாதாரண மனிதராக ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை நமக்குள் ஏற்படுத்தி அவர்களையும் சமூகத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக வாழும் நிலைக்கு நாம் இட்டுச் செல்ல வேண்டும்.
வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் தமது சொந்த மண்ணிற்கு அழைத்து அவர்களை சுதந்திர புருஷர்களாக குடியேற்றும் விடயத்திலும் நாம் கரிசனை காட்ட வேண்டும். இந்தியாவில் அகதிகளாக அகதி முகாமில் நீண்ட காலம் தங்கியுள்ள தமிழ்ச் சகோதரர்களை இந்த நாட்டுக்கு வரவழைத்து அவர்களைக் குடியேற்றும் விடயத்திலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொத்து, சுகங்களை இழந்து நடைப்பிணங்களாக அலைந்து திரியும் நமது மக்களின் வாழ்வியல் தேவைகளை இனம்கண்டு அவர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்தும் விடயத்திலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும்.
திறைமையும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும் பொருளாதார விருத்தி தொடர்பான திறன்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து ஐக்கியத்துடன் செயற்படுவதன் மூலம்தான் இந்த விடயங்களை நாம் சாத்தியமாக்க முடியும்.
Previous Post Next Post