(பிறவ்ஸ் முஹம்மட்)
அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் மூலம் விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட காணி உரிமைகளுக்கான செயலணி, அமைச்சருமான ரவூப் ஹக்கீமை நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அம்பாறையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
காணிப் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக்கொள்வதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி இறுதிக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதற்காக பாராளுமன்ற தினத்தில் தன்னை சந்திக்கவருமாறும் அம்பாறை மாவட்ட காணி உரிமைகளுக்கான செயலணியிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தடுக்கப்பட்டுள்ள 140 குடும்பங்களுக்குரிய 480 ஏக்கர் பேகாமம் காணி, வன இலாகாவினால் தடுக்கப்பட்டுள்ள 250 குடும்பங்களுக்குரிய 503 ஏக்கர் கிரான் மைல் காணி, வன இலாகாவினால் தடுக்கப்பட்டுள்ள 177 குடும்பங்களுக்குரிய 885 ஏக்கர் கிரான்கோமாரி காணி, தொல்லியல் திணைக்களத்தினால் தடுக்கப்பட்டுள்ள 176 குடும்பங்களுக்குரிய 600 ஏக்கர் பொன்னன்வெளி காணி, வன பாதுகாப்பு எல்லைக்குள் வருவதாக கூறப்படும் 69 குடும்பங்களுக்குரிய 150 ஏக்கர் அஷ்ரப்நகர் காணி, காணி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டும் இன்னும் வழங்கப்படாதுள்ள 48 குடும்பங்களுக்குரிய 144 ஏக்கர் அப்பலம்ஓயா காணி, உட்பிரவேசிக்க முடியாதவாறு அடாத்தாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 46 குடும்பங்களுக்குரிய 96 ஏக்கர் கீற்றுப்பற்று காணி உள்ளடங்கிய மகஜர்கள் இதன்போது அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சுனாமி வீடுகளை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள், அதனை சுனாமியில் பாதிக்கப்படாதோருக்கு வழங்குவதற்கான முஸ்தீபுகள் குறித்தும் இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட காணி உரிமைகளுக்கான செயலணியின் தலைவர் பி.ஹைருதீன், செயலாளர் எம்.எம். பசீர் மற்றும் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.