Top News

ஒருபிடி அரிசிதான் 20 நாள் உணவு; மனம் திறக்கும் கல்முனை மீனவர்கள்

(எம்.ஏ.றமீஸ்)
ஆழ்­கடல் மீன்­பிடித்தொழில் நிமித்தம் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒலுவில் மீன்­பிடித் துறை­மு­கத்­தி­லி­ருந்து கட­லுக்கு சென்­ற­வர்கள் இரண்டு மாதங்­களின் பின்னர் மாலை­தீவு நாட்டில் இருந்து நேற்று முன்­தினம் காலை நாடு திரும்­பி­யுள்­ளனர்.



கல்­முனைக்குடி­யைச் சேர்ந்த ஆறு மீன­வர்கள் ஒலுவில் துறை­மு­கத்தில் தரித்து வைக்­கப்­பட்­டி­ருந்த இரண்டு வள்­ளங்­களில் தொழில் நிமித்தம் கட­லுக்குச் சென்­றனர். இவர்கள் ஐந்து நாட்கள் கொண்ட காலப்­ப­கு­திக்குள் கடலில் மீன்­களைப் பிடித்துவிட்டுக் கரை திரும்­பு­வது வழக்­க­மாகும்.

கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இவ்­வாறு கட­லுக்குச் சென்­ற­வர்கள் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் தாம் கொண்டுசென்ற இயந்­தி­ரப்­ப­ட­கு­க­ளுடன் காணாமல் போயி­ருந்­தனர்.

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கரைக்குத் திரும்­பா­ததால் அவர்­களின் உற­வி­னர்கள் தொடர்­பினை ஏற்­ப­டுத்த முயற்­சித்­தனர். ஆனால் அவர்­களை தொடர்புகொள்ள முடி­ய­வில்லை. இதனால் காணாமல்போன மீனர்­வர்­களைத் தேடும் முயற்­சியில் பொது­மக்­களும், மீன­வர்­களும், படை­யி­னரும், அர­சி­யல்­வா­தி­களும் தம்­மா­லான முயற்­சி­களை மேற்­கொண்­டனர்.

இதற்­க­மை­வாக கடந்த ஜன­வரி மாதம் ஐந்தாம் திகதி ஒரு படகில் பய­ணித்­த­வர்­களும், ஜன­வரி 12ஆம் திகதி மற்­றைய படகில் பய­ணித்­த­வர்­களும் உயி­ருக்குப் போராடிக் கொண்­டி­ருந்த நிலையில் மாலை­தீவு நாட்டின் கடற்­ப­டை­யி­னரின் உத­வியால் சோமா­லிய நாட்டு கடல் எல்­லையில் வைத்து இவர்கள் மீட்­கப்­பட்­டனர்.

இதனைத் தொடர்ந்து இம்­மீ­ன­வர்கள் ஆறு­பேரும் மாலை­தீவு நாட்­டுக்கு கரை­சேர்க்­கப்­பட்­டனர். மாலை­தீவில் தங்­க­வைக்­கப்­பட்­ட­வர்­களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமின் ஏற்­பாட்டில் விளை­யாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேரில் சென்று பார்­வை­யிட்டு இவர்­க­ளுக்­கான உத­வி­க­ளையும் மேற்­கொண்டார்.

இம்­மீ­ன­வர்கள் மாலை­தீவிலிருந்து கடல் மார்க்­க­மாக இலங்­கைக்கு வரு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த போதிலும் கால­நிலை சீர்­கேட்டின் கார­ண­மாக விமானம் மூலம் ஐந்து மீன­வர்கள் நேற்­றைய தினம் தாயகம் திரும்­பினர். இவர்­களின் ஒரு மீனவர் தமது வள்­ளங்­களை நாட்­டிற்கு கொண்டு வரும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வதால் மாலை­தீவில் தங்­கி­யுள்ளார்.  இம்­மீ­ன­வர்கள் தமது அனு­பவங்­களை பகிர்ந்து கொண்­டனர்.
முகம்­மது அபூ­பக்கர் அலாவுதீன்
முகம்­மது அபூ­பக்கர் அலாவுதீன் கருத்துத் தெரி­விக்­கையில், நான் கல்­மு­னைக்­குடி முதலாம் பிரிவில் வசித்து வரு­கின்றேன். கடற்றொழிலை நம்­பியே எனது வாழ்வு கழிந்து கொண்­டி­ருக்­கின்­றது.

கடற்­றொ­ழிலில் சுமார் 38 வரு­டங்­க­ளாக நான் ஈடு­பட்டு வரு­கின்றேன். நீண்ட கால­மாக இத்­தொ­ழிலில் ஈடு­பட்டு வந்த நான் அண்­மையில் எனது உடல் நிலை சுக­வீனம் கார­ண­மாக சற்றுத் தளர்­வுற்­றி­ருந்­ததால் இத்­தொ­ழிலில் சொற்ப காலம் ஈடு­பட முடி­யாமல் இருந்­தது.

அதனால் சில காலம் நான் ஓய்­வினை எடுக்க வேண்­டிய கட்­டா­யத்தில் இருந்தேன்.

எனது உடல் நிலை தேறி­யதன் பின்னர் கட­லுக்குச் சென்றுவர கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சென்­ற­வே­ளை­யில்தான் துளியும் எதிர்­பா­ராத வித­மாக அந்தப் பயங்­கரச் சம்­பவம் இட­ம்­பெற்­றது.

ஐந்து நாட்­களில் வீடு திரும்­பலாம் என்ற நினை­வோடு கடலில் பொழு­தினைக் கழித்த நான் இரண்டு மாதங்கள் குடும்­பத்­த­வர்­களின் முகத்­தினைக் காணாமல் இருப்பேன் என்று எண்­ணிக்­கூடப் பார்க்­க­வில்லை.

தொழிலை முடித்துக் கொண்டு கரை­சேர வந்து கொண்­டி­ருந்­த­போது காற்றின் வேகம் படிப்­ப­டி­யாகக் கூடி­யதால் நாம் வள்­ளங்கள் சகிதம் எங்கோ நீரில் அள்­ளுண்டு போனோம். ஒரு சில மணி நேரத்தின் பின்னர் எமது வள்­ளத்திலிருந்த எரி­பொ­ருளும் தீர்ந்து போனது. எவ்­வ­ளவோ முயற்­சித்தும் கரை­யினைக் கண்டு கொள்ள எம்மால் முடி­யாமல் போனது.

எமது வள்­ளங்­களில் கட்­டப்­பட்­டி­ருந்த பாய்கள் மூலம் காற்றின் திசை­யி­னூடே நாம் எமது விருப்­பிற்குப் புறம்­பாக பய­ணிக்க வேண்­டி­யி­ருந்­தது. எமது வாழ்வு இத்­தோடு நிறைவு பெறப் போகின்­றது. இத்­தோடு தலை­விதி முடி­கின்­றது என மிகுந்த பீதிக்கு மத்­தியில் இறை­வ­னிடம் பிரார்த்­தனை மேற்­கொண்டோம். நாம் ஐந்து நாட்­க­ளுக்குப் போது­மாக கொண்டு சென்ற உணவுப் பொருட்­களும் தீர்ந்து போயின. எம்­மிடம் சொற்ப அரிசியும் தண்­ணீ­ருமே எஞ்­சி­யி­ருந்­தன. அவற்றை கொஞ்சம் கொஞ்­ச­மாக பயன்­ப­டுத்த முயற்­சித்தோம். சிறிது அரி­சி­யினை தண்­ணீ­ரிட்டு கலக்கி விட்டு கஞ்­சி­யி­னைப்போல் சில நாட்கள் அருந்தி வந்தோம்.

இவ்­வாறு சுமார் இரு­பது நாட்கள் கடலில் தத்­த­ளித்­த­ப­டியே இருந்­த­போ­துதான் மாலைத்தீவு கடற்­ப­டை­யினர் எம்மைக் காப்­பாற்­றினர். இவ் அனு­ப­வ­மா­னது எனது வாழ்­நாளில் என்­றுமே மறக்க முடி­யா­த­தாகும். இறந்­தவர் மீண்டும் உயிர் பெற்ற நிலை­யி­னைத்தான் நான் உணர்­கின்றேன் என்றார்.
முகம்­மது காசிம் அப்துல் வாஹித்
முகம்­மது காசிம் அப்துல் வாஹித், இவ் அனு­பவம் பற்றிக் குறிப்­பி­டு­கையில், கல்­முனை- 01ஐச் சேர்ந்த நான் கடந்த நாற்­பது வரு­டங்­க­ளாக கடல் தொழில் புரிந்து வரு­கின்றேன். கடலில் சில சில இடர்­பா­டுகள் கடந்த காலத்தில் வந்­திட்ட போதிலும் இவ்­வா­றா­னதோர் பாரிய சம்­பவம் நடந்­தது எனது வாழ்­நாளில் இதுவே முத­லா­வ­தாகும்.

நான் மர­ணித்து விடுவேன் என்று உறுதி செய்து சதா இறை­வ­னிடம் பாவ மன்­னிப்­பினை கடலில் இருந்து மேற்­கொண்டேன். இது­போன்ற நிலை­யினை எந்­த­வொரு மீன­வ­ருக்கும் ஏற்­ப­டுத்தி விடாதே என இறை­வ­னிடம் கையேந்தி பிரார்த்­தித்தேன். அப்­ப­டி­யா­னதோர் பயங்­கரம் மிகுந்த நிலை­மைக்கு நான் ஆளாக்­கப்­பட்டேன்.

திரும்பும் திசை­யெல்லாம் கடல் எல்லை. எங்கு செல்­வது, எப்­படி உயிர் தப்­பிப்­பது என்று எது­வுமே என்னால் எண்­ணிப்­பார்க்க முடி­யாத அபாயம் கொண்ட சூழ்­நிலை. நான் அடைந்த துய­ரத்­திற்கு அளவே இல்லை. வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யாத வலி.

உயிர்­வாழ எஞ்­சி­யி­ருந்த ஒரே ஒரு ஆயுதம் நாம் கொண்டு சென்ற சொற்ப நீரும் அரி­சியும்தான். பசியினால் நான் சோர்ந்து போனேன். ஒவ்­வொரு விநா­டியும் உயிர் பிரியும் வலி­யி­னைத்தான் நான் உணர்ந்து கொண்டேன்.

எம்மை மாலை­தீவு கடற்­ப­டை­யினர் வந்து காப்­பாற்­றி­யது கன­வினைப் போல் இருக்கிறது. அவர்கள் எம்மை மீட்டு என்ன வேண்டும் என்று கேட்­ட­போது பசி­யினைப் போக்க எமக்கு உண்ண ஏதா­வது தாருங்கள் என்று கேட்டேன். அப்­போது அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்­களை உண்­ட­போ­துதான் போன உயிர் மீண்டும் திரும்­பி­யது என்றார்.
எம்.ஐ.அப்துல் வஹாப்
 சாய்ந்­த­ம­ருது -03 இனைச் சேர்ந்த எம்.ஐ.அப்துல் வஹாப் குறிப்­பி­டு­கையில், கடந்த 30 வருட கால­மாக நான் கடல் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்றேன். கடல்தான் எனக்கு வாழ்­வா­தாரம் கொடுப்­பது. அந்தக் கடல்தான் என்னை அழிக்கப் போகின்­றது என்று முடி­வினை எடுக்கும் அள­விற்கு இச்­சம்­பவம் என் மனதில் பசு­ம­ரத்­தாணி போல் பதிந்து விட்­டது.

நாம் உயி­ருக்­கா­கப் போராடிக் கொண்­டி­ருக்கும் போது யாரா­வது நம்மைக் கண்டும் காணா­தது போல் சென்றால் எப்­படிக் கவலை ஏற்­படும். அவ்­வா­றா­னதோர் நிலை­மை­யினை கடற்­ப­ரப்பில் நாமும் முகம் கொண்டோம்.

கடலில் சுமார் 15 நாட்கள் கழி­கின்­ற­ வேளையில் எம் அருகில் ஒரு கப்பல் சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது எம் எல்­லோ­ருக்கும் நாம் காப்­பாற்­றப்­பட்டு விடுவோம் என்ற உறு­தி­யான நிலை தோன்­றி­யது. கப்­பலைக் கண்டு கைகளை உயர்த்தி காப்­பாற்­றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறியவாறு கெஞ்சிக் கொண்டு போராடினோம். ஆனால் அந்தக் கப்பல் மாலுமியோ அதில் பயணித்தவர்களோ எம்மைக் காப்பாற்றுவதற்காக எந்த வித முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை.

அவர்கள் எம்மைக் கண்டும் காணாதவர்கள் போல் சென்று விட்டார்கள். எமக்கிருந்த கடைசி நம்பிக்கையும் அத்தோடு புதைந்து போனது.

இவ்வாறிருக்கும் போதுதான் மற்றுமொரு கப்பலும் எம் அருகில் பயணித்தது. அதேபோலான நிலைதான் மீண்டும் எமக்கு நேர்ந்தது. எம்மைக் காப்பாற்றுவதற்காக எவருமே முன்வராதது கடலில் நாம் தத்தளித்தததைவிட மிக கொடூரமான நிலையாகும் என்றார். (நன்றி - விடிவெள்ளி)
Previous Post Next Post