கடந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய 17 ஹஜ்ஜாஜிகள் 11 ஹஜ் முகவர்களுக்கு எதிராக சமர்ப்பித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் முறைப்பாட்டு விசாரணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் ஒரு ஹஜ் முகவருக்கு எதிராக 5 ஹஜ்ஜாஜிகள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் குறிப்பிடத்தக்கதாகும்.
ஹஜ் முகவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளின் விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் இரு மாதங்களில் விசாரணை அறிக்கை ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுமெனவும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் ஹஜ் முகவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனையையும் விசாரணைக் குழு சிபாரிசு செய்யுமெனவும் ஹஜ் விசாரணைக்குழுவின் செயலாளர் ரபீக் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஹஜ் முறைப்பாடு விசாரணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி யு.எல்.ஏ. மஜீட் கடமையாற்றுகிறார்.
இவர் வக்பு ட்ரிபியுனலின் தலைவராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக காதி மேன்முறையீட்டுச் சபையின் தலைவர் நத்வி பஹாவுதீன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக செயலாளர் மொய்னுதீன் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.