Top News

முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் போதை பாவனை அதிகரிப்பு; ஷிப்லி கவலை



தமது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஒவ்வொரு பெற்றோர்களும் மிகவும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பாலமுனை அல்-ஹிதாயா பாலர் பாடசாலைக்கான ஆசிரியர் தளபாடங்கள், அலுமாரி மற்றும் தொலைக்காட்சிப்பெட்டி என்பனவற்றை வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.02.07ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை அல்-ஹிதாயா பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார், 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை போன்ற தீய பழக்கங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. முன்னைய காலங்களில் இல்லாதவகையில் தற்போது மதுபானம் மற்றும் புகைத்தல் என்பனவற்றிக்கு மேலதிகமாக போதைமாத்திரைகள் போன்றவற்றின் பாவனையும் சமூகத்தில் அதிகமாக காணப்படுகின்றது. எமது பிள்ளைகளை மார்க்க விடயங்களில் ஈடுபாடுள்ளவர்காளாக வளர்ப்பதனூடாக மாத்திரமே இத்தகைய தீய பழக்கங்களிலிருந்து அவர்களை தவிர்ந்து வாழக்கூடியவர்களாக உருவாக்க முடியும்.   

தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. தமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன்கூடிய கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய எதிர்கால நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டும். சிறந்த கல்வி கற்ற சமூகமொன்றை உருவாக்குவதன் மூலமாகவே எமது சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.

எனவே கல்வி தொடர்பான விடயங்களில் நாங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி எமது செயற்பாடுகளை அனைத்தையும் முன்கொண்டு செல்வதோடு எதிர்வரும் காலங்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொடுப்பதனூடாக நல்லொழுக்கத்துடன்கூடிய சிறந்த கல்வி கற்ற எதிர்கால சமூகம் ஒன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என தனது உரையில் தெரிவித்தார். 
Previous Post Next Post