சாரணர் இயக்கம் தலைமைத்துவ பண்புகளை உருவாக்குகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை சாரணர் இயக்கத்தின் மாவட்ட காரியாலய திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
சாரணர் இயக்கம் சிறுவர்கள் மத்தியில் தலைமைத்துவ பண்புகளை உருவாக்குகிறது. நானும் பாடாசாலைக் காலத்தில் நான் கல்விகற்ற கொழும்பு றோயல்கல்லூரியின் சாரணர் படையணியில் இருந்தேன். அரசியல்வாதி என்ற ரீதியில் நாள் தோறும் நான் சந்திக்கும் சவால்களை வெற்றிகொள்ள நான் அக்காலத்தில் சாரணர் பயிற்சி மூலம் பெற்றுக்கொண்ட அனுபவமே உதவுகிறது.
சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்ற சாரண சாரணியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மாறாப் பற்றுடையவர்களாகவும், மரியாதை உடையவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிக்கிற வர்களாகவும், விலங்குகளிடத்தே அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமானவர்களாகவும், எண்ணம் வாக்கு செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவர்.
நீங்களும் இங்கு வழங்கப்படும் பயிற்சிகளை முறையாக கற்று எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாகவும் சிறந்த தலைவர்களாகவும் உருவாக வாழ்த்துகிறேன்.
இந்நிகழ்வில் திருகோணமலை பிரதேச செயலாளர் அருள்ராஜ் திருகோணமலை வலயகல்வி பணிப்பாளர் விஜேந்திரன், வலயக்கல்வி அதிகாரி செல்வநாயகம், புனித ஜோசப் கல்லூரி அதிபர் அல்பேர்ட், திருகோணமலை சாரணர் இயக்க முகாமையாளர் உமாபதி சிவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.