Headlines
Loading...
உம்ரா யாத்திரையின் பெயரால் ஏமாற்றலாமா?

உம்ரா யாத்திரையின் பெயரால் ஏமாற்றலாமா?





ஜே.எம்.ஹாபீஸ் 

'ஹஜ் மற்றும் உம்­ராக்­க­ளுக்­காக குறைந்த கட்­ட­ணத்தில் நிறைந்த சேவை' என விளம்­ப­ரப்­ப­டுத்தும் சில முக­வர்­களின் ஏமாற்று வேலை­களால் பாதிப்­ப­டையும் அப்­பா­விகள் பலரைப் பற்றி அநே­க­ருக்குத் தெரி­யா­தி­ருக்­கலாம். அப்­ப­டி­யான ஏமாற்று நிலை­மை­களில் இருந்து தவிர்ந்து கொள்­வ­தற்கு சில சம்­ப­வங்­களை அறிந்­து­கொள்­வது சிறந்­தது என்ற அடிப்­ப­டையில் சில விட­யங்­களை முன்வைக்க விரும்­பு­கிறேன்.
ஒரு முஃமினின் சக்திமிக்க ஆயு­த­மாகக் கரு­தப்­ப­டு­வது துஆவாகும். அதே நேரம் ஒருவன் கேட்கும் துஆவிற்கு இரண்டு வகையில் பதி­ல­ளிக்­கப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. ஒன்று அவன் கேட்ட துஆ உடன் நிறை­வே­றலாம் அல்­லது காலம் தாழ்த்தி நிறை­வே­றலாம். அப்­படி உலகில் அது நிறை­வே­றா­விட்­டாலும் நிச்­சயம் அதற்கு மறு­மையில் கூலி இருப்­பதாகக் கூறப்­ப­டு­கி­றது. எனவே துஆ அல்­லது பிரார்த்­தனை என்­பது ஒரு மேலான அமல் என்­பதில் சந்­தேகமில்லை. 

அதே போல் ஒருவன் மனந்­தி­றந்து அழுது இறை­வ­னி­டத்தில் வேண்­டு­கின்றபோது இறை­வ­னுக்கும் அவ்வடி­யா­னுக்கும் இடையே உள்ள பிணைப்பு மேலும் வலு­வ­டை­கி­றது. அந்த அடிப்­ப­டை­யிலும் பிரார்த்­த­னைகள் ஒரு மேலான அம­லாக மாறு­கி­றது.

ஆனால், வியப்பு அது­வல்ல. குளிக்­கப்போய் சிலர் சேற்றைப் பூசிக்­கொண்ட கதை­யாக சில விட­யங்கள் அமைந்து விடு­கின்­றன. சில­ரது துஆக்­க­ளுக்குப் பதில் அது பது­வாவாக, அதா­வது சாப­மாக மாறு­கின்ற நிலை­களும் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

சாபமே கூடாது. நாம் ஒரு­வரை நல்­வ­ழிப்­ப­டுத்­தும்­ப­டியே பிரார்த்­திக்­க­லாமே தவிர சாப­மிட முடி­யாது. ஏனெனில், அதில் நியாயம் இல்­லாதவிடத்து அச்­சாபம் திரும்பி வந்து எம்­மையே தாக்க இட­முண்டு. எது நியாயம் என்­பது அல்­லாஹ்­வுக்­குத்தான் தெரியும். எம் அனை­வ­ரையும் சாபத்­தை­விட்டும் அல்லாஹ் காப்­பாற்ற வேண்டும். ஆனால், சாபத்தை நெருங்கும் பல சந்­தர்ப்­பங்­களை சில நடத்­தைகள் தோற்று வித்­துள்­ளமை பற்றி நாம் சிந்­திக்க வேண்டும். 

மேலே சொன்ன துஆ என்ற மேலான பலனை அடையும் விதத்தில் பலர் பல்­வேறு செயல்­களை மேற்­கொள்­கின்­றனர். சிலர் தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு மக்கா, மதீனா போன்ற புனித ஸ்தலங்­க­ளுக்குச் சென்று பிரார்த்­த­னையில் ஈடு­ப­டு­கின்­றனர்.

இது உம்ரா என்ற வகை­யிலோ அல்­லது ஹஜ் என்ற புனிதக் கட­மையின் அடிப்­ப­டை­யிலோ நடை­பெ­றலாம். 

இஸ்­லாத்தின் ஐம்பெரும் கட­மை­களில் ஒன்­றான ஹஜ் கட­மை­யை நிறை­வேற்றச் செல்வோர் பிரார்த்­த­னைகள் அங்­கீ­க­ரிக்­கப்­படும் புனித இடங்கள் பல­வற்­றையும் புனித தினங்கள் பல­வற்­றையும் கடந்தே தமது தேவை­களை ஒப்புவிக்­கின்­றனர். அந்த அடிப்­ப­டையில் ஒரு முஃமினின் பிரார்த்­த­னைக்கு சாத­க­மான சூழ்நிலைகள் பல காணப்­ப­டு­வ­துண்டு.

அப்­ப­டி­யான ஒரு நிலையில் சில செயற்­பா­டுகள் பது­வாவாக (சாப­மாக) மாற்­றப்­படக்கூடிய நிலை­களை உரு­வாக்­கு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

அதா­வது, தற்­போ­தைய கால­கட்­டத்தில் ஹஜ் மற்றும்  உம்ரா என்ற இரண்டு அமல்கள் பற்றி அதிகம் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­படும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். பத்­தி­ரிகைச் செய்­தி­களை எடுத்துக் கொண்டால் அல்­லது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை எடுத்துக் கொண்டால் காலை 8 அல்­லது 9 மணிக்கு இடைப்­பட்ட நேரத்தில் விளம்­ப­ரங்­க­ளுக்கு முடிவே இருக்­காது.

அதிலும் உம்ரா பற்­றிய விளம்­ப­ரங்கள் பல உள்ளன. அவற்றின் கவர்­ச்சி­யைப் பார்த்தால் குறிப்­பிட்ட குழு வழங்கும் சேவைகள் போன்று உல­கத்தில் வேறு இல்லை என்ற அடிப்­ப­டையில்  கவர்ச்சி காட்­டப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான ஒரு குழுவில் இணைந்து உம்­ரா­விற்கு சென்­ற­வர்­க­ளது கதை­களைக் கேட்டால் மார்க்­கத்தின் பெயரால் இப்­ப­டி­யுமா என்று கூட நினைக்க வேண்­டி­யுள்­ளது. குறைந்த விலை என்று கவர்ச்சி விளம்­பரம் காட்டி அல்­லது வேறு யுத்­தி­களைக் கையாண்டு மோச­டிகள் நடப்­ப­தாகப் பேசு­வோரும் உண்டு.

சில வரு­டங்­க­ளுக்கு முன் க.பொ.த.(சாதா­ரண தரத்தில்) 9 ஏ சித்தி பெற்ற முஸ்லிம் மாண­வர்­களை அழைத்து அவர்­க­ளுக்கு பல்­வேறு வெகு­ம­திகள் வழங்­கப்­பட்­டன. இதனை ஒரு ஹஜ் முக­வரே செய்தார்.

அதி­லி­ருந்து 10 அதிர்ஷ்­ட­சா­லிகள் தெரிவு செய்­யப்­பட்டு உம்­ரா­விற்கு அழைத்துச் செல்­வதன் அடிப்படையில் பத்துப் பேர் கொண்ட பட்­டி­யலும் தயா­ரா­னது. சில வேளை இதுபற்றி வாக்­கு­றுதி அளித்த ஹஜ் முக­வ­ருக்கு அது மறந்து விட்­டதோ தெரியவில்லை. அதில் எனக்குத் தெரிந்த ஒரு மாண­வனும் 9 ஏ சித்­திகள் பெற்­றதால் அந்த அதிஷ்ட சாலி­களில் ஒரு­வ­ராகத் தெரி­வானார்.  

கால­வோட்­டத்தில் ஒரு வருடம், இரண்டு வருடம் என்று கழிந்து அம்­மா­ணவன் க.பொ.த. (உயர் தரத்­திலும்) பரீட்சை எழுதி 3 ஏ கள் பெற்றார். இறைவன் அருளால் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்தில் இரண்டாம் வரு­டத்­திலும் அவர் காலடி எடுத்து வைத்து விட்டார்.

ஆனால் அன்று தெரிவு செய்­யப்­பட்ட உம்ரா பட்­டி­ய­லுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாது. இது­வரை உம்­ரா­விற்கு அவரோ அல்­லது அந்தக் குழுவோ அனுப்பப் பட­வில்லை என்­பதே உண்மை.

இது ஒரு கவர்ச்சி விளம்­ப­ரமா அல்­லது மறந்து போன சமாச்­சா­ரமா தெரி­யாது. இதுபற்றி சிந்­திக்கும்போது அந்த மாண­வர்­கு­ழு­விற்கும் அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கும் குறிப்­பிட்ட ஹஜ் முகவர் பற்றி துஆவிற்குப் பதில் வேறு சிந்­த­னைகள் ஏற்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யமில்லை. 

இன்னும் சில விளம்­ப­ரங்­களைப் பார்த்து குறிப்­பிட்ட ஒரு கண­வனும் மனை­வியும் 75 ஆயிரம் ரூபாய்க்காக இணக்கம் தெரி­வித்து கடந்த மாதம் உம்­ரா­விற்குச் சென்­ற­தாகச் சொன்­னார்கள். ஆனால் அவர்கள் மக்கா நகரில் வைத்து என்னைச் சந்­தித்த­போது அவர்கள் கூறிய கதை ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.

75 ஆயிரம் ரூபா என்று கூறி இது­வரை ஒரு இலட்­சத்து இரு­பத்­தை­யா­யிரம் ரூபாயைக் கறந்து விட்­டார்கள். இன்னும் கேட்­கி­றார்கள். நீங்கள் எவ்­வ­ளவு கொடுத்து வந்­தீர்கள் என்று சுய விசா­ரணை செய்து கொண்ட ஒரு சம்­ப­வமும் இடம்பெற்­றது. 

இன்­னொரு இலங்கைப் பெண்­மணி கூட வந்­த­வர்­களால் தவற விடப்­பட்டு மக்கா நகரில் திசை தெரி­யாது அழுது புலம்பிக்கொண்டு திரி­கிறார். அவ­ரது அவலக் குர­லைக்­கேட்ட ஒரு இலங்­கையர் (அவரும் வேறொரு குழுவில் வந்த புதி­யவர்) அப்­பெண்­ணுக்கு ஆறுதல் கூறி செய்­வ­த­றி­யாது திகைத்துக் கொண்­டி­ருக்­கிறார். என்ன பிரச்­சினை என்றால் அவரை அழைத்துச் சென்ற முக­வரின் பெயர் தெரி­யாது.

அவர் தங்கியுள்ள ஹோட்­டலின் பெயர் விபரம் தெரி­யாது. எந்த தொலை­பேசி இலக்­கமும் கையில் இல்லை. அவர் யார் என்­பதை உறு­திப்­ப­டுத்தும் எந்த ஆவ­ணமும் அவ­ரி­டத்தில் இல்லை. குறைந்த பட்சம் முக­வர்கள் விளம்­ப­ரத்­துக்­காக வழங்கும் தொலை­பேசி இலக்­கங்கள் பொறித்த கைப்பை கூட அவ­ரிடம் இல்லை. ஆனால் அவ­ரது ஊரையும் ஒரு மௌலவியின் பெய­ரையும் மற்றும் அவரால் கூற முடிந்­தது. வழி தவ­றிய அவரை எப்­படிக் கரை சேர்ப்­பது என்­பது புரி­யாமல் அந்த நண்பர் விழித்துக் கொண்­டி­ருந்­தார்.

 மறுபுற­மாக அப்பெண்­ணு­டைய மூன்று குழந்­தை­களும் ஒப்­பா­ரி­வைத்துக் கொண்டு தனி­மை­யாக்­கப்­பட்­டுள்ள தமது தாயைத் தேடு­வது வேறு ஒரு கதை­யாகப் பின்னர் அறிந்து கொண்டோம்.
இந்­நி­லையில் நாம் மூவர் தமிழில் கதைத்துக் கொண்டு மக்கா நகரில் போவதை செவிமடுத்த ஒருவர் ஓடி­வந்து நீங்கள் ஸ்ரீலங்­காவா? என்று கேட்டுவிட்டு வழி தவறித் தடு­மாறும் பெண் பற்றிய விப­ரத்தைச் சொன்னார்.

எம்­முடன் இருந்த ஒருவர் 1990களில் இருந்தே சுமார் 75 முறை­க­ளுக்கு மேல் ஹஜ், உம்ரா என்று குழுக்­களை அழைத்துச் சென்று அனு­பவம் பெற்ற ஒருவர். உடனே அவர் சில வினாக்­களைக் கேட்டார்.

 அவரால் எதுவும் கூற முடி­யாமல் திண்­டா­டினார். எது­வுமே அவ­ருக்குத் தெரி­யாது. அல்­லது வழி­காட்­டியால் சொல்லிக் கொடுக்­கப்­படவில்லை. எங்­க­ளி­ட­மி­ருந்த ஹோட்டல் கார்ட்டை காட்டி இதுபோன்று ஒன்று தர­வில்­லையா? எமது தோற்­பையைக் காட்டி இப்­படி ஒரு தோற்பை தர­வில்லையா? அப்­ப­டி­யாயின் அதில் விப­ரங்கள் இருக்­குமே என்று அவர் கேட்டார்.

கடை­சி­யாக அவர் தனது அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் குறிப்­பிட்ட தனக்குத் தெரிந்த வேறு ஒரு ஹோட்­லுக்குப் போய் குறிப்­பிட்ட மௌலவியின் பெரைச் சொல்லி விசா­ரித்­ததில் அவர் இன்ன குழுவில், இன்ன ஹோட்­டலில் இருப்­ப­தாக மற்­றொரு வழி­காட்டி மௌல­வியால் தகவல் கொடுக்­கப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் அவர் குறிப்­பிட்ட ஹோட்­ட­லுக்கு அப் பெண்ணை அழைத்துச் சென்றபோது, இதுதான் நான் இருந்த ஹோட்டல் என அப்பெண் தெரி­வித்து மகிழ்ந்தார். 

இப்­ப­டி­யான விட­யங்கள் ஏற்­ப­டு­வது சகஜம். பலர் வழியைத் தவ­ற­விட்ட போதும் தம்­மி­ட­முள்ள ஆவ­ணங்­களில் ஒன்றைக் காட்டி மொழி புரி­யாத ஒரு நாட்டில் தாம் செல்ல வேண்­டிய வழியைத் தேடிக் கொள்வர். எனவே அழைத்துச் செல்லும் முக­வர்கள் இதுபோன்ற விட­யங்­களை சிறி­தாக நினைக்கக் கூடாது. ஏனெனில் துஆவிற்குப் பதில் அவர்கள் பதுவா செய்­யலாம் அல்­லவா.

உம்­ராவில் மற்­றொரு வேடிக்­கையும் நடக்கிறது.  இடையே ஒரு நாள் தாயி­புக்கு அல்­லது அவ்­வா­றான  ஓர் இடத்­துக்கு அழைத்துச் செல்ல மேல­திக கட்­டணம் ஒன்று அங்கு வைத்து சேக­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும் சிலர் குறை கூறு­கின்­றனர். அவ்­வாறு சுய விருப்­பத்தில் அழைத்துச் சென்­றாலும் அது அவர்­க­ளது திட்­ட­மி­டலின் குறை­பாட்­டையே காட்­டு­கி­றது. 100 றியாழ் என்­றாலும் இலங்­கைப்­ப­ணத்தில் நான்­கா­யி­ரத்­திற்கும் அதி­க­மான பண­மாகும். அதனை முன்­கூட்­டியே தமது பெக்கேஜில் தெரி­யப்­ப­டுத்­தினால் அது மோசடி அல்­லது ஏமாற்­றமா­காது.   

அதேபோல் வச­தி­யான இடம் என்று கூறிக் கொண்டு கூடுதல் பணம் அற­வி­டப்­ப­டு­வ­தா­கவும், அதே­நேரம்  குறைந்த தொகைக்கு அழைத்துச் சென்று சற்றுத் தொலை­வா­னதும் வசதி குறைந்த இடங்­க­ளிலும் தங்க வைப்­ப­தா­கவும் குறை­ப­டு­கின்­ற­வர்­களும் இல்­லாமல் இல்லை. பொறுப்­பற்ற விட­யங்கள் பல உரு­வா­கின்­றன. அதி­ருப்தி யடையும் நிலை­மை­களும் உண்டு.  

இன்னும் சில முக­வர்கள், 10 நாள் பிர­யா­ணத்தை எடுத்துக் கொண்டால் விமானத்­திலும் விமான நிலை­யத்­திலும்  முதல் நாளும் இறுதி நாளும் கழிந்து விடு­வ­தா­கவும் சில­வேளை தங்கும் ஹோட்டல் முன் வாயிலில் பெட்டி படுக்­கை­க­ளுடன்  காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தா­கவும்  தெரி­விக்­கின்­றனர். இதனால் 10 நாள் என்­பது 7 நாளாகி சுருங்­கு­வ­தா­கக் கூறியவர்­க­ளையும் காண முடிந்­தது.

எனவே, ஹஜ் அல்­லது உம்ரா செல்ல நினைத்­துள்­ளவர் நன்கு அனு­பவம் வாய்ந்த ஏற்­க­னவே தமக்குத் தெரிந்­த­வர்கள் சென்று வந்த முக­வர்­க­ளுடன் தொடர்பு கொண்டு தமது பய­ணத்தை மேற்­கொள்­வதே பொருத்­த­மாகும். வெறும் கவர்ச்சி விளம்­ப­ரங்­க­ளுக்கும், குறைந்த கட்­டணம் என்ற மயக்க வார்த்­தை­க­ளையும் நம்பிவிட வேண்டாம்.

அத்­துடன் அநேக முக­வர்கள் வர்த்தக மய­மாக்­கப்­பட்­ட­வர்கள். அதா­வது, வழி­காட்­டி­க­ளாக வருவோர் நன்­மைகள் செய்­வதை விட சுற்­று­லாத்­து­றையை ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பதையும் காண முடிகிறது. அல்லது தமது எசமானுக்கு நன்றிக் கடன் செலுத்துவோராகவும் அவர்களது நடவடிக்கைகளைப் பாராட்டுபவர்களாவும் புகழ்பாடுபவர்களாகவும்  நடந்து கொள்வதையும் பலர் அவதானிக்காமல் இல்லை. 

எனவே, புனித பயணங்களுக்கு அழைத்துச் செல்வோரும் பயணம் மேற்கொள்வோரும் தாம் செல்வது நன்மையை நாடிய ஒரு புனித விடயம் என்பதைக் கருத்திற்கொள்வதுடன் சுற்றுலா மயக்கத்தில் மிதக்கக் கூடாது.

இயன்றவரை நல்லமல்கள் செய்வதற்கு வழிகாட்டப்பட வேண்டும். அதிகமானவர்கள் தமது ஹோட்டல் அறையில் உலகையும் நாட்டையும் மறந்த நிலையில் தூங்குவதும் நேரம் கிடைக்கும் போது பொருட்கள் வாங்கச் செல்வதும் என்றால் அது பல இலட்சம் செவழித்து குடும்பத்துடன் உம்ரா சென்றதன் பயன் என்னவாகும். தமது துஆக்களை பதுவாவாக மாற்றும் நிலையை இரு சாராரும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது.