தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பகிரங்க அதிகார சபையின் தகவல்களை
பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கானகட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அராசாங்கம் வெளியிட்டுள்ளது.
தகவலறியும் உரிமைச்சட்டம் 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்ததை தொடர்ந்து
குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு (04.02.2017)
அன்று அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
2016 ஆம்ஆண்டின் 12ஆம் இலக்க தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவலொன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர் விரும்பிய மொழியில் வாய் மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பமானது கட்டாயமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடாதபோதும் விண்ணப்பங்களை வழங்குவது விரும்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய் மொழிமூலமாக தகவலொன்றை கேட்கும் ஒருவர், தகவலொன்றை வழங்குவற்காக
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடம் வாய் மொழி மூலமாக
தெரிவிக்க வேண்டும். அதனை தகவல் அதிகாரி விண்ணப்பத்தில் குறித்துக்கொள்வார். இறுதியாக அவர் தகவலை கேட்டவருக்கு வாசித்துக்காட்ட வேண்டும். அதன் பின்னரே கையொப்பமோ அல்லது கைவிரல் அடையாளமோ இடப்பட வேண்டும்.
விண்ணப்பத்தினூடாக தகவலொன்றை கேட்கவிரும்பினால் தகவல் அதிகாரி
விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.நிரப்புவதற்கு நியாயமான
உதவிகளை தகவல் அதிகாரி வழங்க வேண்டும். அதேநேரம் தகவலை தேடித்தரும்
செயல்முறைக்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் தகவலை பெறமுடியும்.
தகவல் கோரிக்கை ஏற்றுக்கொண்டதற்கு எழுத்துமூலமான சமர்ப்பித்தலொன்றை தகவல்
அதிகாரி வழங்கவேண்டும். கோரிக்கையை ஏற்றுக்கொணடவரின் பெயர், பதவி,
முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் போன்ற தகவல்களை உள்ளடக்கிய
விபரங்கள் அதிலிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தகவல் வழங்கப்படுமா இல்லையா அல்லது வேறு ஏதேனும் அரச திணைக்களத்தில்
தான் பெறவேண்டும் என்றால் அதனை தகவலை கேட்டவருக்கு 7 நாளைக்குள் தெரிவிக்க
வேண்டும்.
தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டால், தகவல்களுக்கான உரிமை ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட கட்டண அட்டவணைக்கு இணங்க கட்டணம் ஒன்றைச் செலுத்தியதும் தகவல் வழங்கப்படும் என கோரிக்கை விடுத்தநபருக்கு தகவல் அலுவலர் தெரிவிப்பார். தகவலுக்கு, கட்டணம் செலுத்த வேண்டுமாயின், கட்டணம் செலுத்தி 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படுதல்
வேண்டும். கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டிய தேவை இல்லை என்றால் 14
நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும்.
கேட்கப்பட்ட தகவல் A4 தாளில் பிரதி எடுக்க ஒருபக்கத்துக்கு இரண்டு ரூபாய், A3 தாளில் ஒருபக்கத்துக்கு நான்கு ரூபாய் அறவிடப்படும். அச்சு வடிவத்தில் பெறவேண்டுமாயின் A4 தாள் ஒருபக்கத்துக்கு நான்கு ரூபாவும் A3 தாள் ஒருபக்கத்துக்கு ஐந்து ரூபாவும் அறவிடப்படும். இறுவட்டு (CD), பெண்ரைவ் அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் ஒன்றில் தகவல்களைப் பிரதியிடுவதற்கு 50 ரூபாவும் அறவிடப்படும். மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் தகவல்களுக்கு கட்டணம் அறவிடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலொன்றை கோருவதற்கான விண்ணப்ப படிவத்தில் கோரிக்கையாளரின்
பெயர், முகவரி, தொலைபேசி இல, மின்னஞ்சல் முகவரி, கோரப்படும் தகவல்கள்
பற்றிய விபரங்கள்; (போதிய இடம் காணப்படாவிடில் வேறு தாளில் இணைக்கலாம்)
குறித்த பகிரங்க, அதிகாரசபை, கோரப்படும் தகவல்கள், தகவல் கோரப்படும்
குறித்த காலப்பகுதி (பொருத்தமாயின்), தகவல்கோரப்படும் விதம் வேலை
சம்பந்தப்பட்டதா?, ஆவணம் பதிவுகளைப் பரிசோதிப்பதா? ஆவணஙகள் அல்லது
பதிவுகளிலிருந்து குறிப்பெழுதுதல், பிரித்தெடுத்தல் அல்லது
சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளா?, பொருட்களாயின் சான்றுபடுத்தப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்,
அத்தகைய தகவல் ஒரு கணினியில் அல்லது ஏதேனும் வேறு சாதனத்தில்
களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பின்
நாடாக்கள் / வீடியோ கெசற்றுகள் / ஏதேனும் வேறு இலத்திரனியல் வடிவம் /
அச்சுப் பிரதிகள், தகவலைப் பெறவிரும்பும் மொழி, கோரப்படும் தகவல் பிரஜை
ஒருவரின் வாழ்க்கை அல்லது சொந்தச் சுதந்திரம் தொடர்பானதா? எனவும் ஆம்
எனில், நம்பிக்கைக்கான காரணத்தையம் குறிப்பிடவேண்டும். வேறு ஏதேனும்
விபரங்கள் தேவைப்படின் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
கோரிக்கையாளர் ஓர் இலங்கைப் பிரஜையா? என்ற விடயத்தையும் குறிப்பிட
வேண்டும்.
ஏ.ஜெயசூரியன்