தகவல் அறியும் பொதுமக்கள் உரிமைச் சட்டம் பெப்ரவரி மாதம் ஆரம்பத்திலிருந்து அமுலுக்கு வந்துள்ளதை நாம் அறிவோம். இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்திலிருந்து தகவல் அறியும் உரிமையை பிரஜைகள் பெற்றுள்ளனர். ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான தகவல் அறியும் பொதுமக்கள் உரிமை இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வழங்கப்படுகின்ற இரண்டாவது சுதந்திர உரிமையென்று கூறினால் அது மிகையாகாது.
தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வெறும் ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இலங்கை இறுதியாக இந்த உரிமையை வழங்கினாலும், நடைமுறையில் கொண்டுவருவதில் முதன்மையானதாகும். பங்களாதேசத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர 5ஆண்டுகள் கடந்தன.
தகவல் அறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் பயிற்றுவிக்கப்பட்ட தகவல் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9000க்கு மேற்பட்ட அதிகாரிகளை நியமிக்க இருப்பதாகவும் ஊடக அமைச்சின் தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பியதிஸ்ஸ ரனவீர தெரிவித்திருந்தார்.
மக்கள் உரிமையை உறுதிசெய்வதே தகவல் அறியும் சட்டத்தின் பிரதான அம்சமாகும். மக்களுக்காக வழங்கப்படும் இவ்வாறான உரிமையொன்று தொடர்பில் பொது மக்கள் போதியளவு தெளிவுபடுத்தப்பட்டுள்ளார்களா? என்ற கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது. தமக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமையொன்று, என்ன? ஏது? இதன் பிரதிபலன்கள் என்ன? யாருக்கு? எவ்வாறு? போன்ற
கேள்விகளே பொதுமக்களிடம் இருப்பதை அவதானிக்கமுடிகின்றது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் விடயத்தில் அரசாங்கம் மற்றும் உரிய தரப்பினர் தவறிழைத்துவிட்டனரா? ஊடகம் மற்றும் நாளாந்த செய்திகளுடன் தொடர்புடையோர் மாத்திரமா இதுவிடயமாக அறிந்துவைத்துள்ளனர்? பொது மக்களின் அடிப்படை உரிமை பற்றி அவர்களுக்கு யாதொன்றுமே தெரியாதா? ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமான உரிமையென்று பொதுமக்கள் நினைக்கின்றனரா? சிங்கள மொழியில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் கூட தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம்.
முஸ்லிம்களிடம் இதுவிடயமாக எவ்வாறான எதிர்பார்ப்புள்ளது? அவர்கள் இவ்விடயத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனரா? அவர்களின் தேவை என்ன? போன்ற விடயங்கள் தொடர்பாக தோராயமாக சிலரிடம் நடத்திய கலந்துரையாடல்களின் தொகுப்பை பார்ப்போம்.
தமிழ் பேசும் மக்களிடையே விழிப்புணர்வு போதாது
(Najah Mohamed (இஸ்லாஹி)- ந.தே.மு. பொதுச் செயலாளர்)
தகவல் அறியும் உரிமை என்பது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் முக்கிய விடயங்களில் ஒன்றாகும். அரச மற்றும் மக்கள் நிதி கையாளப்படுகின்ற நிறுவனங்களில் பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன்மூலம் ஏற்படுத்தப்படுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் இதன்மூலம் பயனடையவேண்டும். தமிழ் பேசும் மக்களும் இவ்விடயத்தில் உச்ச பயனடைய
வேண்டும். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இதுதொடர்பான தெளிவு போதாத நிலை காணப்படுகின்றது. அரசியல் கட்சிகளும்,
சிவில் அமைப்புகளும் தமிழ் பேசும் மக்களிடம் இவ்விடயத்தில் கூடுதல் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். தகவல் அறியும் சட்டமூலத்தை வெறுமனே தகவல்களைப் பெறுவதற்காகவன்றி, நாட்டின் முன்
னேற்றத்துக்கான ஆரம்ப கட்டம் என்றே நோக்கவேண்டும். ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்ற பிழையான கண்
ணோட்டமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமன்றி பொதுமக்கள் அனைவருக்குமான ஒரு வரப்பிரசாதமாகும் என்பதை புரிந்து வினைத்திறன்மிக்க விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
பாடசாலை அனுமதி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் அறிகுறி - றியாஸ் முஹ்ஸின்
தகவல் அறியும் சட்டமூலம் குறித்து நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. பேஸ்புக்கில் சில வீடியோக்கள் பகிரப்பட்டிருந்ததைக் கண்
டேன். அவற்றில் இதுதொடர்பான விளக்கம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு கிராம சங்க கூட்டத்தில் தரம்குறைந்த முறையில் செப்பனிடப்பட்டு, பழுதடைந்த பாதை தொடர்பான முறைப்பாட்டை யாரிடம் முன்வைப்பது என்று கலந்துரையாடுவது போன்ற வீடியோ. அருகில் உள்ள பாடசாலையில் தனது குழந்தையை சேர்க்க முடியாததன் காரணம் தெரியாத பெற்றோர் மற்றும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச கொடுப்பனவு என்னவென்றே தெரியாத பணிப்பெண்கள் இருவர்.
இதுபோன்ற வீடியோக்களால் தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக அறிந்துகொண்டேன். இவற்றை
சிங்கள மொழியில் மாத்திரமே கண்டுகொள்ள முடிந்ததை ஒரு குறையாகவும் கண்டேன். தமிழ் பேசும் மக்களும் இவ்விடயத்தில் தெளிவுடுத்தப்பட
வேண்டும். பெற்
றோர் அருகிலுள்ள பாடசாலைகளில் தமது குழந்தைகளுக்கு அனுமதி கிடைக்காமை தொடர்பில் அதிகம் வருந்துவதைக் கண்டுள்ளேன். இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தேசிய ரீதியில் கவனத்தை பெறவில்லை
(Siraj Mashoor - உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம்)
தகவல் அறியும் உரிமை என்பது இலங்கையில் ஒரு புதிய விடயம். மக்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரம் ஏதோ அறிந்துவைத்துள்ளனர். தகவல் அறியும் உரிமை நாட்டின் பரவலான கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டது. இதுவொரு பொதுச் சட்டமென்று அறிந்துவைத்துள்ளவர்களும் நடைமுறைரீதியான தெளிவின்றியே இருக்கின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தல்கள், நன்மைகள், சாதகங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். விளக்கங்கள் அடங்கிய கையேடுகள் தயாரித்து விநியோகிக்கப்படல்
வேண்டும். உள்ளூர் மட்டத்தில் பாரிய விழிப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். சமூக தலைவர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் சமூகத்தில் கருத்துருவாக்கம் செய்யவேண்டும்.
மேற்படி கலந்துரையாடல்களின் சாரம்சத்தை நோக்கும் போது சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள்கூட தமிழில் நடைபெற்றில்லை என்பதும் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வும் இல்லை என்பதும் புலனாகின்றது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்ற சிறு விளம்பரங்கள், காணொளிகளும்
சிங்கள மொழியில் மாத்திரமே இருப்பதை அவதானிக்க முடிந்தது. முகப்புத்தக வாயிலாகவும் சிங்கள மொழியில் மாத்திரமே செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச் செல்வதை அவதானிக்கமுடிந்தது. நாட்டின் சகல மக்களுக்காகவும் வழங்கப்பட்ட ஒரு உரிமை தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவின்றி இருப்பது ஜனாநாயகத்துக்கு ஆரோக்கியமான விடயமொன்றல்ல.
களுபோவில பகுதி பத்திரிகை விநியோகஸ்தராக தொழிலாற்றும் வினோதினியிடம் தகவல் அறியும் சட்டமூலம் குறித்து வினவியபோது, தான் இதுதொடர்பில் எந்தவொரு விடயத்தையும் அறிந்தவராக இல்லையென்று கூறினார்.
போதிய தெளிவுபடுத்தல்களை வழங்கிய பின்னரும் அது தனக்கு பயனளிக்காத ஒன்றே என்ற எண்ணம் அவளிடம் இருப்பதை கண்டுகொள்ள முடிந்தது.
மக்கள் உரிமைகள் தொடர்பில் அவர்கள் போதியளவில் அறிவுறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தகவல் அறியும் சட்டமூலத்தால் சாதிக்கக்கூடிய அனுகூலங்கள், நன்மைகள் புரியவேண்டும். இந்தியாவில் தகவல்களை கேட்டு விண்ணப்பிப்போரில் அதிகமானோர் சிறுவர்கள்.
அதிலும் வருடமொன்றில் அதிக தகவல்களை கேட்டு விண்ணப்பித்திருந்த சிறுவர்களின் செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. மக்கள் அவதானமாக இருக்கும்போது மாத்திரமே அரச நிர்வாகம் வினைத்திறன்மிக்கதாக அமைகின்றது. அதனிலே நாட்டின் அபிவிருத்தியும் ஜனநாயகமும் தங்கியுள்ளது.
(ஆதில் அலி சப்ரி)