Top News

சுயகட்டுப்பாடு ஊடகங்களுக்கு அவசியம் : ஊடகத்துறை அமைச்சர்



சட்டங்களை விதித்து ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதை விடவும், அவர்களே சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செயலாற்றுவது சிறந்தது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பாக ஊடக அமைப்புக்களினதும், ஊடக நிறுவனங்களின் பிரதானிகளினதும் கருத்துக்களைப் பெறவும் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கண்டி – பேராதனையில் உள்ள மரபணு ஆலை வள மையத்தில் பயிற்சிபெற்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்காக நாங்கள் முயற்சித்து வரும் பிரயத்தனம் குறித்து தற்போது பேசப்பட்டு வருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சரவை அங்கத்தவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இவ்வாறான ஒரு பிரிவு பொதுசன ஊடகமொன்றுக்காக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். பத்திரிகை ஒன்றில் பிழையான செய்தி அல்லது நபர் ஒருவர் மீதான பிழையான கருத்தை வெளியிட்டால் முறைப்பாடு செய்த பிரிவொன்று காணப்படுகிறது. ஆனால் இலத்திரனியல் ஊடகமொன்றில் அந்த பிழை நிகழ்ந்தால் அதற்கெதிராக முறையிட பிரிவு இல்லை. அதனால் சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைப்பது பற்றிய எமது கவனம் திரும்பியிருக்கிறது. இதுகுறித்து மக்களது கருத்துக்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போதும் பல்வேறு கருத்துக்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் மகாநாயகர்களையும் சந்தித்து விளக்கமளித்துள்ளேன். ஏனைய மதத் தலைவர்களது யோசனைகளையும் நாங்கள் பெறவிருக்கின்றோம். விசேடமாக அடுத்தவாரத்திலிருந்து பொதுசன ஊடகங்களின் அமைப்புக்களிடம் இருந்தும் யோசனைகளைப் பெற எதிர்பார்க்கின்றோம் என்பதோடு ஊடக நிறுவனங்களின் பிரதானிகளின் கருத்துக்களையும் பெறவுள்ளோம். சட்டங்களை விதித்து அதன் பிரிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடவும் சுயகட்டுப்பாடுகளை ஒவ்வொரு ஊடகவியலாளனும் ஏற்படுத்திக்கொண்டால் நாட்டிற்கு நல்லதை செய்ய முடியும் என்பதே எனது கருத்தாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post