எம்.ஜே.எம்.சஜீத்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும், அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பின்னடைவுகளையும் கண்டு வன்னி மகன் றிஷாட் பதியுத்தீன் முஸ்லிம் சமூகத்திற்கு தலைவராக வருவதற்கு முயற்சிக்கிறார் என இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், பொறியியலாளருமான எஸ்.ஐ மன்சூர் தெரிவித்தார்.
எமது நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை வகிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எந்த தகுதியுமில்லை அவர் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு தலைவராக வருவதற்கு என்னுவது பகல் கனவாகும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும், அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பின்னடைவுகளையும் கவனத்திற்கொண்டு அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கிழக்கில் கால் பதிக்கின்றார்.
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் முஸ்லிம் சமூகத்திற்கு தலைவராகுவதற்கு மாத்திரம் என்னுகிறாரே தவிர முஸ்லிம் சமூத்தினுடைய முக்கிய பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயத்தில் அவர் அக்கரை செலுத்தவில்லை. தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்ததை வைத்துக்கொண்டு விலைபேசி வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றது. எனவே இவைகளை கருத்திற்கொண்டு ரிஷாட் பதியுத்தீனுடைய இந்த நிகழ்ச்சி நிரலுக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. கண்டியைச் சேர்ந்தவரும், வன்னியைச் சேர்ந்தவரும் கிழக்கு மண்ணையும் மக்களையும் ஆளுவதற்கும், எமது மக்களை ஏமாற்றுவதற்கும் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களினால் கிழக்கு மண்ணிலே இருந்து கிழக்கு மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சிலரின் குடும்பச்சொத்தாக மாறியுள்ளது. இந்தக்கட்சியினுடைய மூத்த போராளிகள் இப்போது திட்டமிடப்பட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அண்மையிலே கட்சியினுடைய தவிசாளரும், செயலாளரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிக்கு கிழக்கிலே சவாலாக இருந்த ஒரு கட்சியாகும். தேசிய காங்கிரசினுடைய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கிழக்கு மாகாணம் தனியாக பிரிவதற்கு குரல் கொடுத்தது மாத்திரமல்லாமல் கிழக்கு மண்ணிலே பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் செய்து சரித்திரம் படைத்த தலைவராவார். அவர் இன்று அரசியல் அதிகாரமில்லாமல் இருப்பதற்கு காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுடைய திட்டமிடப்படாத கிழக்கு விஜயமேயாகும்.
வடக்கு மக்களுடைய மீள் குடியேற்றம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்க்க முடியாத அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் கிழக்கு மக்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவது என்பது இயலாத காரியமாகும். எனவே அற்பசொற்ப இலாபங்களையும், ஆசை வார்த்தைகளையும் நம்பி கிழக்கு மக்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது. எனவே எதிர்காலத்தில் எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். இன்று வட கிழக்கை இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமையாக்கி ஆளுவதற்கு தமிழ் தலைமைகள் திட்டம் வகுத்து வருகின்றனர்.
இவ்வாறான ஆபத்திலிருந்தும் கண்டி மற்றும் வன்னி தலைமைகளினாலும் ஆளப்படுகின்ற அடிமைச் சமூகமாக ஒரு போதும் கிழக்கு மக்கள் இருந்துவிடக் கூடாது. கிழக்கு மண்ணையும், மக்களையும் ஆளுவதற்கு இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கின்ற தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவை பலப்படுத்துவதற்கு கற்ற சமூகம் முன்வரவேண்டும். கிழக்கு முஸ்லிம் சமூகத்தை விற்று தங்களது பொருளாதாரத்தை விருத்தி செய்கின்ற அரசியல் தலைவர்களை இனங்கண்டு அவர்களை விரட்டுவதற்கு அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.