ஈரான் கடந்த 29ம் தேதி அன்று ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணையை, டெஹ்ரானுக்கு கிழக்கு செம்னான் என்ற இடத்தில் சோதனை செய்தது. அந்த ஏவுகணை 1010 கி.மீ தூரம் சென்று வெடித்தது. இதேபோன்ற சோதனையை கடந்தாண்டு ஜூலை மாதமும் ஈரான் சோதனை செய்தது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரு வித அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஈரானிலிருந்து இஸ்ரேல், மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்களை குறிவைத்து எளிதாக தாக்கிவிடலாம். இதனால் ஈரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்த அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, ‘‘ஈரானின் இந்த ஏவுகணை சோதனையை சாதாரண விஷயமாக அமெரிக்கா எடுத்துக் கொள்ளாது’’ என்றார்.
இந்த கண்டனத்துக்கு பதில் அளித்த, ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹோசேன் டெக்ஹான் கூறுகையில், ‘‘ஈரானின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் கடந்த வாரம் ஏவுகணை சோதனை நடத்தினோம். இது அணு ஒப்பந்தத்துக்கு முரண்பாடானது அல்ல. அணு ஒப்பந்தத்தில் ஏவுகணை விவகாரம் இடம் பெறவில்லை. எங்கள் பாதுகாப்புக்காக ஆயுத சோதனை மேற்கொள்வோம் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி தற்போதைய சோதனைகள் நடக்கின்றன. இதில் எந்த வெளிநாடுகளும் தலையிட அனுமதிக்க மாட்டோம். எங்கள் பாதுகாப்பு திட்டங்களை காரணம் கூறி அமெரிக்க அரசின் புதிய நிர்வாகம் பதட்டத்தை ஏற்படுத்தாது என நம்புகிறோம்’’ என்றார்.
ஈரானின் விளக்கத்தை ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை. ஈரானை இறுக்கி பிடிக்க அமெரிக்கா முடிவெடுத்து விட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிலின் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஈரான் கடந்த மாதம் 29ம் தேதி அன்று அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. மேலும் சவுதி கடற்படை கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஈரானின் நிலையற்ற நடவடிக்கையை காட்டுவதாக உள்ளது. இவை அமெரிக்காவின் நட்பு நாடுகளை அச்சுறுத்துவதாக உள்ளன. இது போன்ற தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள், ஆயுத பரிமாற்றம், தீவிரவாதத்தை ஆதரிப்பது போன்ற சர்வதேச விதிமுறைகளை கண்டிக்க ஒபாமா நிர்வாகம் தவறி
விட்டது.
இவற்றை டிரம்ப் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்காது. அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு ஈரான் நன்றியுடன் இருக்க வேண்டும். அதைவிடுத்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபடுகிறது. ஏவுகணை சோதனைக்கு, ஈரான் ஐ.நா தீர்மானம் 2231 தடை விதிக்கிறது. அதை முழுமையாக அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். இப்போதைக்கு ஈரானை எச்சரிக்கை பட்டியலில் வைத்துள்ளோம். ஈரான் தொடர்ந்து இது போல் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என கூறியுள்ளார். ஈரான் மீது அமெரிக்காவின் பிடி இறுகுவதை இந்த அறிக்கை தெளிவாக காட்டுகிறது.25 ஈரான் நிறுவனங்களுக்கு தடை
ஈரான் மேற்கொண்ட பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக ஈரான் மீது தடைவிதித்து இருக்கிறது அமெரிக்கா. அதோடு ஈரானிலும், பிற இடங்களிலும் இருக்கின்ற 12 நிறுவனங்கள் மற்றும் 13 தனிநபர்களுக்கு எதிராக மொத்தம் 25 ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.