Top News

மு.கா பேராளர் மாநாடு: மரணித்தோருக்கும் அழைப்பிதழ்



ஏ.எச்.ஏ. ஹுஸைன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பென்குவேட் ஹோலில், ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மரணித்தோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.   எனினும், உயிருடனிருக்கும் ஸ்தாபகப் போராளிகளை, கட்சி நிர்வாகம் மறந்து விட்டுள்ளது என, காங்கிரஸின் மூத்த போராளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.  

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக 2015ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய ஸ்தாபக போராளியும் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர்களில் ஒருவருமான ஏறாவூரைச் சேர்ந்த யூ.எல். முஹைதீன் பாவா தெரிவிக்கையில்,   “கட்சியில் உள்ள நிர்வாக ஒழுங்கீனம் காரணமாக, பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மரணித்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஏறாவூர்ப் பிரதேசத்தில் இருந்து 35 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் பலர் மரணித்துப் போனவர்கள்.  ஆனால், இன்னமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களாகவும் மூத்த ஸ்தாபக போபராளிகளாகவுமுள்ள பலருக்கு பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் அழைப்புக் கிடைக்கவில்லை. இதை ஓர் அகௌரவமாகவும் ஒழுங்கீனமாகவும் பார்க்க வேண்டியுள்ளது. 

 1987ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினராகவும் மூத்த போராளியாகவும் நான் இருந்து வருவதோடு, இதுவரை மறைந்த தலைவரின் காலம் தொடங்கி தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் தலைமையில் இடம்பெற்ற அத்தனை பேராளர் மாநாடுகளுக்கும் கௌரவமாக அழைக்கப்பட்டு கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால், விசித்திரமாக இம்முறை எனக்கு, பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் அழைப்புக் கிடைக்கவில்லை” என்றார்.    (TM)
Previous Post Next Post