Headlines
Loading...
அஷ்ரபின் மரண விசாரணைக்கு  என்ன நடந்தது?

அஷ்ரபின் மரண விசாரணைக்கு என்ன நடந்தது?



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம் அஷ்ரபின் மரணம் தொடர்பான தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பித்துள்ளார்.   

 ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோனுக்கு பதிவுத் தபால் மூலம் அவர் அனுப்பியுள்ள இவ்விண்ணப்பத்தில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ கீழ் தனக்கு அப்பிரதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.  இவ்வாணைக்குழுவின் அறிக்கையை, பகிரங்கமாக வெளியிடக் கோரி, பஷீர் சேகுதாவூத், இதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தும், அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாத நிலையிலேயே, புதிதாக அமுலுக்கு வந்துள்ள ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ கீழ் அவ்வறிக்கையின் பிரதி தனக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் அவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.    அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,    “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் அடைந்தமை, முஸ்லிம் சமூகத்துக்கும் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருந்தது.    

அஷ்ரபின் மரணம் குறித்து புலனாய்வு செய்வதற்கும் அதன் பின்னணியில் திட்டமிட்ட சதி அல்லது சட்ட விரோத செயற்பாடுகள் இருக்கின்றனவா எனக் கண்டறிவதற்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால், 2001ஆம் ஆண்டு, தனிநபர் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.    ஓய்வு பெற்ற நீதியரசர் எல்.கே.ஜி வீரசேகரவின் தலைமையிலான அவ்வாணைக் குழு புலனாய்வுகளை மேற்கொண்டது. புலனாய்வு நடவடிக்கைகளுக்காக அவ்வாணைக் குழுவுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்புலனாய்வு நடவடிக்கைகள் குறித்த காலவரையறைக்குள் நிறைவு செய்யப்பட்டு, அந்த அறிக்கையும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டது.    அதற்குப் பின்னரான 16 வருட கால இடைவெளியில் இன்றுவரை ஆணைக்குழுவின் ‘கண்டறிதல்கள்’ எதுவும் முழுமையாகவோ, சுருக்கமாகவோ பொதுமக்களுக்கு வெளியிடப்படாமலேயே இருக்கிறது.    

இக்கால இடைவெளியில் சந்திரிகா குமாரதுங்க, 5 வருட காலமும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 9 வருட காலமும் ஆட்சியில் இருந்தனர். அத்துடன், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.    இம்மூன்று, ஜனாதிபதிகளும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கான பிரயத்தனங்கள் எதனையும் மேற்கொள்ளாமைக்கான காரணங்கள் எவை எனத் தெரியாதுள்ளன.    

அஷ்ரபிடம் அளவற்ற நன்மதிப்பையும், மரியாதையையும் கொண்டுள்ள பொதுமக்கள், அவரது மரணத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள தீவிர ஆர்வமுடையவர்களாக உள்ளனர். இது உண்மையைக் கண்டறிவதில், அப்பொதுமக்களுக்கு உள்ள உரிமையாகும்.    ஆகையால், 2017 பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ கீழ், வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையின்படி மேற் குறிப்பிட்ட அறிக்கையின் பிரதியொன்றை எனக்குப் பெற்றுக் கொள்ளும் முகமாக, என்னுடைய இவ் விண்ணப்பத்தை தங்களுக்கு அனுப்புகிறேன். இவ்விடயம் தொடர்பாக ஏற்படும் சகல செலவுகளும் என்னால் ஏற்றுக் கொள்ளப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.