Headlines
Loading...
நல்லாட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்கிறார் முன்னாள் ஊடக ஒம்புட்ஸ்மன்

நல்லாட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்கிறார் முன்னாள் ஊடக ஒம்புட்ஸ்மன்


எம்.எஸ்.எம். ஸாகிர்
அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த அரசு போதும் என்றாகிவிட்டது. அவர்கள் இது இனிப்பான பழம் என்று எட்டி எட்டிப் பறிக்க முற்பட்டார்கள். இப்போது இது விஷப்பழங்களாக மாறி விட்டதைக் காண்கிறோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ. எச்.எம். அஸ்வர் கூறினார்.
நேற்று காலை பொரளை, டாக்டர் என்.எம். பெரேரா மையத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளுடைய ஊடக சந்திப்பின் போது அஸ்வர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முழுநாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுள்ள பல இன்னல்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் எடுத்துரைப்பதற்காக வேண்டி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாஙக்க குமாரதுங்கவை முஸ்லிம் கவுன்சில் சார்பில் சென்ற தூதுக்குழுவினர் எடுத்தியம்பிய போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, ‘தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக வாருங்கள் அப்போது இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்’ என்று கூறியுள்ளார்.
இது எப்படியென்றால், “ஆமையைப் பிடித்து ஆமையிடம் நீ முடி வளர்த்திக்கிட்டு வா அதன் பிறகு உன் பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும்” என்று கூறி பிரச்சினையிலிருந்து அவர் கழன்று சென்று விட்டார்.
இது முஸ்லிம்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்பதை முஸ்லிம் முற்போக்கு முன்னணி எடுத்துரைக்க விரும்புகின்றது.
றிஷாத் பதியுதீன் பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு குடியிருப்பு பகுதிகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போது அதை எழுத்து மூலமாகத் தெரிவியுங்கள் என்று கூறி ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து பிரச்சினையைத் தீர்க்காமல் நழுவி இருக்கின்றார்.
முஸ்லிம் சமுதாயத்தை மேலும் மேலும் ஏமாற்றலாம் என்ற மாதிரியாகத்தான் இந்த நல்லாட்சியைச் சேர்ந்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமையப் பெற்றிருக்கின்றன. 98 சதவீதமான வாக்குகளை அளித்த அந்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக அவர்களுடைய செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். திக்குத் தெரியாத திசையை நோக்கி இந்த நாட்டு முஸ்லிம்கள் பயணியுங்கள் என்றுதான் இந்த நல்லாட்சியின் பிரதம அமைச்சரும் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் கூட தங்களுடைய நடவடிக்கையின் மூலம் நாட்டுக்கு நிரூபித்துள்ளார்கள்.
எனவே இது ஒரு காலும் நடைபெறாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட இந்த அரசங்கம் இனவாத போக்கில் செல்கின்றது என்று கண்டித்துள்ளார். இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கூட இந்த அரசாங்கம் கண்சாடையாகக் கூட உதவி செய்யவில்லை என்ற தோரணையில் றிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.
அரசாங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்படித்தான் கூறுகின்றார்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த அரசாங்கம் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்கள் இது இனிப்பான பழம் என்று எட்டி எட்டிப் பறிக்க முற்பட்டார்கள். அவை இப்போது விஷப் பழங்களாக மாறிவிட்டதைக் காண்கிறோம். இந்த நிலையில் எதிர் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைய விருக்கின்ற அரசுக்கு இந்த அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பொழுதே வந்து சேருமாறு இந்த நாட்டு முஸ்லிம் சார்பாக நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
குருநாகல் மல்லவப்பிட்டியவில் நடந்த கூட்டத்தில் முன்னைய ஜனாதிபதி, சில பல தீங்கின் விளைவாக முஸ்லிம்கள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கின்றார். எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமைக்கவிருக்கின்ற, மக்கள் உண்மையாக விரும்பும் அரசாங்கத்தில் முஸ்லிம்களுடைய வகிபாகத்தையும் எடுத்தியம்புவதற்காக வேண்டி ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாத் பதியுதீன் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பொழுதே மஹிந்த ராஜபக்ஷவோடு வந்து இணைந்து கொள்ளுமாறு நான் அறை கூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்திலே முஸ்லிம் சமுதாயத்திற்கு விளைய விருக்கின்ற தீமைகளைத் தடுப்பதற்காக வேண்டி நான் உள்ளார்த்தமாக நேர்மையாக சகோதர வாஞ்சையோடு அவர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோளாகும்.” – என்றும் அவர் தெரிவித்தார்.