எம்.எச்.முஸ்தாக் முஹம்மட்
கண்களை மூடிக்கொண்டு தலைமகனின் மறைவில் உதித்த கனவான்கள் முஸ்லிம் சமூகத்தை தனித்துவ உரிமைப் போராட்டம் என்ற கோசத்தில் மறைத்து பேரினவாதக்கட்சிகளினால் பெறப்பட்ட சலுகைகளை தங்களுக்குள் தாங்களாகவே ஏப்பமிட்டு முஸ்லிம் காங்கிரஸின் சொத்துக்களை சூரையாடிவிட்டு அன்று இருந்த பாலகனைப்போல மீண்டும் கட்சி எனும் நாமத்தோடு மாத்திரம் இப்போது கட்சியை மக்களுக்கு கையளிக்க நினைக்கின்றனர்.
தலைவர் அஸ்ரஃப்பின் பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியின் மேய்ப்பாளர்கள் என சமூகத்தினால் அடையாளங் காணப்பட்ட ஒவ்வொருவரையும் சிறிய சிறிய கூட்டங்களாக தலைவர் வெளியேற்றிவிட்டு பின்னர் எஞ்சிக்கிடந்த சிலரையும் வெளியேற்றி தன்னதிகாரத்தின் கீழ் அனைத்தையும் வளைத்தெடுத்து வடகிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை பேரினவாத அல்லது இனவாதக் கட்சிகளிடம் அடமானம் வைக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்துக்கான அத்திவாரத்தையே மேய்ப்பாளர்களின் முன்னே தலைவர் இடுகின்றார் என்பதை இன்று மக்கள் இனம் கண்டு கொண்டார்கள்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அரசை விட்டு பிசக முடியாது என சிறுபான்மை சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்த சட்டமூலத்துக்கெல்லாம் கொந்தராத்து அடிப்படையில் வாக்களித்த சங்கதிகளை அவர்களே போட்டு உடைக்கின்றார்கள். சதியைச் செய்தவர்களைக்ககொண்டு அவர்களின் சதிகளுக்கு நியாயம் தேட வைத்துள்ளான் இறைவன். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே!! அதுதான் இது!!
மக்களுக்குள் அவரவர் வேசங்களை அவர்களே கழற்றி வைக்கத் தொடங்கிவிட்டனர் அதனால் மக்கள் விழித்துக்கொண்டனர். உறங்கி உணர்விழந்து நம்பிக்கை ஊட்டப்பட்ட பதவிஆசைகளில் இரவெல்லாம் கனவு கண்டு விடிந்தும் கனவுலகில் வாழ் எனச் சொன்ன தலைமையின் வாக்குறுதிகள் கடற்கரை மனதில் சிறுபிள்ளைக்கு பெயர் எழுதிக்காட்டிய விளையாட்டையே தலைவன் உயர்பீட கட்சி காவலாளிகளுக்கு விளையாடிக்காட்டி உள்ளார் என்பதை இனியும் புரியாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு உயர்பீட உறுப்பினர்கள் வந்துவிட்டார்கள்.
அன்று தான் சூழ்நிலைக்கைதி என்றவுடன் பஸீர்சேகுத்தாவுத்தின் தாளத்துக்கு தலைவர் ஆடுகிறார் ஆகவே தலைவர் பாவம் என்றவர்கள் எல்லாம் இன்று மரித்துப்போய் நின்கின்றார்கள். அன்று இவர்களுக்கும் தலைவர் சித்திரமே கீறி பஸீர் ஹசனலி போன்றோரிடமிருந்து உயர்பீட உறுப்பினர்களை பிரித்தாளும் தந்திரமே அதுவாகும் என்பது இப்போது சிலருக்கு விளங்கிவிட்டது.
ஆகவேதான் கடற்கரை மனலிலே தலைவர் என பெயர் எழுதி விளையாடும் விளையாட்டை எதிர்வரும் பெப்ரவரி 12ல் எழுதிக்காண்பிக்கப்போகிறார்கள். தலைவர் பேராளர் மகாநாட்டை அலையில்லா கடல் ஓரத்தில் நடத்தினால் மாத்திரமே தலைவராக இருப்பார். இல்லாது போனால் அலைவரும் வரை மாத்திரமே! எனப் பேசிக்கொள்கின்றார்கள்.
தலைவர் அஸ்ரஃப்பின் மரணத்தின் பின்னர் ஆரவாரமில்லாமலும் அடைக்கப்பட்ட சுவர்களுக்குள்ளும் காலம் தாழ்த்தியாவது சில சித்துவிளையாடல்களுக்காக மாத்திரம் கூடிக் கலைந்த முஸ்லிம் காங்கிரஸ்காரவர்களால் சிலாகிக்கப்பட்ட பேராளர் மகாநாடு இம்முறை மக்கள் மன்றில் நியாயங்களுக்கான பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியதாயிற்று.
பேராளரும் – மகாநாடும்
யார் பேராளர்கள் ? என்பது முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருக்கோ யாப்புக்கோ இப்போது தெரியாது அண்மையில் கட்சியின் மூத்த போராளியிடம் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் கேட்டாராம் கண்டிப் பேராளர் மகாநாட்டுக்கு நீங்கள் வரவில்லையா? அதற்கு போராளி சொன்னாராம் அழைப்பில்லை என்றாராம். யார் யாருக்கு பேராளர்கள் ? உயர்பீட உறுப்பினர்களின் பாராளுமன்ற மாகாண சபை பிரதேச சபை உறுப்பினர்களின் சொந்தங்களும் பந்தங்களுமே ! அவர்களே மாகாநாடுகளை அலங்கரிக்கின்றார்கள். கட்சிக்காரன் எங்கே?
பதவிகளும் – மகாநாடும்
கைமாறிப் போன தலைமைத்தவத்தோடு சேர்த்து முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பதவிகளான தேசிய அமைப்பாளர் பொருளாளர் போன்ற பதவிகளும் கிழக்குக்கு வெளியே முகாமிடப்பட்டுள்ளது. முக்கியமான அப்பதவிகள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைப் பார்வையாளர்களாக்கி தலைவரின் விசுவாசம் எனும் பேரில் நடக்கும் மக்கள் செல்வாக்கில்லாதவர்களைக் கொண்ட பதவிக் கட்டமைப்புக்களால் தலைவரின் சர்வதிகார தொனிகள் ஓங்கி ஒலித்து பல சித்து விளையாட்டுக்களை கிழக்கு மக்களுக்கு காண்பிக்கும் கலாச்சாரத்தை தோற்றுவித்திருக்கிறது. ஆகவே அப்பதவிகளும் பறித்தெடுக்கப்பட்ட தவிசாளர் பதவியும் பறிக்கப்போகின்ற அதிகாரமற்ற செயலாளர் நாயகம் பதவியும் 27வது பேராளர் மகாநாட்டில் கிழக்குத்தலைமைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் இப்போது 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் அட்டாளைச்சேனைக்கு கிடைக்கவுள்ள தேசியப்படடியல் உறுப்பினரையும் சேர்த்தால் 06 பேர் 07 மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏன் பதவிகள் வழங்கக் கூடாது. அவர்களால் ஏன் கட்சியை வளர்க்க முடியாது. நேற்று தேசிய காங்கிரஸில் இருந்து வந்தவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் என்றால் இந்த கட்சியின் கட்டுக்கோப்பில் உள்ள கட்டமைப்பினை சிறு பிள்ளையும் விளங்கிக்கொள்ளும் அல்லவா?
செயலாளரும் – மாநாடும்
அதிகாரக்குறைப்பின் காரணமாக தான் ஏமாற்றப்பட்டேன் என சொல்லி அழ வெட்க்கங்கெட்டுப்போன செயலாளராகவே ஹசனலி மக்களால் பார்க்கப்படுகிறார். தலைவர் அஸ்ரஃப்பின் மரணத்தின் பின்னர் உரிமையுள்ள செயலாளராகவே கருதப்பட்டவர் அவர் தனது அதிகாரங்களை அவ்வப்போது தலைவரிடம் அடகு வைத்தாரா? அதிகாரப் பதவிகளை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க தலைவரை பாதுகாத்தாரா? இல்லை கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தனித்துவ இயக்கத்தை தென்னிலங்கைச் சமூகத்திற்கு யாப்புக்களை திருத்தித் திருத்தி கொடுத்து அழகு பார்த்தாரா? என்பது இப்போது வெளிப்பட்டே ஆக வேண்டும்.
யாப்புக்களை திருத்தி ஏப்பமிட கொடுத்தவர்களின் முகத்திலேயே ஏப்பமிட தலைவர் துணிந்து விட்டார் அதன் ஒரு செயற்ப்பாடுதான் எதிர்வரும் பேராளர் மகாநாட்டில் செயலாளர் என்ற பதவியை நீக்குவது இல்லாது போனால் அதிகாரமற்ற செயலாளராக இன்னுமொரு தலைவரின் செல்லப்பிள்ளையை கூலிக்கு அமர்த்த தலைமை திட்டங்களை தீட்டி வருகிறது. அது நடக்கவே கூடாது.
தவிசாளரும் – முடிச்சுக்களும்
தமிழ் சமூக அரசியலுக்குள்ளிருந்து 1998ம் ஆண்டு தலைவர் அஸ்ரஃப்பினால் முஸ்லிம் தனித்துவ இயக்கத்துக்கு தத்தெடுக்கப்பட்ட தவிசாளர் பஸீர் சேகுதாவுத் இன்று நொந்து நுாலாகி கசங்கி கலங்கி நிற்கின்றார். முஸ்லிம் தேசத்தின் அரசியல் வரலாற்றில் 1994 – 2017 வரை நடைபெற்ற சுத்துமத்துக்களுக்கு துணைபோய் நாம் முஸ்லிம் சமூகத்தின் துரோக அரசியல் பட்டியலுக்குள் வந்து விட்டோமா? எனச் சிந்திக்கிறார். மர்ஹீம் தலைவர் அஸ்ரஃப்பின் கனவிலும் கொள்கைகளிலும் மக்களின் அங்கிகாரத்துக்கும் தான் சதி செய்து விட்டேனா? என கலங்கி மௌனித்து நிற்கிறார். இறைவன் சொல்வது போல் எனக்கு மாறு செய்தால் என்னிடம் மன்னிப்புக்கேள்! நீ உன்னைப்போல் மனிதனை உலகில் ஏமாற்றினால் அவனிடமே மன்னிப்பு கேட்க வேண்டும் அவன் மன்னிக்கவில்லை என்றாலும் அவனிடமே கேட்டுக்கொள்! அதனை அவனே மன்னிக்க வேண்டும். என்ற சொற்றொடர்கள் இப்போது பஸீர் சேகுதாவுத்தை உலுக்கிக்கொண்டிருக்கின்றது.
இவைகள் பஸீரின் அண்மைய ஆன்மிக ஈடுபட்டால் அவருக்கு வெளிச்சிருக்கலாம் தவிசாளர் பஸீர் சேகு தாவுத் மக்கள் மன்றில் பொது மேடையில் வைத்து தன்னை கழுவிக்கொள்ளப்போகின்றார். ஆகவே தன்னை பிரதிநிதித்துவ அரசியல் செயற்ப்பாட்டிலிருந்து விலக்கி பிராயச்சித்தமாக முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்தை நேர்வழிப்படுத்தி கட்சியை உரிமையுள்ள போராளிகளிடம் தத்துக்கொடுக்கப்போகின்றேன் என்கிறார். அது தவறிப்போனால் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியலை கொள்கைகளுடன் கூடிய மக்கள் கூட்டத்துள் ஓர் அரசியல் கூட்டமைப்பை ஏற்ப்படுத்தி அழகு பார்க்கப் போகின்றார்.
மர்மங்களாகவே இருக்கும் பல முடிச்சுக்களை அவிழ்த்து மக்கள் மன்றில் முஸ்லிம் அரசியலைப்பறைசாட்டி அவர் அவரை கழுவிக்கொள்ளப்போகிறார் அதிலிருந்து தொடர்ந்து எவர் எவர் கழுவித்துடைக்க வேண்டி வருமோ? தெரியவில்லை.
பேராளர் மகாநாடும் – திருந்தங்களும்
கண்டி அம்பாறை மடடக்களப்பு திருகோணாமலை போன்ற மாவட்ட முஸ்லிம்களில் சிலரினால் மாத்திரம் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்காங்கிரஸ் என்ற இயக்கத்திற்கு 90 அதிஉயர் பீட உறுப்பினர்கள் எதற்கு? 2.5 கோடி மக்கள் வாழும் இலங்கையை ஆளும் பாராளுமன்றத்திற்கே 225 உறுப்பினர்கள் எனும் போது 6 லட்சம் முஸ்லிம்கள் வாழும் வடகிழக்கில் 150 000 அதிகமில்லாத மக்கள் செல்வாக்கை மாத்திரம் தக்க வைத்துள்ள முஸ்லிம் காங்கிஸிற்கு ஏகப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபை எதற்கு இச்சபையில் ஓர் கலாநிதி உள்ளாரா? சமூக அரசியல் திட்டங்களை செயற்ப்படுத்தும் ஓர் அரசியல் விமர்சகன் உள்ளாரா? எவருமே இல்லை எல்லோருமே தேர்தல் கேட்டு தோற்றுப்போனவர்களும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சிறு பிள்ளை ஆட்டம் ஆடும் ஆட்டக்காரர்களுமே உள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் 50 பேரைக் கொண்டு மட்டுப்படுத்தப்பட வேண்டும் அதி உயர்பீடம் 23 பேர் பதவி வழியாக வரும் உறுப்பினர்களைக் கொண்டு செம்மைப்படுத்தப்பட வேண்டும். இதனை விட்டு விட்டு கட்சி விட்டு கட்சி பாய்பவன் தேர்தலில் தோற்றுப் போனவர்கள் ஓர் பிரதேச சபைத்தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் மேடைகளில் இருந்து உயர்பீட உறுப்பினர் தலைவர்கள் என்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்.
27வது இப்பேராளர் மகாநாடாவது வடகிழக்கு முஸ்லிம் சமூக அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் கோசங்களாக வைத்து கிழக்கு முஸ்லிம் தலைமைகளிடம் அதிகாரப்பகிர்வை மேற்க்கொள்ளும் யாப்பினுாடாக கிழக்கு முஸ்லிம்களை பதவிகளைக் கொடுத்து அவர்களையும் அங்கீகரித்து துாரத்தே நின்று பார்வையாளர்களாக மாற்றப்பட்ட கட்சி போராளிகளை உள்ளீர்த்து பதவிச்சண்டையில் திளைத்து மக்களை மக்களால் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வுகளை அவர்களுக்கு ஊட்டிவிடாது காலச் சூழலில் அரசியல் அமைப்பு மாற்றம் வடகிழக்கு இணைப்பு – பிரிப்பு போன்ற முஸ்லிம் சமூக அரசியல் உரிமைகள் வெறிதாக்கப்படும் சந்தர்ப்பத்தில் பார்வையாளராக இல்லாது சமூக சிந்தனைகளை சுமக்கும் அரசறிவாளன் பேராசன் கல்விமான்களைக் கொண்ட சபையாக முஸ்லிம் காங்கிரஸை மாற்றி சபை என்பதற்கும் உள்ளவர்களின் கனதியையும் கொண்டு மக்கள் அளவிடும் உயர்சபையாக மாற்றி விட இப்பேராளர் மகாநாடு கிழக்கு பேராளர்களுக்கு வழி விட வேண்டும்.