ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளையினால் கடந்த 14.02.2014 அன்று தங்களது மர்கஸில் ஜூம்ஆ கடமையினை நடாத்திய போது, ஜூம்ஆவை நிறுத்தக் கோரி எமது மர்கஸ் கடுமையாக தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன், ஆவணங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இக்காடைத் தனத்தை கண்டித்து வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. அவரவருக்கு தான் விரும்பும் கொள்கையினை பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு, அதனை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற நீதிமன்ற உத்தரவு ஏலவே வழங்கப்பட்டு, வாடகை இடத்தில் ஆரம்பித்த ஜூம்ஆ கடமையானது தற்போது சொந்தக் கட்டடத்தில் தொடராக நடாத்தப்பட்டும் வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
ஜூம்ஆவை தடுக்கும் விதமாய் திரண்டவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான நஷ்ட ஈட்டைப் பெறும் வழக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வந்தது. அதன் இறுதி முடிவாக தாக்குதல் தொடுத்தவர்கள் நஷ்ட ஈட்டுத் தொகையாக 250000.00 ரூபாயினை செலுத்த வேண்டும் என எதிர் தரப்புக்கு நீதவான் கட்டளையிட்டார். அதற்கமைவாக சென்ற 09.02.2017 அன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து எதிர் தரப்பினர் 250000.00 ரூபாயில் 200000.00 ரூபாயினை நஷ்ட ஈட்டுத் தொகையாக செலுத்தியதோடு, மீதித் தொகையினை அடுத்த தவணையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாது காடைத்தனத்தால் எதிர் கொள்ள நினைக்கும் அனைத்து தரப்பினரும் இதிலிருந்து பாடம் படித்து தங்களை திருத்திக் கொள்ள முனைவதோடு, பிரச்சார உரிமை என்பது இந்நாட்டு அரசியல் யாப்பு தந்துள்ள அடிப்படை உரிமை என்பதையும் கருத்தில் எடுப்பதுடன், அடிதடி கலாச்சாரம் என்பது ஒரு கருத்தை இன்னும் இன்னும் வளர்ப்பதற்கே துணை புரியும் என்பதையும் எப்போதும் மனதில் இருத்தி செயற்படல் வேண்டும் என்பதனையும் இங்கு குறிப்பிடுவதுடன், சத்தியம் ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டாலும் இறுதி முடிவு வெற்றியாகவே அமையும் என்பதையும் நாம் உணர்வதுடன், இவ்வெற்றிக்கு முழுவதும் துணை நின்ற வல்லவன் அல்லாஹ்வை பெருமை படுத்தவும் செய்வோமாக!