எமது பாடசாலையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல கற்பித்தல் செயற்பாடு கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இவற்றில் ஆங்கில மொழி மூல கற்றல் செயற்பாடுகளுக்கென மட்டுப்படுத்தப்பட்ட வளத்தினை எமது பாடசாலை கொண்டதன் காரணத்தினால் குறிப்பிட்ட மாணவர் தொகையினையே அனுமதித்து வருகின்றோம்.
அதனடிப்படையில் இவ்வருடம் தரம்-06 இற்கு ஆங்கில மொழி மூலம் எமது பாடசாலையில் 40 மாணவர்களை அனுமதிக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையொன்றினை நடத்தினோம். அப்பரீட்சைக்கு அதிகப்படியான மாணவர்கள் தோற்றியிருந்தனர். இருந்த போதிலும் எமது பாடசாலை நிருவாகத்தின் தீர்மானத்திற்கமைவாக வெட்டுப் புள்ளியொன்றினை நிர்ணயித்து அதற்கேற்றால்போல் மாணவர்களை அனுமதித்தோம்.
குறிப்பிட்ட இப்பரீட்சைக்கு எமது பிரதேசத்தில் உள்ள ஏனைய சில பாடசாலை மாணவர்களும் தோற்றியிருந்தனர். அம்மாணவர்களை பரீட்சைக்கு அனுமதிக்கும் போது எமது நிபந்தனைகளையும் குறிப்பிட்டிருந்தோம். அதற்கமைவாக எமது நிருவாகத்தின் நிபந்தனைகளை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்வதாக மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் உடன்பட்டிருந்தனர்.
நடத்தப்பட்ட இத்தெரிவுப் பரீட்சையில் அதிகப்படியான எமது பாடசாலை மாணவர்கள் முற்றுமுழுதான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்கமைவாகவும் எமது பாடசாலையின் மாணவர்களை ஆங்கில மொழி கற்பித்தல் செயற்பாட்டுக்கு முதன்மைப்படுத்தும் செயற் திட்டத்திற்கமைவாகவும் நாம் மாணவர்களை அனுமதித்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பித்தோம்.
மாணவர்களை புதிதாக ஆங்கில மொழித்துறை வகுப்புகளுக்கு தெரிவு செய்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றபோது பெற்றோர்கள் வருவதும் எமது பிள்ளைகளை இணைத்துக் கொள்ளுமாறு கோருவதும் வழக்கமான செயற்பாடுகளாக அமைகின்றன. இந்த வரிசையிலேயே இச்செய்தியில் குறிப்பிடப்பட்ட எம்.எஸ்.நதீஸ் அஹமட் என்னும் மாணவனின் செயற்பாடும் அமைகின்றன.
இம்மாணவர் எமது பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர் அல்ல. இவர் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவராவார். இம்மாணவரை பரீட்சைக்குத் தோற்றச் செய்யும் வகையில் அவரது பெற்றோர் நிபந்தனையின் அடிப்படையிலேயே செயற்பட்டனர். எமது நிருவாகம் எடுக்கின்ற தீர்மானத்தினை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி வழங்கி பெற்றார் பின்பு வாக்குறதியினை நிறைவேற்றாமல் செயற்பட்டதே இப்பிரச்சினைக்கு மூல காரணம் எனலாம்.
குறிப்பிட்ட இம்மாணவர் இதுவரை எமது பாடசாலயில் அனுமதி பெறவில்லை. எமது பாடசாலையில் அனுமதி பெறாத ஒருவரை முறையாக நாம் எமது பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாது. அதுதான் யதார்தமும் கூட. நாம் நிர்ணயித்த வெட்டுப்புள்ளிக்கு மேல் அந்த மாணவர் புள்ளிகளை பெற்றிருந்தாலும் எமது பாடசாலையின் சட்ட திட்டங்களுக்கு உட்படாத காரணத்தினாலேயே அவரை நாம் அனுமதிக்கவில்லை. அம்மாணவர் எமது பாடசாலையில் முiறாக அனுமதி பெறும் வகையில் நாம் அவரை ஆங்கில மொழி மூல கற்றல் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க தயாரகவுள்ளோம். இவ்விடயம் பெரிது படுத்துவதற்கான ஒரு விடயமே அல்ல. இதனை பூதாகரமாக்கும் வகையில் சில விஷமிகள் இன்று வரை செயற்பட்டு வருவதை நாம் அறிகின்றோம். இவர்களின் நாசகாரச் செயற்பாடுகளுக்கு நாம் தலைசாய்க்க தயாராகவும் இல்லை.
பாடசாiலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நாம் தக்க நடவடிக்கையினை மேற்கொள்ள தயாரகவுள்ளோம். பாடசாலையின் பெயர் சர்வதேசம் வரைச் செல்ல வேண்டும். இங்கு கற்கின்ற மாணவர்கள் துறைசார்ந்த விற்பன்னர்கiளாக திகழ வேண்டும், மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும், பாடசாலை உயர் ஸ்தானத்தினை அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்கிலேயே செயற்படுகின்றோம். அதனடிப்படையில் மேற்குறித்த மாணவர் எமது பாடசாலைக்கு முறையாக அனுமதி பெற்றால் நாம் அவரை உடனடியாக ஆங்கில மொழி மூல கற்றல் நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க தயாராக இருக்கின்றோம்.
பாடசாலைக்கு அனுமதி பெறாமல் இன்னுமொரு பாடசாலையில் கற்று வருகின்ற மாணவரை நாம் வலுக்கட்டாயமாக பிடித்து வந்து எமது பாடசாலையில் உள்ள ஆங்கில மொழி மூலக் கற்றல் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கச் செய்வது பாரதூரமான குற்றமாகும் என்பதை இவ்விடயத்தினை ஊதிப் பெரிது படுத்தும் தரப்பினர் நன்கு புரிந்து கொண்டு தமது நாசகாரச் செயல்களை மேற்கொள்ளலாம்.