இன்றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று விஷேட அதியுயர்பீட கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.
கடந்த வாரம் கட்சியின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூதை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதனால், அடுத்த தவிசாளராக யாரை நியமிக்கப்போகின்றார்கள் என்ற பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதியுயர்பீட கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கட்சியின் தலைவராக ஏகமனதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனய அனைத்து பதவிகளும் மாற்றம் இன்றி தெரிவு இடம்பெற்றது.
அத்துடன் வெற்றிடமாக உள்ள கட்சியின் தவிசாளர் பதவிக்கு ஹசன் அலியை நியமிக்குமாறு தலைவர் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி மறுப்புத் தெரிவித்தார். இதனால் அப்பதவி இன்னமும் வெற்றிடமாகக் காணப்படுகிறது. என்றாலும் ஹசன் அலியிடம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கடந்தமுறை யாப்பு திருத்தத்தின் மூலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவியானது ஒரே நபரின் தலைமையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதர் சேர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அதியுயர்பீட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று நடைபெறும் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும், அதன் பின்னர் அவை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.