ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிளவினின்றும் காப்பாற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் சமாதான முயற்சியொன்றினை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உலமாக்கள் திட்டமிட்டுள்ளனர்.
கட்சியின்பொதுச் செயலாளர் பதவியை இழந்துள்ள எம்.ரி.ஹசன் அலி தற்போது உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இம்முயற்சிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொருளாளரும் உயர்பீட உலமாவுமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். கலீல் (மதனி) அஷ்ஷெய்க் எச்.எம்.எம்.இல்யாஸ் உட்பட உலமாக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.கலீல் (மதனி கருத்து வெளியிடுகையில்; "சமூகத்தில் இருவர் தொடர்ந்தும் முரண்பாடுகளுடன் கோபித்துக் கொண்டு இருக்க முடியாது அரசியல் கட்சியும் சமூகத்தில் ஓர் அங்கமே. கருத்துவேறுபாடுகளால்முரண்பட்டுக் கொண்டிருக்கும் இருவரை சமாதானப்படுத்துவது உலமாக்களின் கடமையாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் தனித்துவமான பெரிய கட்சியாகும். கட்சி சில முரண்பாடுகளினால் பிளவுபட முடியாது.
அதனைக் காப்பாற்றுவது எமது கடமையாகும். எமது முயற்சி வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையுண்டு என்றார். அஷ்ஷெய்க் எச்.எம்.எம். இல்யாஸும் இதே கருத்தினையே தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் உயர்பீட உலமாக்களான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். கலீல், அஷ்ஷெய்க் எச்.எம்.எம்.இல்யாஸ், அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர் ஏற்கனவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு கடிதமொன்றின் மூலம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடிதத்தில் "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தச் சந்தர்ப்பத்திலும் சிரேஷ்ட உறுப்பினர்களைப் பின்தள்ளி புதியவர்களை முன்னிலைப்படுத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
ஏனென்றால் இது முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவே அமைந்துவிடுகிறது.கட்சிக்காக ஆரம்பம் முதல் பல அர்ப்பணிப்புகளைச் செய்த சிரேஷ்ட உறுப்பினர்கள் எல்லா நிலைமைகளிலும் கௌரவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.