ஐ. எஸ். தீவிரவாதிகள் தொடர்ப்புபட்ட பேச்சுக்களின் போது, இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் பிரயோகம் தவிர்க்கப்பட வேண்டும் என துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்துகான் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று வியாழக்கிழமை தலைநகர் அங்காராவில் வைத்து ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த, துருக்கி ஜனாதிபதி அர்தூகான் இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் பிரயோகம் அனைத்துலக முஸ்லிம்களையும் கவலைக் கொள்ள செய்துள்ளது, இது முற்றிலும் தவறானதாகும், இஸ்லாம் சமாதானத்தையே வலியுறுத்துகிறது, பயங்கரவாதத்தையோ, தீவிரவாதத்தையோ முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.
குறித்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராணுவ, பொருளாதார, வர்த்தக உறவுகள், அதே போல் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ மட்டத்திலும் நிலவும் அரசியல் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.