தவிசாளர் பதவியைப் பெறுப்பேற்க வேண்டுமென அழுத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதை நான் விரும்பாமையினால் தான் இடைநடுவில் வெளிநடப்புச் செய்தேன் என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக்கூட்டம் சுமூகமாகத்தான் இடம்பெற்றதாக மு.கா விடுத்துள்ள அறிக்கை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் வெளியேறிய பிற்பாடு கூட்டம் முடிந்தது என்று கேள்விப்பட்டேன். பின்னர், தலைவர் எனது வீட்டுக்கு வந்தும் தவிசாளர் பதவியை ஏற்குமாறு கேட்டார்.
அன்றைய முழுநாளும் வெவ்வேறு தரப்பினரிடமிருந்தும் எனக்கு அழுத்தங்கள் வந்தன. நான் ஏற்கெனவே வகித்த செயலாளர் பதவிக்கு நான் தகுதியில்லையென்று ,கட்சி தீர்மானம் செய்திருக்கும் போது, இன்னுமொரு பதவியை நான் எவ்வாறு ஏற்க முடியும்? ஆனால், நான் கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று கூறிவிட்டுத்தான் வெளிநடப்புச் செய்தேன்.
பேராளர் மாநாட்டுக்கான அழைப்பிதழ் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் இதுவரையில் அது எனக்குக் கிடைக்கவில்லை” என்றார். தயவு செய்து தலைவரும் ஏனையவரும் பொய்களை கூற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.