இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட தம்புள்ளை வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .
தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வர்த்தகர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன் இந்த சந்தர்ப்பங்களின் போது பொலிசார் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக கவலை தெரிவித்தனர்.
அமைச்சர் இங்கு கூறியதாவது இந்த நாட்டிலே எவருக்கும் எந்த இடத்திலும் வாழ முடியும்.
எங்கும் தொழில் செய்யும் உரிமையுமுண்டு. இனவாதிகள் முஸ்லிம் கடைகளை மட்டும் அடையாளப்படுத்தி வெளியேறுமாறு கோருவது அப்பட்டமான அராஜகமானதாகும்.
என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் இந்த பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களுடன் முரண்படாதீர்கள். இனவாதிகளும் இதனையே எதிர்பார்க்கின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரச உயர் மட்டத்துடன் பேச்சு நடத்துவேன். வர்த்தகர்களாகிய நீங்கள் சிங்கள வர்த்தகர்களுடன் இணைந்து மக்கள் சார்ந்த சில திட்டங்களை முன்னெடுப்பது அந்தப்பிரதேச உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.