Top News

நமது தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் ஆற்றவேண்டிய பங்கு



றவூப் செய்ன்

இலங்கை 69 ஆவது சுதந்­திர தினத்தை கொண்­டாடவிழையும் இத்­த­ரு­ணத்தில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்புவதில் பாரிய பல சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. இந்தக் கள யதார்த்தத்தை நாம் மறு­த­லிக்க முடி­யா­வி­டினும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்­டிய கடப்­பாடு நமக்­குள்­ளது. இன்று பெரும்பான்மை சமூ­கத்­தி­லுள்ள ஒரு சிலர் முஸ்லிம் சமூ­கத்தை நோக்கி பல குற்றச்சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

இணை­யங்கள், பத்­தி­ரி­கைகள், இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள், சமூக ஊடக வலைப் பின்­னல்கள் மூலம் இக்­குற்றச்சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­வதை அவ­தா­னிக்­கலாம். அவற்றைப் பின்­வரு மாறு தொகுத்துக் கூறலாம். 
1. முஸ்லிம் சனத்­தொகை வேக­மாக உயர்­கி­றது. 
2. பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கின்­றது. 
3. திட்­ட­மிட்ட முஸ்லிம் குடி­யேற்­றங்கள் நடை­பெ­று­கின்­றன. 
4. இன அடிப்­ப­டை­யி­லான அர­சி­யலை மேற்­கொள்­கின்­றனர்.
5. தாய் நாட்டுப்பற்று அற்­ற­வர்கள். 
6. தமது வணிக நிறு­வ­னங்­களால் சிங்­க­ள­வர்­களை ஏமாற்றுகின்­றனர். 
7. பௌத்த கலாச்­சா­ரத்­திற்கு இடை­யூறு செய்­கின்­றனர். 

இங்கு இக்­குற்­றச்­சாட்­டுக்­களை நாம் மிகுந்த நிதா­னத்­து­டனும் புத்­தி­சா­துர்­யத்­து­டனும் அணுக வேண்­டி­யுள்­ளது. இது போன்ற குற்­றச்­சாட்­டுகள் எழு­வ­தற்­கான உள்­ளக நிலை­மைகள் முஸ்லிம் சமூ­கத்தில் காணப்­ப­டு­கின்­ற­னவா என்­பது குறித்தும்  நாம் சிந்­திக்க வேண்டும். ஏனெனில், நாம்  பெரும்­பான்மை பௌத்த நாடொன்றில் சிறு­பான்­மை­யாக வாழ்­கின்றோம்.

இது போன்­ற­தொரு நாட்டில் எமது இஸ்­லா­மிய தனித்­துவ வாழ்வை நுணுக்­க­மாக ஒழுங்­கு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இந்த ஒழுங்­கு­ப­டுத்­தலில் நாம் கடந்த காலங்­களில் விட்ட பல தவ­று­களும் இக்­குற்றச்சாட்­டுக்குப் பின்­பு­ல­மாக இருக்­கலாம். 
உள்­ளக நிலை­மை­களை ஒழுங்­கு­ப­டுத்தல்
எமது உள்­ளக வாழ்வை ஒழுங்­கு­ப­டுத்தல் முதன்­மை­யான கவனம் பெற­வேண்­டிய காலத்தில் நாம் வாழ்­கின்றோம். இது குறித்து அதா­வது, தற்­போ­தைய இலங்­கையின் சூழ்­நி­லை­களைக் கவ­னத்திற் கொண்டு நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய சில விடயங்களை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும். 

 பள்­ளி­வாசல் நிர்­மாணம் குறித்து ஒரு தெளி­வான கொள்கை நிலைப்­பாட்டை எடுப்­பது உள்­ளக ஒழுங்­கு­ப­டுத்­தலில் முக்­கி­யமானது. தவிர்க்க முடி­யாத தேவை கருதி பள்­ளி­வா­சல்­களை நிர்­மாணிக்கும்­போது பௌத்த மத ஆல­யங்­க­ளுக்கு மிகச் சமீ­ப­மாக நிர்மாணிக்­கப்­பட்­டுள்­ளதா? என்­பதைக் கவ­னத்தில் கொள்ளல் அவ­சியம். 

மத ஆல­யங்­களை நிறு­வு­வது தொடர்­பான சட்­டமும் அர­சாங்­கத்தில் அதைப் பதிவு செய்­வ­தற்­கான ஒழுங்கும் உள்­ளது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கணிப்பீட்டின்படி, மொத்­த­மாக இலங்­கையில் 2500 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அதில் 500 பள்­ளி­வா­சல்கள் இது­வரை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. பள்ளிவாசல்­களைப் பதிவு செய்­வதில் நாம் எவ்­வ­ளவு அசி­ரத்­தை­யாக உள்ளோம் என்­ப­தற்கு இது ஒரு சிறந்த உதா­ரணம். சில­வேளை பதிவு செய்­யப்­ப­டாத பள்­ளி­வா­சல்கள் குறித்து இன­வா­திகள் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ளத் தலைப்­பட்டால் நாம் மிகுந்த அசௌ­க­ரி­யங்­களுக்குள்­ளா­கலாம். 

எமது சமய அனுஷ்­டா­னங்கள், கட­மை­களை மேற்­கொள்ளும்போது ஏனைய மதத்­தி­னரின் வழி­பா­டு­க­ளுக்கு தொந்­த­ர­வில்­லாத வகையில் நாம் நடந்து கொள்ளக் கட­மைப்­பட்­டுள்ளோம். 

பள்­ளி­வாசல் பயான்­க­ளுக்­கா­கவும் தொழு­கை­க­ளுக்­கா­கவும் ஒலி­பெ­ருக்­கி­களைப் பயன்­ப­டுத்­தும்­போது அதற்­கான நேரம், சத்­தத்தின் அளவு  தொடர்­பான ஒழுங்கு விதி­களைப் பின்­பற்­று­வதும் அவ­சியம். அதான் சொல்­வதைப் பொறுத்­த­வரை ஒரு குறிப்­பிட்ட ஊரில் எல்லாப் பள்­ளி­க­ளிலும் ஒரே­நே­ரத்தில் அதான் சொல்லும் ஒழுங்கு முறை­யொன்றை வகுத்துக் கொள்ளல் அவ­சியம். ஏனெனில், ஒன்றன் பின் ஒன்­றாகப் பல நிமி­டங்கள் அதான் ஒலிப்­பது சூழ­வுள்ள பெரும்­பான்மை மக்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்­கலாம். அவர்­களின் வயிற்­றெ­ரிச்­சலைக் கிளப்­பலாம். 

உழ்­ஹியாக் காலங்­களில் மாடு­களை அறுக்கும் முன்­னரும் அறுத்த பின்­னரும் கையாள வேண்­டிய இஸ்­லா­மியப் பண்­பாடுகளைப் பேணு­வது அவ­சியம். ஏனெனில், சிலர் இவ்­வி­ட­யத்தில் நடந்­து­கொள்ளும் முறை பெரும்­பான்மை மக்­க­ளி­டையே பாரிய விமர்­ச­னங்­களை எழுப்­பி­யுள்­ளன. சுற்­றாடல், பாது­காப்பு, சுகா­தாரம் ஆகிய மூன்று அமைச்­சு­களின் சட்­டங்­க­ளோடு தொடர்­புற்­ற­தாக இவ்­வி­வ­காரம் அமைந்­துள்­ளதை நாம் மனங்­கொள்ள வேண்டும். தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பக் கட­மைப்­பட்­டுள்ள நாம் அந்த தேசத்தின் சட்ட திட்­டங்­களை மதித்துச் செயற்­பட வேண்டும். 

இறைச்சிக் கடை­களை நடத்­து­கின்ற முஸ்­லிம்கள் மிகச் சரி­யாக வழி­காட்­டப்­பட வேண்டும். திறந்த நிலையில் அறுக்­கப்­பட்ட மாடு­களின் அவ­யவங்­களை இரத்தம் தோய்ந்த நிலையில் தொங்க விட்ட வண்ணம்  இறைச்சிக் கடைகள் காட்­சி­ய­ளிப்­பது பொருத்தமான­தல்ல. இலங்­கையின் பௌத்­தர்கள் உயிர் கொல்­லாமை குறித்துப் பேசும் இந்தக் கால­கட்­டத்தில்,  இந்­துக்கள் பசுவைத் தமது தெய்வமாக கருதும் நிலையில் இது எவ்­வி­தத்­திலும் ஆரோக்­கி­யமானதல்ல. எனவே, ஒரு மூடிய அமைப்பில் இறைச்சிக் கடை­களை நடத்­தலாம்.

இத்­த­கைய உள்­ளக ஒழுங்­கு­ப­டுத்­தல்கள் ஏராளம் உள்­ளன. உதா­ர­ணத்­திற்கே சிலதைக் குறிப்­பிட்டேன். அதே­வேளை, மேலே குறிப்­பிட்ட குற்­றச்­சாட்­டுகள் சில எவ்­வித ஆதா­ரமும் அற்­றவை, அதற்கு அறி­வு­பூர்­மாகப் பதி­ல­ளிக்கும் ஒரு குழு நம்­மி­டையே செயற்­ப­டவும் வேண்டும். கருத்துப் பரி­மாற்­றத்­திற்­கான களங்­க­ளையும் நாம் பயன்­ப­டுத்த வேண்டும்.

இவ்­வா­றான இன­வாத சிந்­த­னை­களும் கருத்­துக்­களும் இலங்கையில் வளர்­வ­தற்கு ஒரு வகையில் நாமும் கார­ண­மாக இருக்கின் றோம். சுதந்­தி­ரத்­திற்குப் பிந்­திய இலங்­கையில் எம்மை நாம் ஒரு கொள்­கை­வாத உம்­மா­வாக அடை­யாளம் காட்­ட­வில்லை. ஓர் இனவாத சமூ­க­மா­கவே இனங்­காட்­டப்­பட்டு வந்­துள்ளோம். 

முஸ்­லிம்­க­ளுக்கு வர­லா­றில்லை. அவர்கள் வந்­தே­று­கு­டிகள். இலங்­கையின் தேசிய நலன்­களில் அவர்­க­ளுக்கு அக்­க­றை­யில்லை என்ற இந்தப் பிர­சா­ரத்தை ஒட்­டு­மொத்த சிங்­கள சமூ­கத்­தி­னதும் எதிர்க்குர­லாக நாம் பார்க்க வேண்­டி­ய­தில்லை. அதற்கு சரி­யான பதி­லி­றுப்பை (Response) நாம் வழங்­கி­யுள்­ளோமா என்­ப­தையே நோக்க வேண்டும்.
தேசிய சகோ­த­ரத்­துவம்
இது எமது தாய்­நாடு என்ற பற்­றோடு இந்த நாட்டின் அனைத்து வித­மான முன்­னேற்­றத்­திலும் நாம் கவனம்  குவிக்க வேண்டும். இது எமது முதற்­க­டமை. சம­கால சிந்­த­னை­யாளர் தாரிக் ரமழான் குறிப்­பி­டு­வது போன்று முஸ்­லி­மா­கவும் ஐரோப்­பி­ய­னா­கவும் இருக்க முடி­யு­மானால் நாம் ஏன் முஸ்­லி­மா­கவும் ஒரு நல்ல இலங்­கை­ய­ரா­கவும் இருக்க முடி­யாது? 

நீங்கள் வர­லாறு அற்­ற­வர்கள், சிங்­க­ளமும் பௌத்­தமும் கொண்­ட­வரே இந்­நாட்டின் பிரஜை என்று யாரோ குர­லற்ற சிலர் சொல்­வதை நாம் பொருட்­ப­டுத்தத் தேவை­யில்லை. நாம் அந்நியன் என்ற உணர்வு நமக்கு வந்­து­விட்டால் இந்­நாட்­டுடன் மிகச் சரி­யாக உற­வாட முடி­யாமல் போய்­விடும். தேசப்­பற்­றுள்­ள­வர்­க­ளாக முஸ்­லிம்கள் வாழ்­வதை இஸ்லாம் தடை­செய்­ய­வில்லை. சில­போது அது ஒரு அவ­சி­ய­மான கூறா­கவும் மாறி­வி­டு­கின்­றது. 

தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் எமது தேசிய சகோ­த­ரர்கள். அவர்­க­ளுடன் நீதி­யா­கவும் நேர்­மை­யா­கவும் பழ­கு­வதும் உற­வா­டு­வதும் கொடுக்கல் வாங்­கல்­களை வைத்துக் கொள்­வதும் அவ­சியம். அவர்­க­ளுக்கு நாம் உதவ வேண்டும். அவர்­க­ளது சுக துக்­கங்­களில் பங்­கு­கொள்ள வேண்டும். இது மார்க்கம் எம்மைப் பணிக்கும் கடமை. 
முஸ்லிம் அல்­லா­தோ­ருக்கு உப­காரம் செய்தல்
“அன்­தபர் ரூஹும் வதுக்­ஸிதூ இலைஹிம்...." எனும் குர்­ஆ­னிய வசனத் தொடர் வலி­யு­றுத்தும் ஆழ்ந்த கருத்து இது. பெற்­றோரைப் பரா­ம­ரித்தல், பாது­காத்தல் என்­ப­வற்­றுக்கே 'பிர்' எனும் சொற் றொடரைக் குர்ஆன் கையாள்­கின்­றது. முஸ்லிம் அல்­லாத, எம்­மோடு போர் புரி­யாத மக்­க­ளோடு உற­வாடும் போதும் அவர்­க­ளுக்கு உப­காரம் செய்­யு­மாறு கோரும் அல்­குர்ஆன், இதே சொற்­றொ­டரை இங்கு பயன்­ப­டுத்தி இருப்­பது இலங்கைச் சூழலில் ஆழ்ந்து நோக்­கத்­தக்­கது.  
 
ஸுரதுல் மும்­த­ஹி­னாவின் 8ஆம் வச­னத்தில் இடம்­பெறும் 'பிர்'  எனும் இச்­சொல்­லுக்கு இமாம் கறாபி (றஹி­ம­ஹுமுல்­லாஹு) அவர்கள் தரும் விளக்கம் எமது நாட்டைப் பொறுத்­த­வரை கவ­னத்திற் கொள்­ளத்­தக்­கது. 

முஸ்லிம் அல்­லா­தோ­ரி­டையே வாழும் ஏழை­களின் தேவையைப் பூர்த்தி செய்தல், பசித்­த­வர்­க­ளுக்கு உண­வ­ளித்தல், ஆடை யற்­ற­வர்­க­ளுக்கு ஆடை­ய­ளித்தல், அவர்­க­ளையும் அவர்­க­ளது சொத்­துக்­க­ளையும் பாது­காத்தல் என்­ப­தாக இமா­ம­வர்­க­ளது விளக்­க­வுரை அமைந்­துள்­ளது. ஸுன்னா­வி­லி­ருந்து தனது விளக்கவுரைக்­கான ஆதா­ரங்­க­ளையும் அவர் மேற்கோள் காட்­டி­யுள்ளார். 
ஒழுக்­க­சீர்­கே­டு­க­ளுக்கு எதிராக போராடல்
இலங்கைத் தேசத்தை இன்று குட்டிச் சுவ­ராக்கிக் கொண்­டிருக்கும் ஒழுக்கச் சீர்­கே­டு­களைக் களை­வ­திலும் ஒரு பண்­பாட்டு மறு மலர்ச்­சியைத் தோற்­று­விப்­ப­திலும் முஸ்­லிம்கள் பெரும் பங்­காற்ற முடியும். “நான் ஒழுக்கப் பண்­பா­டு­களைப் பூர்த்தி செய்­யவே அனுப்­பப்­பட்டேன்" என்ற இறைத் தூதரின் வாக்­கையும் வார்த்தையையும் நாம் உண்­மைப்­ப­டுத்த உழைக்க வேண்டும். 

ஏனெனில், அறமும் தார்­மீ­கமும் பண்­பாட்டுப் பெறு­மானங்களும் வேக­மாக வீழ்ந்து வரும் ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் வாழ்­வது ஒரு பாவ­மாகும். அவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு முஸ்லிம் போராட வேண்டும். நன்­மையை ஏவி, தீமையைத் தடுப்­பது முஸ்லிம் சமூ­கத்தின் அடிப்­படைக் கட­மை­யாகும். நன்­மை­யான காரி­யத்­திற்கு பரஸ்­பரம் உத­வி­யா­ள­ராக இருப்­பதும் பாவ­மான காரி­யங்­க­ளுக்கு ஒத்­து­ழைக்­காமல் இருப்­பதும் முஸ்­லிம்கள் மீது கட­மை­யாகும். இதில் சிறு­பான்மை, பெரும்­பான்மை எனும் வேறு­பாடு கிடை­யாது. 

இன்று இலங்­கையில் ஆபாசத் திரைப்­ப­டங்கள், பாலியல்  துஷ்­பி­ர­யோ­கங்கள், விர­சத்தைத் தூண்டும் ஆடைக் கலா­சாரம் என தீமைகள் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. இது முழு இலங்கைச் சமூ­கமும் எதிர்­கொள்ளும் பாரிய சவால் ஆகும். அரச நிறு­வ­னங்கள், அரச சார்­பற்ற அமைப்­புக்­க­ளோடு ஒருங்­கி­ணைந்து இத்­த­கைய சமூகத் தீமை­களைக் களை­வதில் முஸ்­லிம்கள் பங்­காற்ற முடியும். அதன் மூலம் ஒரு பண்­பாட்டுத் தலை­மையை (Moral Leadership) இந்த நாட்­டிற்கு வழங்க முடியும். இது ஒரு முக்­கிய பணி எனத் துணிந்து கூறலாம். 
இஸ்லாம் மனித இனத்தின் பிரச்­சி­னைக்­கான சரி­யான தீர்வு என நாம் உறு­தி­யாக நம்­பு­கின்றோம். எனினும், அது பற்­றி­ய­தொரு தவ­றான அபிப்­பி­ரா­யமே இந்­நாட்டில் நில­வு­கின்­றது.

சர்­வ­தேச ஏகா­தி­பத்­திய சக்­தி­களின் பயங்­கரப்  பிரச்­சா­ரத்தின் கார­ண­மாக இஸ்லாம் ஒரு தீவி­ர­வாதம் எனும் கருத்தே இன்று இலங்­கையில் பரவி வரு­கின்­றது. இன்று இலங்­கையில் 30இற்கு மேற்­பட்ட இணை­யங்கள் இஸ்­லாத்­திற்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக இயங்கி வரு­கின்­றன. இவ்­வா­றான சூழ­லிலும் இஸ்­லாமே தீர்வு எனும் கருத்தை நாம் முன்­னி­றுத்த வேண்­டி­யுள்­ளது. இது வெறும் கருத்­தாக அல்ல செயல் மாதி­ரிகள் மூலமே நிறு­வப்­பட வேண்­டி­யுள்­ளது. 
போதைப்­பொருளற்ற  இலங்­கையை உரு­வாக்கல்
போதைப் பொருள் பாவனை இந்த நாட்டைப் பீடித்­துள்ள இன்­னொரு சாபம். இதனை ஒழிப்­பதில் இஸ்லாம் பல நூற்­றாண்டுகளுக்கு முன்பே பாரிய வெற்­றியைக் கண்­டது. இதனை ஒழிக்க இஸ்லாம் முன்­வைக்கும் தீர்வு யாது என்­பதை இந்த நாட்­டிற்கும் அதி­கார வர்க்­கத்­திற்கும் நாம் எடுத்துச் சொல்ல முடியும். 

இஸ்­லா­மிய உலகின் புகழ்­பெற்ற மனோ­தத்­து­வ­வி­ய­லா­ள­ரான கலா­நிதி மாலிக் பத்ரி அவர்­க­ளது 'இஸ்­லாமும் போதைப் பொருள் பாவ­னையும்' எனும் பிர­ப­ல­மான நூல் இத்­து­றையில் எமக்கு ஒரு முன்­னோடி வழி­காட்­டி­யா­கவும் உறு­து­ணை­யா­கவும் இருக்க முடியும். 
இலங்­கையின் வீட்டு வன்­மு­றை­களில் (Domestic Violence)  80 வீதத்­திற்கு கார­ண­மாக இருப்­பதும் வீதி விபத்­திற்குப் பெரு­ம­ளவு பங்­க­ளிப்­பதும் போதை (Drug abuse) என்­பது ஆய்­வுகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. எனவே, அறி­வார்ந்த வழி­மு­றைகள் மூலம் போதைப் பொருள் பாவ­னையை ஒழிக்க முடி­யு­மென்றால் இலங்கைத் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் காத்­தி­ர­மான பங்­கினை ஆற்ற முடியும். 
துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்­கையில் போதைப்­பொ­ருட்­களைக் கடத்­து­வ­திலும் விநி­யோ­கிப்­ப­திலும் வியா­பாரம் செய்­வ­திலும் சில முஸ்­லிம்­களே முன்­னி­லையில் உள்­ளமை கவ­லைக்­கி­ட­மா­னது. 
வறு­மையை ஒழித்தல்
பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வும் அதனால் விளைந்த வறு­மையும் நவீன சமூ­கங்­களில் புரை­யோ­டிப்­போ­யுள்ள மற்­றொரு சமூகப் பிரச்­சி­னை­யாகும். இதற்கு ஸகாதும் வட்டி இல்லா வங்­கி­ய­மைப்பும் உதவ முடியும் என்­பதை முஸ்­லிம்கள் இந்த நாட்­டிற்கு எடுத்துக் காட்ட வேண்டும். இங்கு முஸ்­லிம்கள் ஸகாத்தின் தாற்­ப­ரி­யத்தை அதன் விரிந்த அர்த்­தத்தில் புரிந்­து­கொள்ள வேண்டும். 

பிச்­சைக்­கா­ர­னுக்கு ஹதிய்யா கொடுத்தல் என்ற அமைப்­பி­லேயே இன்று பெரும்­பா­லான முஸ்லிம் தன­வந்­தர்கள் ஸகாத் கட­மையை நிறை­வேற்­று­கின்­றனர். இலங்கைத் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்ப இந்த மனோ­நிலை தீர்­வாகப் போவ­தில்லை. மாறாக ஸகாத் எப்படி ஒரு விரிந்த வரு­மானப் பங்­கீ­டா­கவும் விஷே­ட­மாக வறு­மையை ஒழிப்­பதை நோக்­காகக் கொண்­டது என்­ப­தையும் கொள்கை ரீதி­யாக முஸ்­லிம்கள் முன்­னி­றுத்த வேண்டும். 

 வட்­டி­யில்லா வங்கி முறையை சில தனி­ந­பர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் மாத்­திரம் நடத்திச் செல்லும் ஒரு­வகைக் கூட்டு வியா பார­மா­கவே இப்­போது நாம் காட்டி வரு­கிறோம். அப்­ப­டி­யல்­லாது அது எவ்­வாறு நவீன நிதி நிறு­வ­ன­மாக நின்று பொரு­ளா­தார சமன்­பாட்டைக் காக்க பெரும் பணி புரிய முடியும் என்­பதை கொள்கை ரீதி­யா­கவும் செயல் ரீதி­யா­கவும் நிறுவ வேண்டும். 

ஐரோப்­பாவில் யூரோ வலய (Euro Zone) நாடுகள் உள்­ளிட்ட, உலகின் பல பிராந்­தி­யங்­க­ளிலும் வட்­டியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வங்­கியமைப்பின் தவிர்க்க முடி­யாத வீழ்ச்­சி­யையும் இஸ்­லா­மிய வங்­கி­களின் வெற்­றி­யையும் இவ்­வி­டத்தில் முன்னுதார­ண­மாகக் கொள்­ளுதல் பொருத்­த­மா­னது. 

அமை­தியும் ஸ்திரத்­தன்­மையும் கொண்ட ஒரு சமூ­கத்தை எவ்­வாறு ஆன்­மீக உல­கா­யத சமன்­பாட்டின் மூலம் உரு­வாக்க முடியும் என்­ப­தையும் இந்த நாட்டு மக்­க­ளுக்கு அழ­காகச் சொல்ல முடியும். இதற்­கென அழ­கான  இஸ்­லா­மியக் கிரா­மங்­களை நாம் திட்­ட­மிட்டு உரு­வாக்க வேண்டும். 

தலைமைக் கட்­டுப்­பாடு, ஆன்­மீக மேம்­பாடு, பொரு­ளா­தாரச் செழிப்பு, பண்­பாட்டு மேன்மை, உயர் வாழ்வு, கல்வி முன்­னேற்றம் என்­ப­வற்றைப் பிர­தி­ப­லிக்கும் இஸ்­லா­மியக் கிரா­மங்­களை நாம் திட்­ட­மிட்டு உரு­வாக்க வேண்டும். அது நம்மைச் சூழ­வுள்ள சிங்­கள, தமிழ் கிரா­மங்­க­ளுக்கு நல்ல முன்­னு­தா­ர­ணங்­க­ளாக இருக்க முடியும். அடி­மட்­டத்­தி­லி­ருந்து மேல் நோக்­கிய (From Bottom to Top) சமூக  மாற்­றத்­திற்­கான உந்­து­கோ­லாக இது அமைய முடியும். 
பொரு­ளா­தார சக வாழ்வை கட்­டி­யெ­ழுப்பல்
முஸ்லிம் அல்­லா­தோ­ருக்கு உதவும் பல்­வேறு வழி­மு­றை­களை இஸ்லாம் எமக்குக் காட்டித் தந்­துள்­ளது. அவற்றைக் கருத்தில் கொள்­வதன் மூலமும் இந்த நாட்டின் சிங்­கள, தமிழ் சகோ­த­ரர்­களின் மனங்­களை வெல்­லலாம். நல்­லதோர் புரிந்­து­ணர்­வையும் பரஸ்­பர நம்­பிக்­கை­யையும் கட்­டி­யெ­ழுப்­பலாம்.

ஸுரதுல் மும்­தஹ்­னாவின் 8ஆம் வசனம் மற்றும் 76ஆம் அத்­தி­யா­யத்தின் 28ஆம் வசனம் என்­ப­வற்றை ஆதா­ர­மாக வைத்து ஸத­காவை முஸ்லிம் அல்லாதோருக்கும் வழங்கலாம் என இஸ்­லா­மிய சட்ட அறி­ஞர்கள் கருதுகின்­றனர். 

அத்­தி­யாயம் 76 இன் 28 ஆம் வசனம் பின்­வ­ரு­மாறு அமைந்துள்­ளது. ''அவர்கள் உணவை விரும்­பி­ய­போதும் ஏழைக்கும் அனாதைக்கும் கைதிக்கும் அந்த உணவை வழங்­குங்கள்.'' இந்த வசனம் இறங்­கி­ய­போது மக்கா காலத்தில் முஸ்­லிம்கள் அல்­லாதோர் மட்­டுமே கைதி­க­ளாக இருந்­தனர் என ஹஸன் போன்றோர் உறுதி செய்­துள்­ளனர். 

காலித் பின் வலீத் ஈராக் பிர­தேச கிறிஸ்­த­வர்­க­ளுக்கு வழங்­கிய காப்­பு­றுதித் திட்­டமும் எமக்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருக்க முடியும்.(9) உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹி­ம­ஹுல்லாஹ்) பஸ­ராவின் அப்­போ­தைய கவர்னர் அதீஃ இப்னு அத்ரஃ அவர்­களை, முஸ்லிம் அல்­லா­தோ­ரி­டையே உள்ள வய­தான, சம்­பா­திக்க முடி­யா­த­வர்­களைத் தேடிக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளுக்கு தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கு­மாறு ேவண்­டி­னார்கள். 

ஸத­கதுல் பித்ர் போன்ற­வற்றை முஸ்லிம் அல்­லா­தோ­ருக்கும் வழங்­கலாம் எனும் கருத்தை இமாம் அபூ­ஹ­னிபா, இமாம் ஸுஹ்ரி, இமாம் முஹம்மத் போன்றோர் கொண்­டுள்­ள­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­கது. 

பக­ராவின்  271 ஆம் வசனம், நீங்கள் ஸத­காக்­களை பிற­ருக்குத் தெரியும் வண்ணம் கொடுத்தால் அது நல்­லது. அவற்றை மறைத்து ஏழை­க­ளுக்குக் கொடுத்தால் அதுவும் உங்­க­ளுக்கு நல்­லதே என வரு­கின்ற இவ்­வ­ச­னத்தில் குறிப்­பி­டப்­படும் ஸத­காக்­களில் ஸகாதுல் பித்ரும் உள்­ள­டங்­கு­வது போன்று ஏழை­களில் முஸ்லிம் அல்லாதோரும் அடங்­குவர் என மேற்­கு­றிப்­பிட்ட அறி­ஞர்கள் விளக்­க­மளித்துள்ளனர். எமது இலங்கைச் சூழலில் இக்கருத்தை நாம் கவனத்திற் கொள்ள முடியும்.
 சூழலியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணல்
இலங்கை உள்ளிட்டு இன்று உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் மற்றொரு சவாலே சுற்றாடல் நெருக்கடி (Ecological Crisis)  இது குறித்தும் இஸ்லாத்திற்கென்று தனியானதொரு பார்வையும் அதற்குரிய வழிகாட்டல்களும் உள்ளன. அவற்றைப் பிரயோகித்து இலங்கையில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு கொள்கைச் சட்டத்தை (Conceptual Frame)  வரைவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்கலாம். முஸ்லிம்கள் இதில் முன்மாதிரியாக இருந்தும் வழி காட்டலாம். 

நான் இங்கு பரிந்துரைக்கும் இவ்வழிமுறைகளை வெறும் கருத்தாக முன்வைக்காமல், இத்தகைய பண்பாடுகளைக் கொண்ட சமூகத்தை மிகச் சிறிய அமைப்பிலாவது நாம் உருவாக்கியும் காட்ட வேண்டும். 

முஸ்லிம்கள் வெறுமனே அரசியல் போராளிகளுமல்லர், அல்லது உரிமைகள், சலுகைகள் என்று அந்தப் போராட்டத்திலேயே மூழ்கி அழிகின்றவர்களுமல்லர். அவர்களுக்கென அழகானதொரு வாழ்வு முறை உள்ளது. அதனைத் தம்மால் இயன்றவரை அவர்கள் வாழும் நாடு, சூழல், இடம் என்பவற்றுக்கு ஏற்ப நடைமுறைப் படுத்திக் காட்டுவார்கள். அது அடுத்த சமூகங்களுக்குப் பயனுள்ளதாவே அமையும். அதில் தீவிரவாதமோ வன்முறையோ பயங்கரவாதமோ எதுவும் கிடையாது. மாறாக, அரும் பயனும் நல்ல விளைவுகளுமே இருக்கும் என்பதை இயன்றவரை நிறுவுவார்கள். 

இதுதான் சிறுபான்மை நாடொன்றில் ஷஹாதத்தை நிறைவேற்றல் என்பதன் தெளிவான அர்த்தம். அதாவது இந்த தாருஷ் ஷஹாதாவில் நாம் முற்றிலும் வேறுபட்ட ஒரு கொள்கைவாத உம்மா என்பதனை வெளிக்காட்டும் பிரத்தியட்சமான கருத்தாக அமைய முடியும். அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.
Previous Post Next Post