இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைக் குரலாக 2008 இலிருந்து வார இதழாக வெளிவந்த விடிவெள்ளி, வாசகர்களின் வேண்டுகோள்களை கருத்திற் கொண்டும் காலத்தின் தேவையை உணர்ந்தும் 16.02.2015 அன்று தினசரியாக பரிணாமம் பெற்றது.
அன்று முதல் கடந்த இரு வருட காலப் பகுதியில் 'விடிவெள்ளி தினசரி' அல்லாஹ்வின் உதவியோடும் வாசகர்களின் பலத்த ஆதரவோடும் தனது பணியை செவ்வனே முன்கொண்டு செல்கிறது. நாம் எதிர்பார்த்ததை விடவும் விடிவெள்ளிக்கு வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளமையும் தமிழ் மொழியில் வெளிவரும் ஏனைய தினசரிகளுக்கு சமாந்தரமாக பயணிக்க முடியுமாகவிருப்பதும் எமக்கு உற்சாகம் தருவதாகும்.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கென குரலெழுப்ப ஒரு தினசரி பத்திரிகை இல்லையே என்ற ஏக்கம் பல தசாப்த காலமாக நீடித்து வந்தது. அந்த ஏக்கத்தைப் போக்கி, இலங்கையில் மாத்திரமன்றி முழு முஸ்லிம் உலகிலும் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கின்ற, தொடராக வெளிவரும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் தினசரி எனும் மகத்தான பணியை விடிவெள்ளி மூலமாக எமக்குச் செய்ய முடிந்தமை பெரும் பாக்கியம் என்றே கருதுகிறோம்.
ஆனாலும் இந்தப் பணி சாதாரணமானதொன்றல்ல. மிகக் குறுகிய கால நேரத்தினுள், மட்டுப்படுத்தப்பட்ட மனித வளங்களைக் கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு தகவல்களைத் திரட்டி மிக நேர்த்தியாக தினமும் பத்திரிகை வடிவில் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு பின்னால் பாரிய மனித உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் உள்ளது. அதற்காக இப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் சகலரையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம்.
விடிவெள்ளி கடந்த 9 வருடங்களாக வார இதழ் மூலமும் இரு வருட காலமாக தினசரி மூலமும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல்,கல்வி,சமூக, சமய, கலாசார துறைகளில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் விழிப்பூட்டுவதிலும் அறிவூட்டுவதிலும் விடிவெள்ளி கணிசமான பங்கை ஆற்றி வருகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு கூறுகளாக பிரிந்து செயற்பட்டு வருகின்ற நிலையில், இதில் எந்தவொரு தரப்பின் பக்கமும் சாராது எப்போதும் உண்மையின் பக்கம் மாத்திரமே நின்று குரலெழுப்புவதே விடிவெள்ளியின் தனித்துவமும் சுயாதீனமும் பலமுமாகும். இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்திலும் இவ்வாறே விடிவெள்ளி தனது பயணத்தை தொடரும்.
இலங்கை முஸ்லிம்களுக்கான தினசரி பத்திரிகை இல்லையே என்ற குறையைப் போக்கி இரு வருடமாகிவிட்டது. இன்னமும் நமக்கான ஊடகங்கள் இல்லையே என்ற வெற்றுக் கோஷங்களை விட்டுவிட்டு நமக்காகவே வெளிவரும் பத்திரிகைகளை வளர்க்க பாடுபட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் முன்னுள்ள தலையாய கடமையாகும்.
கடந்த இரண்டு வருட காலத்தில் விடிவெ ள்ளி தினசரி பல்வேறு மாற்றங்களை தனக்குள் உட்புகுத்தியே வந்துள்ளது. செய்திகளுக்கு அப்பால் சிறப்புக் கட்டுரைகள், தொடர் கட்டுரைகள், வாராந்த சிறப்புப் பக்கங்கள், சிங்கள, ஆங்கில, அரபு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என பல்வேறு விடயதானங்களை பிரசுரித்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் வாசகர்களின் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யும் வகையில் விடிவெள்ளி தனது பயணத்தை தொடர திடசங்கற்பம் பூண்டுள்ளது.
அந்த வகையில் தொடர்ந்தும் வெற்றிகரமான முறையில், இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமானதும் சுயாதீனமானதுமான குரலாக விடிவெள்ளியை முன்கொண்டு செல்ல அனைவரும் கைகோர்த்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் நமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக!
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ இணையத்தளமான சிலோன் முஸ்லிம் இணையத்தளம் சார்பில் விடிவெள்ளி பத்திரிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்